மேய்ப்பனிலும் மேலான தகப்பன்

தியானம்: 2019 ஆகஸ்டு 2 வெள்ளி | வேத வாசிப்பு: யோவான் 10:11-17

நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன்ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான் (யோவான் 10:11).

பழைய ஏற்பாட்டிலுள்ள பலர் தேவனுடன் நெருங்கி வாழ்ந்துள்ளனர். தேவனோடு சஞ்சரித்த ஏனோக்கு, தேவனுடைய சிநேகிதன் என்று அழைக்கப்பட்ட ஆபிரகாம், தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன் என்ற சாட்சிபெற்ற மோசே என்று பலரைக் காண்கிறோம். என்றாலும், மனிதருக்கும் தேவனுக்குமுள்ள இந்த உறவானது, கிறிஸ்துவிலேயே பூரணமாக்கப்பட்டது. அதையே இரட்சகர் நமக்காகச் சிலுவையில் நிறைவேற்றினார். “நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கின்றான்” என்றார் இயேசு. அவர் நமக்காகவே சிலுவையை ஏற்று, பாடுபட்டு, சிந்திய இரத்தத்தினாலே நாம் பாவமன்னிப்பு என்ற அளப்பரிய ஈவை பெற்றிருக்கிறோம். இதனாலேயே இழந்த உறவை மீண்டும் பெற்றுக்கொண்டுள்ளோம்.

இயேசு, தம்மை ஒரு நல்ல மேய்ப்பனாக அடையாளப்படுத்தியதோடு நிறுத்திவிடாமல், அப்படியே செயற்பட்டதையும் நற்செய்தி நூல்களிலே வாசிக்கிறோம். இந்த நல்ல மேய்ப்பனை அறிந்த நாம், அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுக்கிறோமா? “என்னுடையவைகளை நான் அறிந்தும், என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன். ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்” என்று இவ்வுலகிலே ஒரேயொருவர் மட்டுமே ஆணித்தரமாகக் கூறியுள்ளார். அவரே நம் இரட்சகராகிய இயேசு. அவரின்றி வேறு நல்ல மேய்ப்பர்கள் எவரும் இவ்வுலகிலே கிடையாது.

ஆண்டவர் இயேசுவை நல்ல மேய்ப்பனாகவும், ஆடுகளுக்கு உற்ற காவலனாகவும் மாத்திரமல்லாமல், அதற்கு மேலாகவும் யோவான் அவரை வெளிப்படுத்தியுள்ளார். “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்” (யோவா.1:12). அப்படியானால் நாம் அவரது மந்தைகள் மாத்திரமல்லாமல், அதைவிட மேலான உரிமையுள்ளவர்கள் அல்லவா! உண்மையில், அவரை ஏற்றுக்கொண்டவர்களானால், நாம் அவருடைய பிள்ளைகள் என்ற உரிமையைப் பெற்றுக்கொள்கிறோம். இது எத்தனை பெரிய பாக்கியம்! இத்தனை மேலான சிலாக்கியம் நமக்குக் கிடைத்திருக்க, நாம் இந்தப் பரம தந்தையோடு உறவைப் பேணாமல் இருப்பது தகுமா? இன்று நாம் தேவனுடைய பிள்ளைகள் என்றால், மேய்ப்பனிலும் மேலான அந்த தகப்பனுடன் அவரது பரிசுத்த உறவில் நிலைத்து நிற்கிறோமா என்பதைச் சிந்திப்போம்.

‘…நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்’ (ரோ. 8:15).

ஜெபம்: எங்கள் நல்ல ஆண்டவரே, நீரே எங்கள் நல்ல மேய்ப்பராகவும் தகப்பனாகவும் இருந்து எங்களை நேசித்து வருகிறீர். அந்த அன்பின் உறவில் நாங்களும் உண்மையோடே காணப்பட கிருபைச்செய்யும். ஆமென்.

தேவனுடனான உறவு

தியானம்: 2019 ஆகஸ்டு 1 வியாழன் | வேத வாசிப்பு: உபாகமம் 32:9-14

கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார் (உபா. 32:12).

