ஜெபக்குறிப்பு: 2020 அக்டோபர் 31 சனி
கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர் (சங்.119:65). இந்த மாதத்தில் இந்த கடைசி நாள் வரைக்கும் வழிநடத்தி வந்த நம்முடைய தேவைகள் அனைத்தையும் சந்தித்து, போஷித்து வழிநடத்தி வந்த நம் தேவனை ஸ்தோத்திரிப்போம். வருகிற புதிய மாதம் ஆசீர்வாதமாக அமைய மன்றாடுவோம்.
விலையேறப்பெற்ற கல்
தியானம்: 2020 அக்டோபர் 31 சனி | வேத வாசிப்பு: 1பேதுரு 2:4-10
…அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான் (ஏசா.28:16).
ஒரு குழந்தையிடம் ஒரு இரண்டாயிரம்; ரூபாய் தாளைக் கொடுத்தால் அது என்ன செய்யும்? கிழித்து எறியாதா? லண்டனிலுள்ள பக்கிங்ஹாம் மாளிகையின் ஒரு பகுதியிலே மகாராணிகள் அணிந்த ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அது கண்கொள்ளாத காட்சியாகும் ஒரு துணி, ஒரு நூல், ஒரு தையல்காரர், இவற்றால்தான் நாமும் உடை தயாரிக்கிறோம். ஆனால் இந்த உடைகள் ஆக்கப்பட்ட துணியை பார்த்தால் நாம் உடை தயாரிக்கிற துணிபோலவே தெரிகிறது. ஆனால் அதன் மதிப்பு பெரிது. அதிலும் அந்தத் துணியில் தைத்த ஆடையை மகாராணி அணியும்போது அதன் மதிப்பு இன்னமும் அதிகமாகிறது. அவற்றை நாம் அணிந்தால் எப்படியிருக்கும்?
எதுவும் அது இருக்கவேண்டிய சரியான இடத்திலிருந்தால் மட்டுமே எதற்கும் ஒரு மதிப்புண்டு. பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாகிய கிறிஸ்துவில் நிலைத்திருந்து, அவரது வார்த்தைகளின்படி நடக்கின்றவர்கள், இந்த பாடு நிறைந்த உலக ஓட்டத்திலே ஒரு போதும் பதறிப்போக முடியாது. இந்த விலையேறப்பெற்ற கல்லில் அஸ்திபாரமிடப்பட்ட நாம் ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் வாழுகின்ற ஆசீர்வாதத்தைப் பெற்றுகொண்டிருக்கிறோம். அந்த வார்த்தையை விசுவாசித்து அதன்படி நடக்காதவர்களோ, அந்தக் கல்லினால் இடறி, கன்மலையாகிய கிறிஸ்துவில் அடைக்கலம் பெறும் சிலாக்கியத்தை இழந்து வீழ்ந்து போகிறார்கள்.
பிரியமானவர்களே, நாம் இன்று யாருடைய கரங்களில் இருக்கிறோம்? நாம் யார்? நாம் எதில் அஸ்திபாரமிடப்பட்டிருக்கிறோம்? நாம், விலையேறப்பெற்ற கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்கப்பட்ட விலையேறப் பெற்ற கற்களா? அல்லது நாம் விலையேறப் பெற்றவர்கள் என்பதை மறந்து சாத்தான் கைகளில் நம்மைக் கொடுத்துவிட்டோமா? கிறிஸ்துவின் கரங்களில் இருக்கும்வரைக்கும் நமது மதிப்பே வேறு. மாறாக, நம்மை இந்த உலகுக்குக் கொடுத்து நமது மதிப்பை நாம் இழந்து விடாதிருப்போமாக. நாம் தேவனுக்குச் சொந்தமானவர்கள். அவருக்கே மகிமையையும் புகழ்ச்சியையும் தருகின்ற பிள்ளைகளாக என்றும் மூலைக்கல்லாகிய அவரில் நிலைத்திருப்போமாக.
நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும், பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டிய வார்த்தைகள்… (யாத்.19:6).
ஜெபம்: அன்பின் தேவனே, என் வாழ்வின் அஸ்திபாரத்தை நான் கிறிஸ்துவிலும் அவருடைய வார்த்தையிலும் உறுதியாகவே போட எனக்குக் கிருபை தாரும். ஆமென்.
வாக்குத்தத்தம்: 2020 அக்டோபர் 30 வெள்ளி
இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான். (யாக்.1:8)
எரேமியா 45-48; 2தீமோத்தேயு 4
ஜெபக்குறிப்பு: 2020 அக்டோபர் 30 வெள்ளி
கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின் மேலுமுள்ளது (சங்.145:9). உலகமெங்கும் ஏறத்தாழ 200 நாடுகளில் பரவி உள்ள கொரானா வைரஸ் தாக்கத்திலிருந்து உலக மக்களைப் பாதுகாக்கவும் சிகிச்சைக்கான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தரவும் மன்றாடுவோம்.
