அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்
புனித வேதாகமத்தின் வரலாறு (மே-ஜுன் 2014)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்
(1) பர்மிய மொழிபெயர்ப்பு
அதோனிராம் ஜட்சன் ரங்கூனி லிருந்து ஆவா எனுமிடத்திற்குச் சென்றார். 1824இல் அவரது மனைவியும் அங்கு வந்து சேர்ந்தாள். அச் சமயம் பர்மாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே யுத்தம் மூண்டதினால், வெளிநாட்டினர் அனைவரும் ஒற்றர்கள் என சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அதோனிராம் ஜட்சனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதோடு 11 மாதங்களாக புழுக்களும், பூச்சிகளும் நிறைந்த ஒரு சிறையில் சங்கிலிகளினால் கட்டப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்தார். அங்கு கொசுக்களும், பூச்சிகளும் அவரைக் கடித்துக்கொண்டிருந்தன. தரையும் ஈரமாகவும் துர் நாற்றம் வீசுவதாகவும் இருந்தது. சிறையில் துயரங்களை அனுபவித்துக் கொண்டிருந்த ஜட்சன் எப்போதும், தான் மொழிபெயர்த்த பர்மிய புதிய ஏற்பாட்டைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தார்.
அதோனிராம் ஜட்சன் சிறையிலிருந்த காலத்தில், பர்மிய அதிகாரிகள் தான் பர்மிய மொழியில் மொழிபெயர்த்த புதிய ஏற்பாட்டின் பிரதிகளை அழித்துவிடக்கூடாது என்பதே அவரது கவலையாயிருந்தது. அவரது மனைவி நான்சி அவற்றை ஒரு தலையணைக்குள் வைத்துத் தைத்து, அதை ஜட்சனிடம் அனுப்பியிருந்தாள். அத்தலையணையைப் பல நாட்கள் ஜட்சன் வைத்திருந்தார். பின்னர், ஒருவர் பின் ஒருவராகச் சங்கிலிகளினால் கட்டப்பட்டிருந்த மனிதர்களோடு சேர்த்துக்கட்டப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்காக வேறிடத்திற்கு கொண்டு போகப்பட்டார். அதேசமயம் அவர் வைத்திருந்த தலையணை அவரிட மிருந்து பிடுங்கி எறியப்பட்டது. இது நடந்து 7 கொடிய மாதங்களின் பின் ஜட்சன் ஒரு காவலாளியின் மேற்பார்வையின் கீழ் அரசின் மொழி பெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார். 1825 நவம்பரில், சரியாக ஜட்சன் சிறைப்பட்டு ஒன்றரை வருடங்களின் பின் பிரித்தானியர்கள் யுத்தத்தில் வெற்றியடைந்தமையால் அவர் விடுதலை செய்யப்பட்டார். அச்சமயம் அவருடைய மனைவியும், அவருடைய ஊழியத்தின் ஆரம்பத்தில் இரட்சிக்கப்பட்ட பர்மிய கிறிஸ்தவனும் ஜட்சனின் தலையணையை அவரிடம் கொண்டு வந்தனர். 7 மாதங்களுக்கு முன் ஜட்சனின் உடைமைகளில் அதை மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடிந்தது. அதனுள் அவர் மொழிபெயர்த்த பர்மிய மொழி புதிய ஏற்பாடு இருந்தது. சிறையிலிருந்து விடுதலையடைந்த ஜட்சன் தனது மொழி பெயர்ப்பு வேலைகளைத் தொடர்ந்து செய்தார். எனினும் 6 மாதங்களில் அவரது மனைவி நான்சி மரணமடைந்தபின் அவர் வெகுவாகப் பாதிக்கப்பட்டார். இதனால் மொழிபெயர்ப்பு வேலைகளும் பாதிக்கப்பட்டன. எனினும் 1834 ஆம் ஆண்டு, அவரது மனைவி மரித்து 7 வருடங்களின் பின் பர்மிய மொழியில் முழுவேதாகமத்தினது மொழிபெயர்ப்பு வேலையையும் பூர்த்தி செய்தார். 1835ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரது பர்மிய மொழிபெயர்ப்பு வேதாகமம் அச்சிடப்பட்டது. அதன் பின் 5 வருடகாலமாக அவர் தனது மொழிபெயர்ப்பைத் திருத்தும் வேலைகளில் ஈடுபட்டார். உண்மையில் கடும் உபத்திரவங்களுக்கூடாகச் சென்ற அதோனிராம் ஜட்சன் பர்மிய மக்களுக்குத் தேவனுடைய வார்த்தை அவர்களுடைய மொழியில் கிடைப்பதற்குத் தன்னையே தியாகம் செய்திருந்தார். இன்று, பர்மாவில் பேசப்படும் 8 மொழிகளில் முழுவேதாகமமும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதைவிட, புதிய ஏற்பாடு மேலும் 8 மொழி களிலும், வேதாகமத்தின் பகுதிகள் 10 மொழிகளிலும் பர்மாவில் மொழி பெயர்க்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.