தமது சாயலிலே மனிதனைச் சிருஷ்டித்த தேவன், அவனுடன் உறவாட விரும்பி, அவனைத் தேடி வந்தார். ஏதேனிலே, பகலின் குளிர்ச்சியான வேளையிலே ஆதாம் ஏவாளுடன் தேவன் உலாவினார் (ஆதி.3:8). ஆயினும், தன் இஷ்டப்படி சென்ற மனிதன் பாவத்தில் விழுந்தபோது, தேவனுடனான அன்பின் உறவில் அவனுக்கு விரிசல் ஏற்பட்டது. எனினும், தேவன் மனிதனைக் கைவிடவில்லை. தொடர்ந்தும் தேடினார். இவ்விதமாக தொலைந்துபோன மனிதனைத் தேடிய இந்த உறவானது, ஒரு மேய்ப்பனுக்கும் அவனுடைய மந்தைக்குமான உறவுக்கு ஒப்பாயிருக்கிறதை நாம் காணலாம். இந்த மேலான உறவையே ’23ம் சங்கீதம்’ மிக அழகாகச் சித்தரித்துக் காட்டுகிறது.

இன்றைய வாசிப்புப் பகுதியிலே, தேவன் தமது பிள்ளைகளில் கொண்டுள்ள கரிசனை, ஒரு கழுகு தன் குஞ்சுகளில் வைத்திருக்கும் கரிசனைக்கு ஒப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம். “கழுகு தன் கூட்டைக் குழப்பி, தன் குஞ்சுகளுக்கு மேலாக வட்டமிட்டு, தன் செட்டைகளை விரித்து, அவைகளைத் தன் சிறகுகளில் ஏந்திக்கொண்டு சுமந்து செல்லுவதுபோல், அவர் அவர்களைப் பராமரித்தார்” என ஒரு தமிழ் மொழிபெயர்ப்பு இப்பகுதியை விபரிக்கிறது. நமது வாழ்விலே தேவன் எவ்வளவு அக்கறையாக இருக்கின்றார் என்பதை இவ்வசனம் தெளிவாக விளக்குகிறது.

இவை யாவும் மேலாக, தேவனுக்கும் மனிதனுக்குமான உறவு பாவத்தினால் விரிசலடைந்தபோதும், அந்த விரிசலை நீக்கி, பாவத்தின் கோரத்தைப் போக்கி மனுக்குலத்தை மீட்பதற்காக கிறிஸ்துதாமே மனுஷனாக இப்புவி வந்தாரே! அவர் பாடுபட்டு, மரித்து, உயிர்த்தெழுந்து பிரிவினை என்ற நடுச்சுவரைத் தகர்த்தெறிந்து பிதாவோடு நம்மை ஒப்புரவாக்கினார். இன்றும், பாவத்தில் உழலும் நம் ஒவ்வொரு வரையும் உணர்த்தி, நல்வழிப்படுத்த விரும்புகிறார். தேவன் அருளிய, மன்னிப்பைப் பெற்றிருக்கின்ற நாம், தேவனோடுள்ள உறவை சரியாகப் பேணாமல், வழிதவறிச் செல்லும் ஆடுகளைப்போல இன்னமும் ஜீவிப்பதுதான் பரிதாபத்திற்குரிய விஷயமல்லவா!

அன்பானவர்களே, தேவன் நம்மை இடைவிடாமல் கவனித்துப் பாதுகாத்து வருகின்றார். ஆனால் நாம் அவருக்குள் அடங்கி வாழுகிறோமா? அவருடனான உறவில் வளருகிறோமா? அல்லது, நமது இஷ்டப்படி வாழ எல்லைகளைத் தாண்டுகிற ஆட்டைப்போல இருக்கிறோமா?

சிதறுண்ட ஆடுகளைப் போலிருந்தீர்கள். இப்பொழுதோ, உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள் (1பேதுரு 2:25).

ஜெபம்: எங்களைத் தேடிவந்து சேர்த்துக்கொண்ட நல்ல மேய்ப்பரே, எங்களது இஷ்டப்படி இனி நாங்கள் வாழாமல் உம்முடைய சத்தத்திற்கே அனுதினமும் கீழ்ப்படிந்து நடப்பதற்கு உமதருள் தாரும். ஆமென்.

கோழையா? வீரனா?

தியானம்: 2019 ஜூலை 31 புதன் | வேத வாசிப்பு: யாக்கோபு 4:5-10

‘…தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்’ (யாக். 4:7).

