Daily Archives: October 9, 2018

ஜெபக்குறிப்பு: 2018 அக்டோபர் 9 செவ்வாய்

அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார் (சங்.146:7) இவ்வாக்குப்படியே பலவிதமான அரசுத்துறைகளில் பணியாற்றிக்கொண்டிருக்கும் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு நியாயமாய் வரவேண்டிய உயர்வுகள் கிடைப்பதற்கும், அவர்களுக்கு எதிராக செயல்படக்கூடிய அதிகாரிகள் சந்திக்கப்படவும், கர்த்தர் தம்முடைய பிள்ளைகளின் பட்சத்தில் துணையாய் இருந்து வழிநடத்த ஜெபிப்போம்.

கிறிஸ்துவுக்குச் சாட்சியாய்…

தியானம்: 2018 அக்டோபர் 9 செவ்வாய்; வேத வாசிப்பு: சங்கீதம் 1:1-3

உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள் (சங். 84:5).

நண்பர் ஒருவர், வாழைமரம் ஒன்றைச் சுற்றிப் பாதுகாப்புக் கொடுத்து, காற்றில் மரம் முறிந்து விழாதபடி நான்கு திசைகளிலும் நான்கு கயிறுகளினால் அதை இழுத்துக் கட்டியிருந்தார். அதைப் பார்த்தபோது, நமது வாழ்வும் விழுந்து விடாமல் கிறிஸ்துவுக்குள் உறுதியாக நிலைத்துநிற்க என்ன அவசியம் என்று எனக்குள் எண்ணிப்பார்த்தேன்.

ஒன்று ஜெபம். ஜெபமில்லாத வாழ்வில் ஜெயம் இராது. ஜெபிக்கும்போது தேவனுடைய சமுகத்தில் துதி ஸ்தோத்திரங்களைச் செலுத்தி, அவருடைய இருதயத் துடிப்போடு நமது இருதயமும் சேர்ந்து துடிக்கும்போது அதுவே மேன்மையான ஜெப நேரம். தானியேல் செய்த மூன்று வேளை முழங்கால் ஜெபம் (தானியேல் 6:10) மனுஷரின் சூழ்ச்சிகளை முறியடித்து, கர்த்தரையே நோக்கிப் பார்த்து பெலனடைந்து ஜெயங்கொள்ள ஏதுவாக இருந்தது. ஜெபத்தின் வழியில் நமது வாழ்வையும் ஜெயமாக்கிக்கொள்வோம்.

அடுத்து, வேதவாசிப்பும் தியானமும். கிருபையும் சமாதானமும் பெருகவும், கர்த்தராகிய இயேசுவை அறிகின்ற அறிவை அறியவும் (2பேது.1:2) வேத அறிவு மிகவும் அவசியம். கர்த்தருடைய வேதத்தைத் தியானித்து மனதில் பதித்து வைத்திருக்கும்போது, பாவத்தைக் குறித்த எச்சரிப்பும், கர்த்தருக்குப் பயப்படும் பயத்துடனான கீழ்ப்படிதலும் கர்த்தருக்குள் நம்மை நிலைப்படுத்தும். காலை, மாலை வேளைகளில் வேதத்தை வாசித்துத் தியானிப்பது மிக அவசியம். கர்த்தருடைய வேதத்தை நாம் மறந்தால், கர்த்தர் நம் பிள்ளைகளை மறப்பார் (ஓசியா 4:6).

மூன்றாவது, சாட்சியுள்ள வாழ்வு. நமது வாழ்வைப் பார்த்து, இதுதான் கிறிஸ்தவ வாழ்வு என்று பிறர் நினைக்கவேண்டும். ‘இவர்களும் கிறிஸ்தவர்களா?’ என்று பிறர் கேட்கும்படி வாழாமல், “இவர்கள்தான் கிறிஸ்தவர்கள்” என்று சொல்லும்படி வாழவேண்டும். அப்போஸ்தலர் காலத்திலும் நற்சாட்சி பெற்ற ஏழு பேரையே பந்தி விசாரணைக்கென்று ஏற்படுத்தினார்கள் (அப்.6:3).

இறுதியாக, விசுவாசத்துடனான கீழ்ப்படிதல். இராமுழுவதும் பாடுபட்டு எதுவும் அகப்படாத சூழ்நிலையிலும், ஆழத்திலே சென்று வலையைப் போடும்படி இயேசு சொல்ல, “உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன்” என்று சொல்லி (லூக்.5:5) வலையைப் போட்டு திரளான மீன்களைப் பிடித்த பேதுருவை நினைத்துக்கொள்வோம்.

“விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்” (எபி.11:6).

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, மேற்கண்ட நான்கு காரியங்களையும் கவனத்துடன் கடை பிடித்து உமக்குச் சாட்சியாய் வாழ பரிசுத்த ஆவியின் பெலனை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.

சத்தியவசனம்