ஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 28 புதன்

“சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா” (சங்.150:6) நம்முடைய சுவாசத்தைக் கையில் வைத்திருக்கிற தேவனை இம்மாதத்தில் நாம் பெற்றுக்கொண்ட அனைத்து நன்மைகளுக்காக நன்றி நிறைந்த இதயத்தோடே துதித்து ஜெபிப்போம்.

நான் இல்லை! அவள்!

தியானம்: 2018 பிப்ரவரி 28 புதன்; வேத வாசிப்பு: ஆதியாகமம் 3:11-15; யாக்கோபு 4:10-12

“…மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்?” (யாக்கோபு 4:12).

அழகாகவும் பூரணமாகவும் ஜொலித்த ஏதேன் தோட்டத்தில் தேவனுக்கும் மனிதனுக்கும் இருந்த உறவு பிளவுபட்டது. இன்று உறவுகளின் பிளவுகளுக்கும், சிதைவுகளுக்கும் ஆரம்பமும் இதுவே. “நான் விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ?” என்று கர்த்தர் கேட்டபோது, ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்றுதானே பதிலளிக்கவேண்டும். ஆனால் ஆதாமோ, “என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள். நான் புசித்தேன் என்றான்.” இங்கே, “ஸ்திரீ வேண்டும் என்று நானா கேட்டேன்” என்பது போலவும், “நீர் தந்த அந்த ஸ்திரீதான்” என்றும், “இசைந்திருக்க வேண்டும் என்றது நீர்தானே” என்பதுபோலவும் ஆதாம் பதிலளிக்கிறதைக் காண்கிறோம். ஏவாளும் சளைத்தவள் அல்ல. அவள் சர்ப்பத்தைச் சுட்டிக்காட்டினாள்.

தேவனுக்கும் மனிதனுக்குமான உறவு கறைப்பட்டபோது அதன் முதல் விளைவாக, மனிதன் தேவனையே குற்றஞ்சாட்ட துணிந்தான். அதைத் தொடர்ந்து மனிதனுக்கும் மனிதனுக்குமான உறவு சிதைந்தது. கூட இருந்தவளையே குற்றஞ்சாட்ட அவன் தயங்கவில்லை. “நான் இல்லை, அவள்தான்.” ஏவாள் தானும் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டாளா? இல்லை. இன்றும் அழகான மனித உறவுகள் சிதைந்துபோக இந்தக் குற்றஞ்சாட்டுதலும் நியாயந்தீர்க்குதலுமே முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வலைக்குள் நாமும் பல தடவை அகப்பட்டிருக்கிறோம் என்பதை மறுக்கமுடியாது.

நாம் ஏன் அப்படி இருக்கவேண்டும்? குற்றம் எதுவும் செய்யாத இயேசு தம்மேல் சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு, ‘நான் அல்ல, அவன்தான்’ என்று மனிதரைச் சுட்டிக்காட்டியிருந்தால் இன்று நமது நிலை என்ன? அவர் நமது சகல குற்றங்களையும் தம்மேல் சுமந்தாரே! அவர் வழிநடக்காமல், நாம் எப்படி அவர் சந்நிதானத்தில் தலைநிமிர்ந்து நிற்கமுடியும்? உண்மை சுடும் என்பதுண்மை. அதற்காக, அடுத்தவன்மீது பழியைச் சுமத்திவிட்டு நாம் தப்பித்துக்கொள்வதும், அடுத்தவனைக் குற்றவாளியாகத் தீர்ப்பதில் தீவிரம் காட்டுவதும் நமக்கு அழகு அல்ல. குற்றஞ்சாட்டுதல் சாத்தானின் குணம். நாமோ தேவனது பிள்ளைகள். இயேசு சிலுவையில் நமக்காகச் சுமந்த பாரத்தை நினைத்து மனந்திரும்புவோம். நமது சுயநீதிகளைக் களைந்துவிட்டு, செய்யாத குற்றத்தையும் சுமக்க நேரிட்டால் அதையும் சுமக்க ஆயத்தமாவோம். இது கடினம்தான். ஆனால் பரிசுத்த ஆவியானவர் நமக்குத் துணை நிற்கிறாரே.

“….நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக் குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்” (ரோமர் 2:1).

ஜெபம்: ஆண்டவரே, இதுவரையிலும் நான் எத்தனைபேருக்கு எதிராக விரல் நீட்டினேன் என்பதை உண்மை இதயத்துடன் உணர்ந்து, அவர்களுடன் ஒப்புரவாகும்படியாக நீரே எங்களுக்கு கிருபை செய்யும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 27 செவ்வாய்

“நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்” (எரேமி.31:25) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே பலவிதமானத் தேவைகளோடு உள்ள நபர்களது தேவைகளைப் பூர்த்திசெய்து அவர்களை வழிநடத்திட பாரத்துடன் ஜெபிப்போம்.