நாம் எதற்காகப் பயப்படவேண்டும்? எதற்காகக் கவலைப்பட வேண்டும்? துரத்தி வருகின்ற நாய்க்குப் பயந்து புறமுதுகு காட்டி ஓடினால், அது தொடர்ந்து துரத்தி நம்மை நிச்சயம் கடிக்கும். அதே நாயைத் திரும்பிப் பார்த்து, குனிந்து ஒரு கல் எடுத்து பாருங்கள். நாய் பயந்து ஓடிவிடும். ஆனால், கல் எடுக்கவேண்டும் என்ற தைரியம் நமக்கு வேண்டுமே. ஆகவே தான் யாக்கோபு, பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் என்பதற்கு முன்னதாக, தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள் என்று முதலில் எழுதியுள்ளாரோ!

இந்நாட்களில் மறக்கப்பட்டுவருகிறதும், அந்நாட்களில் வேதாகமத்திற்கு அடுத்ததாகப் போற்றப்பட்டதுமான ஜான் பனியன் அவர்கள் எழுதிய ‘மோட்சப் பிரயாணம்’ என்ற புத்தகத்தில் விபரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு காட்சியும் ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கைக் காட்சிகளே. கிறிஸ்தியான் பல பிரயத்தனங்களின் பின்னர் சிலுவையை தரிசிக்கிறான். அவன் முதுகை அழுத்திய பாரச்சுமையும் கழன்று உருண்டோடிவிட்டது. அதன் பின்னர் அவன் சந்தித்த அவலங்கள் சொல்லிமுடியாதன. ஒரு காட்சியிலே அவன் தாழ்மை என்ற பள்ளத்தாக்கின் வழியாய்ச் செல்ல நேரிடுகிறது. அதன் வழியே சற்றுத் தூரம் வந்தபோது, ‘அப்பொல்லியோன்’ என்ற ஒரு கேவலமான பிசாசு கிறிஸ்தியானுக்கு எதிராய் வருகிறது. அதைக் கண்ட அவன் பயந்து கலங்கினான். இப் பிசாசை எதிர்ப்பதா அல்லது திரும்பி வந்த வழியே போய்விடுவதா என்று கிறிஸ்தியான் தனக்குள் சிந்திக்கிறான். அவன் தரித்திருக்கும் போராயுதங்கள் யாவும் சரியாக அணியப்பட்டிருந்தாலும், முதுகைப் பாதுகாக்க எதுவும் இல்லை என்பது அப்போதுதான் அவனுக்கு ஞாபகம் வருகிறது. பின்னிட்டுத் திரும்பினால் அப்பொல்லியோனின் அம்புகள் முதுகை துளைக்கும். அப்புறம் எப்படிப் பிழைப்பது? ஆகவே, நின்று நிலை பேராமல் எதிர்த்து நிற்பதே புத்தி; என் ஜீவனைப் பாதுகாக்க வேண்டுமென்றால் நான் பின்வாங்கக்கூடாது என்று தீர்மானித்துக்கொள்கிறான் கிறிஸ்தியான்.

பிரியமானவர்களே, நாம் பெருமைகொண்டு அழிந்துபோகாதிருக்க கர்த்தர், தாழ்மை என்ற பள்ளத்தாக்கில் நம்மை நடத்தக்கூடும். அங்கே அப்பொல்லியோன் நம்மைச் சந்திப்பான் என்பது தெரிந்தும் அவர் நம்மை நடத்துகிறார். ஏன்? நாம் எதிர்த்து நின்று பலங்கொண்டு ஜெயம் பெறுவதே தேவசித்தம். எதிர்க்கும் போதுதான் நாம் பலமடைகிறோம். நம் மார்பிலே மார்க்கவசம் உண்டு, கரத்திலே கேடயமுண்டு. ஆகவே பயமின்றி எதிர்க்கலாம். ஆனால் முதுகுகாட்டிப் பின்வாங்கினால் காயப்படுவதும், சில சமயம் அழிந்துபோவதும் உறுதி. எதிர்த்து முன் செல்லுகிறவன்தான் வீரன்!

‘பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்’ (எபே. 4:27).

ஜெபம்: ஜெயம் கொடுக்கும் தேவனே, நீர் எங்களை கோழைகளாக இருக்க அழைக்கவில்லை; சாத்தானையும் அவன் சேனைகளையும் எதிர்த்து நின்று முன்செல்ல அழைத்திருக்கிறீர். உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.

நம்புகிறதற்கு ஏதுவில்லாவிட்டாலும்!