(2) சீன மொழிபெயர்ப்பு
லண்டன் மிஷனரி சங்கம் ரொபர்ட் மொரிசன் என்பவரை சீனாவுக்கு மிஷனெரியாக அனுப்பியது. இவர் 1807ஆம் ஆண்டு சீனாவிலுள்ள கன்டன் எனும் நகருக்குச் சென்றார். சீனர்களது உதவியோடு அவர்களது மொழியைக் கற்றிடலாம் எனும் நம்பிக்கையோடிருந்த மொரிசனுக்கு அங்கு பெரும் ஏமாற்றமே காத்திருந்தது. தமது தூயமொழியை வெளி நாட்டவருக்கு கற்றுக்கொடுப்பவர்களுக்கு மரணதண்டனை கொடுக்கப்படும் என அக்காலத்தைய சீன அரசாங்கம் கட்டளையிட்டிருந்தது. எனினும் வெகுவிரைவிலேயே இரு ரோமன் கத்தோலிக்க சீனர்களைச் சந்தித்த மொரிசன் அவர்களது உதவியோடு இரகசியமாக சீனமொழியைக் கற்றவாறே ஒரு சீன ஆங்கில அகராதியையும் தயாரித்தார். எனினும் வெளிநாட்டவர்களுக்கு 6 மாதங்கள் மட்டுமே கன்டன் நகரில் இருப்பதற்கு சீன அரசு அனுமதி கொடுத்தமையினால், 6 மாதங்களின் பின் மொரிசன் போர்த்துக்கேயரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மெக்கவ் எனுமிடத்துக்குச் சென்றார். மேலும் மொரிசன் மெக்கவ்வில் இருக்கும் போது அங்கிருந்த இங்கிலாந்து நாட்டு மருத்துவர் ஒருவரின் மகளைத் திருமணமுடித்தார். எனினும் 6 மாதங்களின் பின் மறுபடியுமாக கன்டன் நகருக்குச் செல்வதற்கு கிழக்கிந்தியக் கம்பனியில் மொழிபெயர்ப்பாளராக வேலைக்குச் சேர வேண்டியதாயிற்று. அத்தோடு அவரது மனைவிக்கு கன்டன் நகருக்குச் செல்ல அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனால் கன்டன் நகரில் தனியாக வாழ்ந்த மொரிசன் பகற்பொழுதில் தனது உத்தியோகக் கடமைகளைச் செய்ததோடு, இரவு வேளையில் சீனர்களது உதவியோடு வேதாகமத்தை சீனமொழியில் மொழி பெயர்த்து வந்தார்.
1809ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தை சீன மொழியில் மொழிபெயர்க்கும் வேலைகள் பூர்த்தியடைந்தன. அதை புத்தகமாக அச்சிட்டு வெளியிடுவதற்குத் தேவையான சீன அச்சு எழுத்துக்களை மொரிசன் மரப்பலகையில் செய்தார்.
(தொடரும்)