ஜெபக்குறிப்பு: 2020 ஆகஸ்டு 3 திங்கள்

கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன் (சங்.13:6). கடந்த மாதத்தில் பங்காளர்களுடைய தேவைகளுக்காக ஏறெடுத்த ஜெபங்களைக் கேட்டு ஆசீர்வாதமடைந்த குடும்பங்களுக்காக தேவனைத் துதிப்போம். பதிலுக்காக காத்திருக்கிற பிள்ளைகளும் சோர்ந்து போகாமல் பெலப்பட வேண்டுதல் செய்வோம்.

தேவன் எனக்கு யார்?

தியானம்: 2020 ஆகஸ்ட் 3 திங்கள் | வேத வாசிப்பு: வெளி. 1:1-3

அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை. சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும் (ஏசா 9:7).

தொலைக்காட்சியில் திடீர் செய்தி, அல்லது முக்கிய செய்திகள் வருகிறது என்று நினைத்தாலே சிலரது மனதிலே ஒருவித கலக்கம் ஏற்படத்தான் செய்கிறது. “இதனாலேயே செய்தி வேளையில் தொலைக்காட்சி பார்ப்பதே இல்லை” என்று சொல்கிறவர்களும் உண்டு. இந்தச் செய்திகளில், நடந்தவை, நடக்கிறவை, நடக்கலாம் என்று கருதப்படுகிறவை எல்லாம் கலந்திருக்கும். இவை நமது மனதுக்கு ஆறுதலோ நம்பிக்கையோ கொடுப்பது மிக அரிது.

இங்கே, தேவன் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புவித்து, இவர் தம்முடைய தூதனை அனுப்பி யோவானுக்கு வெளிப்படுத்தியவற்றை ஒரு “நியூஸ் ரிப்போர்ட்” போல யோவான் தந்திருக்கிறார். இந்தச் செய்திகள் நிகழ் காரியங்களையும் வருங்காரியங்களையும் அறியத்தருகினறன. இவை விசுவாசத்தினிமித்தம் துன்பங்களை அனுபவித்த முதலாம் நூற்றாண்டு விசுவாசிகளுக்கு மாத்திரமல்ல, இன்று நமக்கும் தைரியத்தை தரத்தக்கவை. ஏனெனில், தீமையை முற்றாக அழித்து, ஜெயம் கொள்ளும்படி, தேவன் மனித சரித்திரத்தில் இடைப்படுவார் என்ற நம்பிக்கை உறுதி இத்தீர்க்கதரிசன வசனங்களில் தரப்பட்டுள்ளது. இவை நமக்கு ஓர் எச்சரிப்பையும் நம்பிக்கையையும் தருகின்றது.

இன்னுமொரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். நடக்கின்ற நடக்கப் போகின்ற சம்பவங்களைப் பார்க்கிலும், அவற்றை நடப்பிக்கிறவரையே இந்த தீர்க்கதரிசன வாக்கியங்களின் மையமாகவும், முதன்மையாகவும் இருக்கிறார். இப்படியாகுமோ அப்படியாகுமோ என்று அங்கலாய்க்காமல், நமது வாழ்வைத் தேவனுக்கு ஏற்றதாக வாழவேண்டியதன் அவசியத்தையே இத்தீர்க்கதரிசன வாக்கியங்கள் நமக்கு விளங்க வைக்கின்றன. எதிர்கால முன்னறிவிப்பு மட்டுமின்றி, கர்த்தாதி கர்த்தர் யார், அவரது மகத்துவம் மாட்சிமை எப்படிப்பட்டது, அவர் என்ன செய்வார் என்பதையெல்லாம் இந்த வாக்கியங்களில் யோவான் தெளிவுபடுத்தியுள்ளார். தேவனின் குணாதிசயத்தையும் அவர் அளிக்கும் வாக்குறுதிகளையும்கூட இவை கூறுகின்றன.

ஆகவே, இந்த வாக்கியங்கள் விளங்காதிருப்பது நியாயமில்லை. இப்படியிருக்க, நாம் இன்று என்ன நோக்கோடு இந்தத் தீர்க்கதரிசன வாக்கியங்களைப் படிக்கிறோம்? சம்பவங்களாகவா? அல்லது, சம்பவங்களிலும் உயர்ந்தவரையா? நமது கண்ணோக்கு யார் மீது?

மனுஷகுமாரனுடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும் (தானியேல் 7:14).

ஜெபம்: அன்பின் தேவனே, எல்லாக் காலங்களுக்கும் மேலாக உயர்ந்தவரானவரும் சகல மகிமைக்கும் கனத்துக்கும் உரியவரான உம்மையே நான் வணங்குகிறேன். ஆமென்.