தியானம்: 2019 ஜூலை 30 செவ்வாய் | வேத வாசிப்பு: ரோமர் 4:16-25

“(ஆபிரகாம்) … நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்” (ரோமர் 4:18)

விசுவாசத்தை நாம் உருவாக்க முடியாது; பிறர் சொல்லி வளர்த்துக்கொள்ளவும் முடியாது. மெய்யான விசுவாசம், தேவ ஆவியானவரால் நமக்குள் அருளப்பட வேண்டும். அந்த உன்னத ஆசியை நாம் பெற்றுக்கொள்ள கர்த்தரோடு நெருங்கி ஜீவித்து, அவர் அனுமதிக்கின்றவற்றை நமது வாழ்வில் முழுமனதோடு ஏற்று நடப்பது அவசியம். விசுவாசம் என்பது கிள்ளித்தரவும் அள்ளியெடுக்கவும் கடைச்சரக்கு அல்ல. அது விசுவாசம். இரண்டாயிரம் பிள்ளைகளை விசுவாசத்தில் பராமரித்த ஜார்ஜ் முல்லர் அவர்களிடம், ‘உறுதியான விசுவாசம் கொள்வதற்கு வழி என்ன’ என்று ஒருவன் கேட்டான். அதற்கு அவர், “இதற்கு ஒரே வழி சோதனைகளைச் சகிப்பதேயாகும். நான் கடுமையான சோதனைகளில் உறுதியாய் நின்றதால்தான் விசுவாசத்தைக் கற்றுக்கொண்டேன்” என்றாராம். ஆம், எல்லாம் அற்றுப்போகும் நேரம், அல்லது எதுவும் சாத்தியமில்லை என்கிற நேரமே விசுவாசிக்கக் கற்றுக்கொள்ளும் நேரம்.

ஆபிரகாமின் வாழ்வில் நாம் அதைத்தான் காண்கிறோம். அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவாய் என்ற வாக்கைப் பெற்றபோது, ஆபிரகாமுக்கு ஒரு பிள்ளையும் இல்லை; பிறக்கக்கூடிய சாத்தியமும் இருக்கவில்லை. அப்போது ஆபிரகாமுக்கு வயது நூறு. சாராளும் வயதுசென்ற கிழவி. எப்படி நம்புவது? ஆனால் ஆபிரகாமோ, வாக்குப்பண்ணினவரில் முழு நம்பிக்கையும் வைத்தார்.

சோதனைகள் நம்மை நெருக்கும்போது, வாக்கைப் பிடித்துக்கொண்டு, வாக்களித்தவரைச் சந்தேகிப்பதே நாம் செய்யும் தவறு. சோதனை நேரமே நாம் விசுவாசத்தில் வளரக்கூடிய நல்ல தருணம் என்று ஏன் சிந்திப்பதில்லை? நாம் அறிந்திராவிட்டாலும், அவரது சிங்காசனத்தை உறுதியாய் பிடித்துக்கொள்ள தேவன் நம்மைப் பயிற்றுவிக்கிற நேரம் அதுதான் என்பதை நாம் ஏன் உணருவதில்லை. ‘நான் பயப்படும் நாளில் உம்மை நம்புவேன்’ என்கிறோம்; பின்னர் நம்ப தடுமாறுகிறோம். இது, நான் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை அல்ல; இது தேவன் என்னில் கொண்டிருக்கும் திட்டம் நிறைவேறும் என்ற நம்பிக்கையாக இருக்கட்டும். நசுக்கப்படும்போதும், இழப்புகளைச் சந்திக்கும்போதும் நாம் சுருண்டுபோகிறோம். ஆனால், பெறு மதிமிக்க பரிமளதைலம் தயாரிக்க அநேகமான மலர்கள் நசுக்கப்படவேண்டும் என்பதை மறந்துவிடுகிறோம். சோதனைகளைச் சகிப்பது என்பது, நடப்பது நடக்கட்டும் என்று இருப்பது அல்ல; தேவசித்தம் என்னில் நிறைவேறட்டும் என்று காத்திருப்பதாகும்.

‘…பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்’ ( யாக். 1:2,3).

ஜெபம்: விடுதலையின் தேவனே, ஜார்ஸ் முல்லரைப் போல சோதனைகளைச் சகிக்கவும், அதில் உறுதியாய் நின்று விசுவாசத்தைக் கற்றுக்கொள்ளவும் கிருபை தாரும். ஆமென்.

கர்த்தரையே சார்ந்து நில்!