விழுந்த திரை கிழிந்தது!

தியானம்: 2018 பிப்ரவரி 27 செவ்வாய்;
வேத வாசிப்பு: ஆதியாகமம் 3:6-10; 21-24

“…அந்தத் திரைச்சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும்” (யாத்திராகமம் 26:33).

“மனவிருப்பப்படியே திருமணம் நிச்சயமான மகிழ்ச்சியில் இருந்த எனக்கு, அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ஆவலுடன் திறந்தேன். ‘இனி எனக்கும் உமக்கும் ஒன்றுமில்லை’. கிழிக்கமுடியாத ஒரு திரை விழுந்து, சகலத்தையும் பிரித்துப்போட்டது. இன்றுவரை காரணம் தெரியாமல் தவிக்கிறேன்.” இப்படி ஒருவர் தன் பழைய நினைவுகளை மீட்டினார்.

ஆனால், தேவனாகிய கர்த்தருக்கும் மனிதனுக்கும் இடையே பாவத் திரையை இழுத்து வீழ்த்தியது மனிதனேதான். அது தெரிந்திருந்தும் அவனைத் தேடி வந்தாரே கர்த்தர், அதுதான் அவர் மனிதனில் கொண்டிருந்த மாசற்ற அன்பு. தேடிவந்தவர், தாமே மனிதனை அழைத்தார். ‘யார் உன்னை நிர்வாணி என்று சொன்னது’ என்ற கேள்வி, ‘நான் அப்படிச் சொல்லவில்லையே! புசிக்க வேண்டாம் என்று நான் தவிர்த்ததை நீ புசித்ததால் நீ ஒளிந்துகொண்டாயோ? நானா உன்னை ஒளிந்திருக்கச் சொன்னேன்’ என்பதுபோல தொனித்தது. மனித வாழ்வில் நுழைந்துவிட்ட பாவம் தேவனுக்கும் மனிதனுக்குமான நெருக்கமான உறவைக் கிழித்துப்போட்டது. மேலும், பாவியாகிவிட்ட மனிதன் பரிசுத்தமான தேவனண்டை வருவது அவனுக்குக் கேடு என்பதையும், ஜீவவிருட்சத்தின் கனியை உண்டு நித்தியமாய் தம்மைவிட்டு மனிதன் பிரியக்கூடாது என்று, அன்புள்ள தேவன் மனிதனை ஏதேன் தோட்டத்தைவிட்டே துரத்திப்போட்டார். தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே திரை விழுந்தது.

தமது மக்களிடையே வாசம்பண்ண விரும்பிய தேவன், தமக்கான வாசஸ்தலத்தின் அமைப்பை மலையிலே மோசேக்குக் காட்டியபோது, கிருபாசனம் வைக்கப்பட்ட மகா பரிசுத்த ஸ்தலத்தையும், பரிசுத்த ஸ்தலத்தையும் ஒரு திரைச் சீலையால் பிரித்துப்போடச்சொன்னது இதற்காகத்தான். மகா பரிசுத்த தேவனின் சந்நிதானத்திற்கு மனிதன் கிட்டி நெருங்கமுடியாத நிலை ஏற்பட்டது.

ஆனால், இன்று அத்திரைச்சீலை இல்லை. இயேசு பாவத்திற்கான முழுக் கிரயத்தையும் செலுத்திவிட்ட அந்தக்கணத்திலேயே அத்திரை கிழிந்துவிட்டது. நாம் படவேண்டிய பாடுகளை கிறிஸ்து தாமே ஏற்று, பாவத்திற்கு எதிரான தேவ கோபாக்கினையைத் தம்மீது சுமந்து, நம்மை விடுதலையாக்கியிருக்கிறார். ஆதலால், மனதில் குற்ற உணர்வோடும் வெட்கத்துடனும் போராடிக் கொண்டிருக்கும் தேவபிள்ளையே, இன்னும் நாம் தேவனைவிட்டுப் பிரிந்திருக்க வேண்டியதில்லை. நாம் தைரியமாக கிருபாசனத்தண்டை சேரலாம். பாவத்தை உதறித் தள்ளிவிட்டு, தைரியங்கொண்டு எழுந்திருப்போம்.

“…எல்லா விதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்” (எபிரெயர் 4:15).

ஜெபம்: அன்பின் தேவனே, உம்முடைய இரத்தத்தால் மீட்கப்பட்ட நாங்கள் பரிசுத்தமாய் வாழவும், மறுபடியும் திரை விழாதபடி விழிப்புள்ளவர்களாய் இருப்பதற்கும் உமது பெலனைத் தாரும். ஆமென்.