ஆசிரியரிடமிருந்து…

சத்தியவசனம் பங்காளர் மடல்

மே-ஜுன் 2012

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள பங்காளர்களுக்கு,

ஒரு தாய் தேற்றுவதுபோல நம்மைத் தேற்றுகிற நம் அன்பின் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

சத்தியவசன சஞ்சிகை மற்றும் தியான நூல் வாயிலாக அநேகர் பிரயோஜனமடைந்து வருவதை அறிந்து தேவனைத் துதிக்கிறோம். நீங்கள் பெற்ற ஆசீர்வாத நன்மைகளை எங்களோடு பகிர்ந்து கொள்ள அன்பாய் கேட்கிறோம். தங்கள் உதாரத்துவமான காணிக்கையினால் இவ்வூழியத்தைத் தாங்கிவரும் அன்பு பங்காளர்களுக்காக தேவனைத் துதிக்கிறோம். நீண்ட நாட்களாக பங்காளர் சந்தாவைப் புதுப்பிக்காதவர்கள் வரும் நாட்களில் புதுப்பித்து இவ்வூழியத்திற்கு உதவ அன்பாய் கேட்கிறோம். தற்போதுள்ள விலைவாசி உயர்வினால் பங்காளர் மற்றும் பத்திரிக்கை சந்தாவை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை 32ஆம் பக்கம் தந்துள்ளோம்.

சத்தியவசன வானொலி நிகழ்ச்சியை ஜூன் மாதத்திலிருந்து மீண்டும் காலையில் ஒலிபரப்பு செய்ய ஃபீபா வானொலி நிலையத்தார் முயன்று வருகிறார்கள். இதற்காக தொடர்ந்து ஜெபிக்க அன்பாய் கேட்கிறோம். சத்தியவசனம் வானொலி மற்றும் தொலைகாட்சி ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து இவ்வூழியங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கு உதவ அன்பாய் கேட்கிறோம்.

இவ்விதழில் Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதியுள்ள தேவனுடைய கிருபையும் மனதுருக்கமும் என்ற சிறப்புக் கட்டுரை இடம்பெற்றுள்ளது. இதில் ஆண்டவர் தம்முடைய பிள்ளைகள் மேல் வைத்துள்ள மனதுருக்கத்தை விவரித்துள்ளார்கள். நம்மை தேற்றுகிற தெய்வம் நமக்கு ஒருவர் உண்டு என்பதை பேராசிரியர் எடிசன் அவர்கள் தனது செய்தியில் கூறியுள்ளார்கள். சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் புதிய உடன்படிக்கையின் இரத்தம் என்ற தலைப்பில் அளித்துள்ள தொடர் செய்தியில் இயேசுகிறிஸ்து நமக்காக சிந்தின இரத்தத்தின் மகத்துவத்தை விளக்கியுள்ளார்கள். Dr.புஷ்பராஜ் அவர்கள்  காட்டு புஷ்பத்திற்கு மரணபயம் இல்லை என்ற தலைப்பில் அளித்துள்ள செய்தியின் வாயிலாக நாமும் காட்டுபுஷ்பங்களாக மாறவேண்டும் என்ற தேவனுடைய எதிர்பார்ப்பை விளக்கியுள்ளார்கள்.  Dr.தியோடர் எச்.எப் அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தைப் பற்றி எழுதியுள்ள பழைய ஏற்பாட்டு வேதபாடமும், சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் உவமைகளிலிருந்து எழுதிய புதிய ஏற்பாட்டு வேதபாடமும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளது. இச்செய்திகள் யாவும் வாசகர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க ஜெபிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்
சத்தியவசனம்