தியானம்: 2019 ஜூலை 29 திங்கள் | வேத வாசிப்பு: ஆதியாகமம் 32:22-31

‘அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்’ (ஆதி.32:26).

நாம் எல்லோரும் ஜெபிக்கிறோம்; ஆனால், என்ன மனநிலையோடு ஜெபிக்கிறோம்? சோர்ந்துபோகாமல் ஜெபிப்பது ஒன்று; கேட்பது கிடைக்க வேண்டுமென்று விடாப்பிடியாய் ஜெபிப்பது இன்னொன்று; ஜெபத்துக்குப் பதிலளிக்கிறவரைச் சார்ந்து நின்று ஜெபிப்பது இன்னொன்று. இதிலே அன்று யாக்கோபின் ஜெபம் எப்படிப்பட்டது?

ஏசாவுக்குப் பயந்து எல்லோரையும் எல்லாவற்றையும் பகுதி பகுதியாக யாப்போக்கு ஆற்றைக் கடக்கப்பண்ணின யாக்கோபு பிந்தித் தனித்திருந்ததிலும் அவனுடைய சுயநலம்தான் தெரிகிறது. அங்கே ஒரு புருஷன் அவனுடன் இரா முழுவதும் போராடுகிறான். யாக்கோபும் விடாப்பிடியாய் போராடுகிறான். இந்தப் போராட்டம் எதற்கு? அவனுக்கு தான் செய்ததெல்லாம் என்னவென்பது தெரியும். இல்லையானால் ஏசாவுக்கு இத்தனை பயம் எதற்கு? ஆக, அவன் தனித்து நின்று தன்னிடம் வந்தவரிடம் பொழுது விடியுமளவும் போராடுகிறான். ‘நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்’ என யாக்கோபு கூறியதிலிருந்து, அவன் தன் ஆசீர்வாதத்திற்காகவே போராடினான் என்பது தெளிவு. அவன் விடாப்பிடியாய் போராடினான். நடந்தது என்ன? கர்த்தர் பெலவீனரா? இல்லை! அவர் யாக்கோபை நன்கு அறிந்திருந்தார். அதனால்தான் அவனது தொடைச் சந்துவைக் கர்த்தர் தொட்டார், அது சுளுக்கிவிட்டது. தொடைச்சந்து சுளுக்கியதால் நடக்க முடியாது, போர் செய்ய முடியாது. சண்டையிட முடியாமற்போகவே யாக்கோபு அவரை இறுகப் பற்றிக்கொண்டான். இன்னும் கூறினால் அவருடைய கால்களையோ கழுத்தையோ பற்றிக்கொண்டான். அதாவது யாக்கோபு முழுவதுமாக கர்த்தரைச் சார்ந்துகொண்டான். தன் பாரம் முழுவதையும் அவரில் சுமத்திவிட்டான். அதன் பின்னரே அவன் இஸ்ரவேலாக ஆசீர்வதிக்கப்பட்டான்.

சர்வ வல்லவரின் கரத்திலிருந்து மனிதரின் அற்பமான பலம் எதைத்தான் கட்டாயப்படுத்தி எடுத்துக்கொள்ள முடியும்? தேவன்மேல் சார்ந்திருக்கிற ஜெபமே ஜெயம் தரும். நான் என்பது ஜெயிக்கப்பட்டால்தான் நாம் தேவனிடமிருந்து பெற்றுப் பலமடையலாம். மாறாக, சண்டையிட்டு ஆகப்போவது எதுவுமில்லை. அவர்மீது சார்ந்து நின்று நமது முழுப்பாரத்தையும் அவரில் போட்டுவிட நாம் பழகிக்கொள்ள வேண்டும். நமது ஜெபங்களுக்குப் பதில் வேண்டுமானால் நாம் ஆபிரகாமைப் பின்பற்றி மோரியாவரை செல்லவும் தயாராய் இருக்கவேண்டும்.

‘தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று (ஆபிரகாம்) முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்’ (ரோமர் 4:21).

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, எங்கள் பாரங்களை யாக்கோபைப்போல உம்மேல் வைத்து, உம்மையே சார்ந்து நின்று ஜெபிக்கக் கற்றுத்தாரும். ஆமென்.

பெலப்படுத்தும் பதில்கள்

தியானம்: 2019 ஜூலை 28 ஞாயிறு | வேத வாசிப்பு: ரோமர் 8:22-27

‘…நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால்…’ (ரோமர் 8:26).

