ஆசிரியரிடமிருந்து…

சத்திய வசனம் பங்காளர் மடல்

ஜனவரி-பிப்ரவரி 2019

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

உலகத்தின் கடைசி பரியந்தம் நான் உங்களோடு இருக்கிறேன் என்று வாக்களித்த கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

2019ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உதவி செய்த ஆண்டவர் நம்மையும் நமது குடும்பத்தையும் நித்தமும் வழிநடத்துவார். கடந்தவருடம் சத்தியவசன ஊழியத்தை தாங்கிய பங்காளர்களுக்கும் வானொலி/தொலைகாட்சி ஊழியத்தின் ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து நிகழ்ச்சிகள் வெளிவர உதவிய யாவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவிக்கிறோம். 2019ஆம் ஆண்டிலும் சத்தியவசன ஊழியத்தைத் தொடர்ந்து உதாரத்துவமான காணிக்கையாலும் ஊக்கமான ஜெபத்தாலும் தாங்க உங்களை அன்போடு அழைக்கிறோம்.

சத்தியம் டிவியில் வெள்ளிதோறும் காலை 5.30 மணிக்கு வெளிவந்த தொலைகாட்சி நிகழ்ச்சி தற்சமயம் நிறுத்தப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கிறோம். மேலும் நீண்ட நாட்களாக தங்கள் பங்காளருக்கான சந்தாவை புதுப்பிக்காதவர்களுக்கு எமது வெளியீடுகள் அனுப்புவது நிறுத்தப்படும் என்பதைத் தெரிவிக்கிறோம். சத்தியவசன ஊழியப்பணிகள் வாயிலாக தாங்கள் அடையும் ஆவிக்குரிய நன்மைகளை எங்களோடு பகிர்ந்துகொள்ள அன்பாய் கேட்கிறோம்.

இந்நாட்களில் தேவன் நிறுவிய குடும்ப அமைப்பு எவ்வளவாய் சாத்தானின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறதை நமது கண்களுக்கு முன்பாக பார்க்கிறோம். இக்கடைசி நாட்களில் குடும்பங்களில் பந்தமும் பாசமும் பிணைப்பும் ஐக்கியமும் விட்டுகொடுத்தலும் குன்றிபோய் சமாதானமன்றி உடைந்து சிதறுவதை சமுதாயத்தில் தற்போது நிலவிவரும் அவலங்கள் எடுத்துகாட்டுகிறது. இதற்கு கிறிஸ்தவ குடும்பங்களும் அப்பாற்பட்டதல்ல. சமுதாயத்தில் ஒரே பாலின திருமணங்களுக்கும் திருமண பந்தமின்றி சேர்ந்து வாழ்வதற்கும் குடும்பத்தைப் பிரிந்துதான் விரும்பியவர்களோடு வாழ்வதற்கும் சட்ட அங்கீகாரம் கிடைத்து வருவது மிகவும் துக்ககரமான காரியமாகும். இவற்றை தேவன் முற்றுமாய் வெறுக்கிறார். எனவே குடும்பத்தைக் குறித்த தேவனுடைய நோக்கம், அதற்கு அவர் வேதாகமத்தில் தந்திருக்கிற நியதிகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை தொகுத்து சிறப்பிதழாக இவ்விதழை வெளியிடுகிறோம்.

இவ்விதழில் தேவன் நம்மை நித்தமும் நடத்துவார் என்ற தலைப்பிலான செய்தியை சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்களும், குடும்பம் சமுதாயத்தின் அஸ்திபாரம் என்ற தலைப்பில் Dr.உட்ரோ குரோல் அவர்களது செய்தியும் இடம் பெற்றுள்ளது. மேலும் திரு.பிரகாஷ் ஏசுவடியான் அவர்கள் வழங்கிய குடும்பங்களுக்கான தொடர் செய்தியும், நமது குடும்பத்தை கிறிஸ்துவுக்காக ஆதாயப்படுத்தல் என்ற தலைப்பில் Dr.தியோடர் எச்.எஃப் அவர்களது செய்தியும், அந்த திராட்ச செடி யார்? தலைப்பில் சகோதரி சாந்திபொன்னு அவர்களது செய்தியும், பிள்ளைகள் ஆண்டவர் அருளும் செல்வம் என்ற தலைப்பில் சகோதரி பவானி மகேந்திரன் அவர்கள் எழுதிய செய்தியும் இடம் பெற்றுள்ளது. இச்செய்திகள் ஒவ்வொன்றும் ஆசீர்வாதமாக இருக்க ஜெபிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

சத்தியவசனம்