ஆசிரியரிடமிருந்து…

சத்திய வசனம் பங்காளர் மடல்

ஜூலை-ஆகஸ்டு 2019

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

மீண்டும் இவ்விதழின் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். தங்களது தியாகமான காணிக்கையாலும் ஊக்கமான ஜெபத்தாலும் சத்தியவசன ஊழியத்தைத் தாங்கி வருகிறீர்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் பிரயோஜனமடையும் இந்த மேலான பணிகளை தாங்கிவரும் அனைத்து பங்காளர்கள் ஆதரவாளர்கள் யாவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். சத்தியவசன வானொலி நிகழ்ச்சிகளும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளும் தடைகளின்றி தொடர்ந்து ஒலி/ஒளிபரப்பாக ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து தாங்கும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறோம். சமீப நாட்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட சத்தியவசன Whatsapp ஊழியத்தில் அநேகர் இணைந்து வெளிவரும் செய்தியின் மூலம் கர்த்தருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுவருகிறார்கள். தங்களது கிறிஸ்தவ நண்பர்கள், விசுவாசிகளும் இவ்வூழியத்தினாலே பயனடைய அவர்களுக்கு சத்தியவசன Whatsapp ஊழியத்தை அறிமுகப்படுத்துங்கள் (Whatsapp No.6380692034).

அன்றாட செய்திதாளை பார்த்தால் எவ்விடங்களிலும் விபத்துக்கள், கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து கொண்டு செல்வதையும் ஒரு பதட்டமான சூழ்நிலையே நிலவி வருவதையும் காண்கிறோம். மேலும் பலவித கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்படும் போராட்டங்கள் இவைகள் எல்லாம் வன்முறையாக மாறாதபடி சமாதான காரணராகிய தேவனிடத்தில் மன்றாடுவோம். 2நாளா. 7:14 ஆம் வசனத்தின்படி கர்த்தரின் நாமம் தரிக்கப்பட்ட ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, கர்த்தரின் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால் பாவத்தை மன்னித்து தேசத்திற்கு சேமத்தைக் கொடுப்பதாக ஆண்டவர்தாமே வாக்குப்பண்ணியுள்ளார். இவ்விதமாக நாமும் ஜெபிக்கும்போது தேசம் தன் பலனைக் கொடுக்கும்.

இவ்விதழில் சகோதரி சாந்திபொன்னு அவர்கள் எழுதிய கிறிஸ்தவனின் வாழ்வும் தேவாவியானவரும் என்ற சிறப்பு கட்டுரையும், தேவனுடைய வழியிலும் அவருடைய சமுகத்திலும் அவருடைய மகிழ்ச்சிக்காகவும் வாழ்வதே அர்த்தமுள்ள வாழ்வு என்பதை தனது சொந்த அனுபவத்தை வைத்து விளக்கி வாழ்வு தரும் வழி என்ற தலைப்பில் Dr.வாரன் வியர்ஸ்பி அவர்கள் எழுதிய செய்தியும், குணமாக்குதலும் விசுவாச ஜெபமும் என்ற தலைப்பில் Dr.தியோடர் எச்.எஃப் அவர்களது புதிய வேதபாட தொடரின் தொடர்ச்சியும், மான்கால்களின் வேகம் கொண்ட சாதனையாளர் ஆசகேலைப்பற்றி Dr.உட்ரோ குரோல் எழுதிய சிறப்புக் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. மேலும் நம்பிக்கை வீண்போகாது என்ற தலைப்பில் சோர்ந்து போகாமல் எவ்வாறு கர்த்தரிடத்தில் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதைக் குறித்து சகோ.பழனிவேல் ஆபிரகாம் அவர்கள் எழுதிய செய்தியும், திரு.பிரகாஷ் ஏசுவடியான் அவர்கள் வழங்கிய குடும்பங்களுக்கான தொடர்செய்தியும் இடம் பெற்றுள்ளது. இச்செய்திகள் ஒவ்வொன்றும் ஆசீர்வாதமாக இருக்க ஜெபிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

சத்தியவசனம்