ஜெபக்குறிப்பு: 2020 ஆகஸ்டு 31 திங்கள்

என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன் (யோவான்14:27) வாக்குப் பண்ணின ஆண்டவர்தாமே உலகம் கொடுக்கவும் எடுக்கவும் கூடாத சமாதானத்தைத் தந்து நம்மை நடத்தினார். அவருக்கே சகல கனத்தையும் மகிமையையும் செலுத்தி அவரை ஸ்தோத்திரித்து மகிமைப்படுத்துவோம்.

நீ சந்திக்க ஆயத்தமா?

தியானம்: 2020 ஆகஸ்ட் 31 திங்கள் | வேத வாசிப்பு: யோபு 19:23-29

இதோ, மேகங்களுடனே வருகிறார். கண்கள்யாவும் அவரைக்காணும். …பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப்பார்த்துப் புலம்புவார்கள் (வெளி.1:7).

“வாழ்க்கையிலே இனிமேல் சந்திக்கவே மாட்டேன் என்று எண்ணிய, மனதளவில் நினைக்காமல் மறந்துவிடப்பட்ட ஒருவர், திடீரென நமக்கு முன்னே வந்தால் எப்படியிருக்கும்?”

ஒருதடவை ஒரு ரயில் நிலையத்தில் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. இருவரும் திகைத்துவிட்டோம். அவர் எனக்குச் செய்த துரோகத்தனமான செயல்தான் என் கண்முன்னே வந்தது. ஆனால் அடுத்தகணமே, “நான் ஆண்டவரின் பிள்ளை என்ற எண்ணம் மேலோங்க, அவரை வாழ்த்திவிட்டு வந்துவிட்டேன்” என்று ஒருவர் தன் அனுபவத்தை நினைவுகூர்ந்து சிரித்துக்கொண்டார். இந்த உலகம் ஏதோ தான் வெற்றி பாதையில் ஓடுவதுபோல ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், அது தன் முடிவையே நோக்கி ஓடுகிறது என்பதை நாம் நினைத்து பார்க்கிறதில்லை. அந்த முடிவின் நிகழ்வைத்தான் யோவான் வர்ணிக்கிறார். உலகம் தன் மீட்புக்காக வந்தவரை, தானே கொலை செய்துவிட்டதையே மறந்து, நவீன பாதையிலே வெற்றி நடைபோடுகிறது. தான் யாரை எதிர்கொள்ள ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை எண்ணி பார்க்கக்கூட உலகத்துக்கு நேரமில்லை. ஆனால், அந்த மகிமையானதும் பயங்கரமானதுமான நிகழ்வைக்குறித்து அறிந்திருக்கிற நாமும் அவ்விதமாக அஜாக்கிரதையாக வாழமுடியாது. வேதாகமம் ஆச்சரியமான ஒன்று; ஏனென்றால் அது தேவவார்த்தை. பழைய ஏற்பாட்டில் 18வது புத்தகமாக இணைக்கப்பட்டிருந்தாலும் யோபு பக்தன், ஆபிரகாம் காலத்து மனுஷன். ஆக, தீர்க்கதரிசிகள் தோன்றுமுன், ஆபிரகாம் ஆசீர்வதிக்கப்படுவதற்குமுன், யோபு, உயிரோடிருக்கும் தன் மீட்பர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார், தன் சொந்தக் கண்களே அவரைக் காணும் என்று சொல்லிவிட்டார்.

பாபிலோனிலிருந்து திரும்பி வந்த யூதரிடம், “அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, எனக்காகப் புலம்பி, எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்” (சக.12:10) என்றார் கர்த்தர். தன்னிச்சைப்படி திசைதெரியாமல் சுழன்றுகொண்டிருக்கும் இந்த உலகம் ஒருநாள் எதிர்பாராமல் திகைக்கும். யோவானுக்குக் காரியங்களை வெளிப்படுத்தியவர் நிச்சயம் வருவார். வருவேன் என்பவர் வருவார். இதைப் பிறருக்கும் நாம் அறிவிக்கவேண்டுமல்லவா! நாம் அவரை நிச்சயம் காண்போம். அன்று அவரைக் குத்தினவர்களாக நின்று புலம்புவோமா? அவரை மெய்யாகவே சேவித்தவர்களாக நின்று அவரை முகமுகமாய் சந்திப்போமா?

உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள் (அப்.1:11).

ஜெபம்: பரலோகத்திலிருக்கும் எங்கள் பரம பிதாவே, மரணமோ, வருகையோ எது முந்தினாலும் கிறிஸ்துவைச்; சந்திப்பதற்கு நான் ஆயத்தமாக எனக்கு கிருபை தாரும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2020 ஆகஸ்டு 30 ஞாயிறு

“பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும்” (சங்.22:27). அகில உலகமெங்கும் நடைபெறும் ஆராதனைகளுக்காகவும் ஆராதனையில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவரும் புத்தியுள்ள ஆராதனை செயயும் வண்ணமாக தங்கள் சரீரங்களை தேவனிடத்தில் ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்கவும் மன்றாடுவோம்.

