ஜெபக்குறிப்பு: 2020 ஜூலை 31 வெள்ளி

என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன் (சங்.139:23) இம்மாதத்தில் தேவன் அருளிச் செய்த சொல்லி முடியாத நன்மைகளுக்காக, அவருடைய செட்டைகளின் கீழ் கிடைத்த அடைக்கலத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும், கொடுத்த பதில்களுக்காகவும் முழு இருதயத்தோடு அவரை ஸ்தோத்திரிப்போம்.

கர்த்தர் பக்கத்தில் இராவிட்டால்…

தியானம்: 2020 ஜூலை 31 வெள்ளி | வேத வாசிப்பு: சங்கீதம் 124:1-8; சாமு.30:1-8

மனுஷர் நமக்கு விரோதமாய் எழும்பினபோது, கர்த்தர் நமது பக்கத்திலிராவிட்டால்… (சங்.124:1).

ஒரு கிராமத்தில் உண்டான கலவரத்தின்போது, தேவ கிருபையினால் காத்துக் கொள்ளப்பட்ட ஒரு குடும்ப தலைவர் இப்படிக் கூறினார்: “எங்கள் வீட்டின் பொருட்களெல்லாம் உடைக்கப்பட்டு வீடும் சேதப்படுத்தப்பட்ட போதும் கர்த்தர் எங்களைக் காத்துக்கொண்டார். கர்த்தர் எங்கள் பக்கத்திலிராவிட்டால், நாங்கள் அழிந்துபோயிருப்போம். மட்டுமல்ல, எங்களைக் காத்துக்கொண்ட கர்த்தர் எங்கள் இடிந்துபோன வாழ்க்கையை மறுபடியும் கட்டியெழுப்பினார்” என்றார். சங்கீதக்காரனும் இதே அனுபவத்துடன், “என்னை ஒடுக்குகிறவர்களுக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்” என்று மன்றாடுகின்றதை சங்கீதம் 119:121 இல் வாசிக்கிறோம்.

ஆம், தாவீது பெற்ற அனுபவமும் இதுவே. அமலேக்கியர் சிக்லாகைக் கொள்ளையடித்துச் சென்றதைக்கண்ட சகல ஜனங்களும், தேசம் அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டு தங்கள் மனைவிகளும் குமாரரும் குமாரத்திகளும் சிறைப்பிடித்துக் கொண்டுபோகப்பட்டதைக் கண்டு, பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுது, மனக்கிலேசமாகி, “தாவீதின் நிமித்தமே இதுவந்தது” என்று அவனைக் கல்லெறிய வேண்டும் என்று தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள். இதனைக் கண்ட தாவீது, இக்கட்டான இந்த சூழ்நிலையிலும், தன் தேவனாகிய கர்த்தருக்குள் தன்னை திடப்படுத்திக்கொண்டான். மனுஷருடைய சத்தத்திற்கு அவன் அடிமைப்பட்டுவிடவில்லை. மாறாக, கர்த்தரிடம் ஆலோசனை கேட்டு அதன்படி அமலேக்கியரைத் தொடர்ந்துபோய், அனைத்தையும் திரும்பவும் மீட்டுக்கொண்டான். கர்த்தர்மட்டும் அவன் பக்கத்தில் இராமலிருந்திருந்தால், அவனும் ஆண்டவரைத் தேடாமல் இருந்திருந்தால் நிலைமை மோசமாயிருந்திருக்கும். இந்த அனுபவத்தையே தாவீது, “அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில், நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள்” (சங்கீதம் 124:3) என்று பாடி வைத்தான்.

அன்பானவர்களே, நம்முடைய வாழ்விலும் நமக்கு எதிராய் எழும்புகின்ற காரியங்கள் மத்தியில் நாம் என்ன செய்கிறோம்? இழப்புக்கள், விபத்துக்கள், வேதனைகள் வரும்போது தாவீது ராஜாவைப்போல, “கர்த்தர் என் பக்கத்தில்” என்ற அறிக்கையுடன் கர்த்தரிடமே ஆலோசனை கேட்கின்றோமா? அல்லது, மனுஷரைப் பார்த்து நடுங்குகிறோமா? கர்த்தரின் பக்கமே சார்ந்துகொள்வோமாக. அப்போது அவரும் நம் பக்கத்தில் இருப்பார். சர்வவல்லவர் நமக்காக யுத்தம் செய்து ஜெயம் தருவார்!

பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார் (சங்.125:2).

