ஆசிரியரிடமிருந்து…

சத்தியவசனம் பங்காளர் மடல்

நவம்பர்-டிசம்பர் 2011

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள பங்காளர்களுக்கு,

நம்மை வழிநடத்தும்படியாக தாவீதின் நட்சத்திரமாக இவ்வுலகில் உதித்த இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
இவ்வருடத்தின் இறுதிவரை நம்மைப் பாதுகாத்து அரவணைத்து வழிநடத்திய நம் தேவனை துதிக்கிறோம். இயேசுகிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூருகின்ற நம் ஒவ்வொருவருக்கும் இந்நாட்கள் மெய்யான சந்தோஷமும், விடுதலையும், சமாதானமும் உள்ள நாட்களாய் அமைய வேண்டுதல் செய்கிறோம். சத்திய வசன ஊழியத்தைத் தங்கள் பிரயாசத்திலிருந்து காணிக்கை கொடுத்து தாங்கிவருகிற ஒவ்வொருவருக்கும் நன்றி கூறுகிறோம். அதேபோல், இவ்வூழியத்தில் இணைந்து தங்கள் நேரத்தையும், உழைப்பையும் அர்ப்பணித்து வருகிற சத்தியவசன பிரதிநிதிகளுக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். இவ்வாண்டில் சத்தியவசன வானொலிப் பணியும், தொலைகாட்சி ஊழியமும், இலக்கியப் பணியும் தடையின்றி நடைபெற இதின் தேவைகள் அனைத்தையும் தேவன் அற்புதமாய் சந்தித்தபடியால் அவரை ஸ்தோத்திரிக்கிறோம்.

சிற்றலை வரிசையில் ஒலிபரப்பான சத்தியவசனம் வானொலி நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டதை கடந்த இதழில் தெரிவித்திருந்தோம். தற்போது திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் FEBA வானொலியில் மத்திய அலை வரிசை MW 1125 Khz இல் மாலை 7:00 PM மணிக்கு ஒலிபரப்பாகி வருகிறதென்பதை அறியத் தருகிறோம். சத்தியவசன காலண்டர் வழக்கம்போல் பங்காளர்களுக்கு அனுப்பிவைத்துள்ளோம். கூடுதலான காலண்டர் வேண்டுவோர் 28ஆம் பக்கத்திலுள்ள விளம்பரத்தின்படி காணிக்கை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.

இவ்விதழில் ஞானிகள் தேடுகின்ற இயேசு என்ற தலைப்பில் Dr.உட்ரோ குரோல் அவர்கள், படித்த மேதைகளை தேவன் எவ்வாறு ஆதாயப்படுத்துகிறார் என்பதை இயேசு பாலனைத் தேடி வந்த சாஸ்திரிகளின் சம்பவத்தை வைத்து விளக்குகிறார். பயப்படாதிருங்கள்! என்ற தலைப்பில் கலாநிதி தியோடர் வில்லியம்ஸ் அவர்கள், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டிருந்த மேய்ப்பர்களை தேவன் தேடிச்சென்று நற்செய்தி அறிவித்ததை விளக்குகிறார். சகோதரி சாந்திபொன்னு அவர்கள், இருளிலிருந்து ஒளியினிடத்திற்கு… என்ற செய்தியில் நம்மைச் சூழ்ந்துள்ள மக்கள் மத்தியில் இக்கிறிஸ்துமஸ் நாட்களில் நாம் ஒளியின் மக்களாய் வாழவேண்டிய அவசியத்தை விளக்கியுள்ளார்கள். மேலும் காலம் நிறைவேறினபோது… மற்றும் இயேசு நமக்காக வெளிப்பட்டார் என்ற கிறிஸ்துமஸ் சிறப்புச்செய்திகளும் இடம்பெற்றுள்ளது.

2012ஆம் ஆண்டில் பிரவேசிக்கவிருக்கும் நம் ஒவ்வொருவரும் தேவனுடைய வார்த்தையில் ஆழமாய் வளர்வதற்கான ஆலோசனைகள் அடங்கிய சிறப்புக் கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. இச்செய்திகள் யாவும் வாசகர்களுக்கு இக்கிறிஸ்துமஸ் நாட்களில் ஆசீர்வாதமாக அமையும் என நம்புகிறோம்.

வாசகர்கள் யாவருக்கும் எங்கள் அன்பான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்
சத்தியவசனம்