ஜெயங்கொள்வேனா?

தியானம்: 2020 ஆகஸ்ட் 30 ஞாயிறு | வேத வாசிப்பு: வெளி.3:18-22

“உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன் (வச.18). மனந்திரும்பு (வச.19). ஜெயங்கொள்ளுகிறவனெவனோ என்னோடேகூட உட்காரும்படி… (வச.21)

“ஆலோசனை, புத்திமதி நான் சொல்லலாம். ஆனால், அதன்படி நடப்பதா இல்லையா என்பதை நீதான் தீர்மானிக்கவேண்டும்” என்று தகப்பன் சொல்லக் கேட்ட மகன், “அப்பா, நான் உங்களைப்போலவே இருக்க ஆசைப்படுகிறேன்” என தகப்பன் மார்பிலே சாய்ந்தான். நல்லதும் சரியானதும், நாம் ஜெயம் பெறத்தக்கதுமான ஆலொசனைகள் நமக்கு ஏராளமாகவே கிடைக்கிறது. ஆனால், நாமேதானே தீர்மானிக்க வேண்டும்!

“ஆலோசனைக் கர்த்தர்” சபைக்கு ஆலோசனை தருபவர். ஆண்டவர் வாசலில் நிற்கிறார், தம்முடன் அவர் இல்லை என்பதைக்கூட உணரமுடியாமல், போலி திருப்தியில் இருக்கிற சபையின் உள்ளான நிர்ப்பாக்கியத்தை உணர்த்திய ஆண்டவர், அதைச் சரிப்படுத்துவதற்குரிய வழிகளையும் காட்டுகிறார். உன் பொன்னிலே, உன் ஐசுவரியத்திலே நீ திருப்தியாயிருக்கிறாய்; ஆனால், பொன்னும் வெள்ளியும் என்னுடையது. அது எப்போதும் உன்னிடத்தில் நிலைக்காது. நீ என்னிடத்தில் வா, என்றைக்கும் மாறாத மங்காத புடமிடப்பட்ட பொன்னை நான் உனக்குத் தருகிறேன் என்கிறார் ஆண்டவர். புடமிடப்பட்ட விசுவாசம், மாசற்ற திவ்விய சுபாவம் தேவனிடமே உண்டு. அடுத்ததாக, தங்கள் உற்பத்தி ஆடையில் பெருமை கொண்டிருக்கிறவர்களைப் பார்த்து கர்த்தர் கூறுகிறார்: நாளை இது பொட்டரித்துப்போம்; அழிந்துபோம். என்றும் அழியாத என் நீதியின் ஆடையை அந்த வெண்வஸ்திரத்தை என்னிடம் பெற்றுக்கொள் என அழைக்கிறார். மேலும், கண்களுக்கு மருந்துபோடும் உன் கண்களுக்கு யார் கலிக்கம் போடுவது என ஆண்டவர் கேட்கிறார். தேவன் காணும்விதமாக நாம் காணவேண்டுமானால், அவர் நமது கண்களை ஆளவேண்டும். அப்போதுதான் நமது நிர்வாணமும், அவலட்சணமும் நமக்கு தெரியும். மனந்திரும்பவேண்டிய அவசியத்தை உணரமுடியும்.

நமது பெருமைகளைக் குப்பையாக எறிந்துவிட்டு நம்மை தாழ்த்தி, கிறிஸ்துவின் நீதியின் ஆடையைப் பெற்றுக்கொள்ள மனந்திரும்புவோம். தேவ பார்வையுடன் நமது பார்வையை இணைத்து, உலகத்தாலும் சத்துருவாலும் வருகின்ற சோதனைகளை பரிசுத்தாவியானவரின் பெலத்தால் ஜெயிப்போமாக. அப்போது ஜெயங்கொண்டு, தேவராஜ்யத்தின் பிள்ளைகளாக நாம் பிதாவின் சந்நிதானத்தில் தலைநிமிர்ந்து நிற்கலாமே! இதைவிட்டு, மனம்போனபடி வாழ்ந்துகொண்டு, நான் கிறிஸ்துவுடன் என்றும் இருப்பேன் என்று எப்படி கனவு காணமுடியும்? நம்மை ஆராய்ந்து பார்க்கும்படிக்கு தேவ ஆவியானவர் கரங்களில் நம்மை விட்டுவிடுவோமாக. நித்தியத்தை நாமும், பிறரும் இழந்து விடாதபடிக்கு எழுந்து பணி செய்வோமாக. வாசலில் நிறுத்தாமல், நமக்குள்ளே ஆண்டவர் ஆட்சி செய்ய வரவழைப்போமாக.

ஜெபம்: ராஜரீகம் பண்ணும் தேவனே, நீர் எங்களில் வாசம் பண்ணி ஆட்சி செய்யும்படியாக எங்களது ஆவி, ஆத்துமா, சரீரத்தை ஒப்புக்கொடுக்கிறோம். ஆமென்.