ஜெபம்: மாறாத தேவனே, மாறுகிற சூழ்நிலைகள் மத்தியில், மகத்துவரான உம்மை நோக்கிப் பாராமல், மனுஷரை நோக்கிப்பார்த்த நாட்களை எண்ணி வருந்துகிறேன். இனி உம்மையே சார்ந்து வாழ்வதற்குக் கற்றுக்கொள்ள உதவியருளும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2020 ஜூலை 30 வியாழன்

தேவனே என்னை ஆராய்ந்து … என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும் (சங்.139:23) நமது வேதவாசிப்பும் ஜெபமும் எந்நாளும் நம் வாழ்வோடு ஒன்றித்து இருக்க கர்த்தருடைய சமுகத்தில் காத்திருப்பதற்கான நேரங்களை ஒதுக்கி நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம். கர்த்தர் நம்மை கழுவும்படியாக ஒப்புவித்து ஜெபிப்போம்.

என்றும் நன்றியுணர்வுடன்

தியானம்: 2020 ஜூலை 30 வியாழன் | வேத வாசிப்பு: லூக்கா 17:11-19

கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன். அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும் (சங்.34:1)

சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் வங்கியில் என்னுடன் பணிபுரிந்த ஒரு சகோதரியை சில மாதங்களுக்கு முன்பு சந்திக்க நேர்ந்தது. அவள் இப்பொழுதும் அதே வங்கியில் பதவி உயர்வு பெற்று பணியாற்றுகிறாள். “இருபது வருடங்களுக்கு முன்னர் நீங்கள் கற்றுத்தந்த காரியங்களும் வழிகாட்டல்களுமே என்னை இந்நிலைக்கு உயர்த்தியது, மிக்க நன்றி!” என்று தான் பெற்றுக்கொண்ட நன்மையான காரியத்திற்கு அவள் நன்றி கூறினாள். என்றோ பெற்ற நன்மைக்கு இன்னமும் மனதில் வைத்து நன்றி சொல்கிறாளே என்று எண்ணி வியந்தேன். செய்நன்றியை அந்நாளிலே மறந்துபோகும் உலகில், இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

இயேசுவிடம் வந்து சுகம்பெற்றுக் கொண்ட குஷ்டரோகிகள் பத்துபேரில் ஒருவன் மாத்திரமே நன்றியுணர்வுடன் திரும்பிவந்து உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி, அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினான். அவன் ஒரு நல்ல சமாரியனாயிருந்தான். தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொரு வரும் திரும்பி வரவில்லை. ஆம், மற்றவர்களும் சுகம் பெற்றார்கள், ஆனால், இயேசு கூறியதுபோல இவனுடைய விசுவாசமோ அவனை இரட்சித்தது. மட்டுமல்ல, அந்த மனிதன் இயேசுவிடமிருந்து தெய்வீக விடுதலையை ஆசீர்வாதமாகச் சுதந்தரித்துக்கொண்டதற்காக நன்றியுள்ள இருதயத்துடன் அவரைத் தேடி வந்தான். என்றும் நன்றியறிதல் உள்ளவர்களாய் இருங்கள் (கொலோ.3:15) என்று வசனம் கூறுகிறது.

அன்பான தேவபிள்ளையே, நம்முடைய வாழ்விலும் தேவனிடமிருந்து நாம் பெற்றுக்கொண்டுள்ள நன்மைகளை எண்ணிமுடியுமா? நாம், அவருக்கு என்றும் நன்றியறிதலுள்ளவர்களாக வாழ்கின்றோமா? அவர் நமக்குச் செய்த நன்மைகளை நித்தமும் நினைத்து நன்றியுடன் அவரிடம் கிட்டிச்சேருவதற்கு மறந்து விடாதிருப்போம். சங்கீதக்காரனைப்போல எக்காலத்திலும் அவருக்கு நன்றியுள்ள இருதயத்துடன் அவரை ஸ்தோத்தரிப்போம். அவரைத் துதிக்கின்ற துதி நமது வாயில் எப்பொழுதும் இருக்கட்டும். அவர் நம்மில் முதல்முதலாக அன்பு கூர்ந்தாரே. இதற்கு மாறுத்தரமாக நாமும் அவரில் நன்றியறிதலுடன் அன்பு கூருவோம்.

நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; துதி செய்வது செம்மையானவர்களுக்குத் தகும் (சங்கீதம் 33:1).

ஜெபம்: என் நல்ல தேவனே, “எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன்” என்று பாடுகின்ற நான் அதன்படியே வாழ எனக்குக் கிருபை தாரும். ஆமென்.