உண்மைத்துவமும் உற்சாகப்படுத்துதலும்
தியானம்: 2020 அக்டோபர் 30 வெள்ளி | வேத வாசிப்பு: 1தீமோ.1:12-18,4:12-16
…கிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன் (1தீமோ.1:12).
“முதலில் நீங்கள் குடிப்பதை நிறுத்திவிட்டு, பின்னர் என்னைத் திருத்துங்கள்” என்று வாலிப மகன் சொன்னபோது, வெட்கத்தால் தலை குனிந்தார் ஒரு தகப்பன். தினமும் வேதம் வாசித்து ஜெபிக்கும் பெற்றோரால்தான் பிள்ளைகளையும் ஜெபத்தில் வழி நடத்த முடியும். மனந்திரும்பி, சாட்சியுள்ள வாழ்வு வாழும் ஒருவரே அடுத்தவனையும் மனந்திரும்புதலுக்குள் வழி நடத்த முடியும். தனது மனந்திரும்பிய வாழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்ட தனது முன்னிலைமை எப்படியாக இருந்தது என்பதையும் எடுத்துக் கூறும்போது அது மற்றவரை இன்னமும் பெலப்படுத்துமல்லவா!
பவுல் ஒருபோதும், தன் முன்னிலைமையை மறக்கவில்லை. தூஷிக்கிறவனாக, துன்பப்படுத்துகிறவனாக, கொடுமை செய்கிறவனாகத்தான் இருந்ததையும், தானே பாவிகளில் பிரதான பாவி என்பதையும் அவர் வெளிப்படையாகவே எழுதுகிறார். அப்படிப்பட்ட தன்னில் தேவ கிருபை எப்படிப் பூரணமாகவே பெருகியது என்பதையும் எடுத்துரைக்கிறார் (1தீமோ.1:14). இந்த வார்த்தைகள் நிச்சயம் தீமோத்தேயுவின் விசுவாசத்தைப் பெலப்படுத்தி, திடப்படுத்தியதுடன், கர்த்தரில் தீமோத்தேயு கொண்டிருந்த அன்பையும் பெருகச்செய்தது என்பதில் சந்தேகமே இல்லை. “கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும், நல் மனசாட்சியிலும், மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே” (1தீமோ.1:5) என்ற பவுலின் வார்த்தைகள் இளம் சீஷனாகிய தீமோத்தேயுவை அதிகமாகப் பெலப்படுத்தியது. மேலும், மாதிரியாயிரு. ஜாக்கிரதையாயிரு. அசதியாயிராதே. நிலைத்திரு என்ற பவுலின் உபதேசங்கள் தீமோத்தேயுவின் சுவிசேஷ ஊழியத்தை அதிகமதிகமாக ஊக்குவித்தது.
அன்பானவர்களே, நீங்கள் இரட்சிப்படைந்த காலத்தை சிந்தித்து பார்ப்பீர்களா? இன்று நாம் கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாக வாழுவது மெய்யானால், உண்மைத்துவத்துடன் அநேகரைக் கிறிஸ்துவுக்குள் வழி நடத்தி, சீஷத்துவ வாழ்வில் அவர்களை ஊக்குவிக்க வேண்டிய பொறுப்பு நமக்குண்டு என்பதை மறக்கக்கூடாது. நம்முடைய மாதிரியான வாழ்வுதான் மெய்யான சாட்சி. தேவனுக்கு முன்பாக உண்மைத்துவத்துடன் வாழ்ந்து, பிறரை ஊக்குவித்து, கர்த்தருக்காக அநேக சீஷர்களை உருவாக்க முன்வருவோமாக. ஆண்டவர் நம்மை இரட்சித்தது வீணுக்கல்லவே! பவுலின் வார்த்தைகளினால் தீமோத்தேயு உரமூட்டப்பட்டதுபோல், நமது வார்த்தைகளும் மற்றவர்களை உரமூட்டுவதாக இருக்கட்டும்
நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு. நான் வருமளவும் வாசிக்கிறதிலும் புத்தி சொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு (1தீமோ.4:13).
ஜெபம்: அன்பின் தேவனே, சேற்றில் வாழ்ந்த என்னை தூக்கியெடுத்தீரே, நான் பிறருக்கு ஒரு மாதிரியாகவும், உற்சாகப்படுத்துகிறவனாகவும் இருக்க என்னை அர்ப்பணிக்கிறேன். ஆமென்.