பல வருடங்களுக்கு முன்னர், ‘எனக்குப் பொறுமை வேண்டுமென ஜெபியுங்கள்’ என்று ஒரு தாயார் அடிக்கடி கேட்பார். நாமும் ஜெபித்து அனுப்புவோம். அடுத்த தடவை சந்திக்கும்போது, ‘அன்று வீட்டுக்குப்போனபோது, பொறுமை இழந்துவிடக்கூடிய காரியங்களே காத்திருந்தன. கர்த்தர் என் ஜெபத்தை மாத்திரமல்ல, உங்கள் ஜெபத்தையும் கேட்கவில்லை’ என்பார். ஆனால், சில வருடங்களின் பின்னர், ‘அன்று என்னுடைய உங்களுடைய ஜெபத்தைக் கேட்காத மாதிரி கர்த்தர் செயற்பட்டதற்காய் ஸ்தோத்திரம். அந்த அனுபவங்கள்தான் நான் பொறுமையைக் கற்றுக்கொள்ள ஏதுவாயிருந்ததை இப்போது உணருகிறேன்’ என்றார். அவர் மரிக்கும்போது மிகுந்த சமாதானத்துடனே மரித்தார்.

தேவனை நன்கு கிட்டிச் சேர்ந்திருக்கிறோம் என்று எண்ணும்போது, நமக்கு எல்லாமே விளங்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், நமது ஜெபங்களுக்கான கர்த்தருடைய பதிலுத்தரவே நமக்குப் பல தடவைகளிலும் விளங்காத புதிராக இருக்கிறது. நாம் பொறுமைக்கு ஜெபித்தால் பொறுமையிழக்கக்கூடிய காரியங்களையே அனுப்புகிறார். தாழ்மைக்கு ஜெபித்தால், கீழ்ப்படிதலை கற்றுக்கொள்ளக்கூடிய துன்பங்களையே அனுப்புகிறார். பிறரை நேசிக்கின்ற மனதிற்காக ஜெபித்தால், நமக்குப் பிரியமானதையும் விட்டுக்கொடுக்கின்ற சூழ்நிலைகளையே அனுமதிக்கிறார். விசுவாசத்தைப் பெலப்படுத்துமாறு ஜெபித்தால், நம்மிடம் உள்ளதும் அற்றுப்போகிறது; பிள்ளைகள் வியாதிப்படுகிறார்கள். இதுவரை நமக்கிருக்கும் விசுவாசத்தைப் பயன்படுத்தவேண்டிய கட்டாய சோதனைகள் வந்துசேருகின்றன. நாம் இயேசுவைப் போல மாறவேண்டுமென்று ஜெபித்தால், இருக்கின்ற ஊழியமும் அற்றுப்போய், எல்லாராலும் புரிந்து கொள்ளப்படாத நிலைக்குள்ளாகிறோம். எல்லாரிடமும் அன்பு செலுத்தவேண்டுமென்று ஜெபித்தால் இதுவரை இல்லாத கோபம் வெடிக்கத்தக்கதாக காரியங்கள் நடக்கலாம்.

இவையெல்லாம் கர்த்தர் நம்மை வெறுக்கிறதினால் அனுமதிக்கின்ற பதிலா? இல்லை. பொறுமையிழக்கத்தக்க சூழல் அமைந்தால்தானே பொறுமையைக் கற்றுக்கொள்ள முடியும். எனவே அன்பானவர்களே, நமது வெற்றிக்கு ஒரே வழி, தேவகரத்தில் நம்மை விட்டுவிடுவதுதான். நம் பலவீனங்களை அறிந்திருக்கிற கர்த்தர் நமக்கு உதவி செய்யக் காத்திருக்கிறார். ஆகவே, நம்மையே அவர் கரத்தில் விட்டுவிட்டு இளைப்பாறுவோம். அவர் சகலத்தையும் நன்மைக்கு ஏதுவாக மாற்றுவார் என்பதே அவரைக்குறித்து நாம் கொண்டிருக்கிற தைரியம்.

‘என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக’ (சங். 66:20).

ஜெபம்: ஜெபத்தை கேட்பவரே, உம்மிடத்திலிருந்து எனக்கு வரும் எதிர்பார்த்திராத பதில்களால் ஏமாற்றமடையாதவாறு பொறுமையைக் கற்பதற்கு கிருபை தாரும். ஆமென்.