ஜெபக்குறிப்பு: 2020 நவம்பர் 30 திங்கள்

அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள் (1சாமு.12:24) இந்நாள் வரையிலும் கர்த்தர் நமக்கு எத்தனை நன்மைகளை அற்புதங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்து கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். புதிய மாதத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் அவருடைய கரத்திலே நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.


நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும் (பிலி.4:6,7).

பயப்படும் சிறுவர்கள்!

தியானம்: 2020 நவம்பர் 30 திங்கள் | வேத வாசிப்பு: உபாகமம் 6:6-12

நீதிமான் தன் உத்தமத்தில் நடக்கிறான்,அவனுக்குப் பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாய் இருப்பார்கள் (நீதி.20:7).

ஆசிரியர், ஒரு மாணவனின் பெற்றோரிடம், “உங்கள் மகன் வகுப்பில் மற்ற பிள்ளைகளை அடிக்கிறான். இதற்குக் காரணம் என்ன? நீங்கள் இதைக் கவனித்துக் கண்டிப்பதில்லையா” என்று கேட்டார். அந்தப் பெற்றோர் திரும்பி வரும்போது தங்களுக்குள் என்ன பேசிக்கொண்டார்கள் தெரியுமா? மகன் குழந்தையாய் இருந்தபோது, அவனைத் தூக்கி வைத்துக்கொண்டு, “இந்த மாமாவை ஒருதரம் அடி, அம்மாவுக்கு ஒரு அடி கொடு, அக்காவுக்கு ஒரு அடி கொடு” என்று சொல்லிச்சொல்லி, குழந்தை அடித்ததைப் பார்த்து நாம் மகிழ்ந்த ஒரு காலமுண்டு. இப்போது அதுவே அவனுக்கு அழிவாய் அமைந்துவிட்டது என்றனர்.

கடவுளின் வழிநடத்துதலையும், அவரது மகத்துவத்தையும், அவரது சத்திய வார்த்தைகளையும், கடவுள் நம்பிக்கையையும் பிள்ளைகளுக்குச் சிறுவயது முதல் சொல்லிக்கொடுத்து, அவற்றை அவர்கள் மனதில் ஆணித்தரமாக பதிக்கவேண்டியது பெற்றோரின் கடமை. அப்போதுதான் அவர்கள் கடவுளுக்குப் பயந்தவர்களாகவும், உலக ரீதியான பயமற்ற தைரியமான பிள்ளைகளாக தன்னம்பிக்கையோடே வளருவார்கள். இதைத்தான் இங்கே உபாகமத்தில் இன்றைய தியானப்பகுதியில் பார்க்கிறோம். வீட்டு வாசல்களிலும், கைகளிலும் தேவனுடைய வார்த்தைகளைப்போட்டு அவற்றை எப்போதும் நம் நடுவில் ஞாபகக்குறியாக வைக்கவேண்டும்.

சில பிள்ளைகள் பயந்த சுபாவமுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்களுக்குள் நாம் சிறுவயது முதலே நம்பிக்கையையும், உறுதியையும் வளர்க்கவேண்டும். நமக்கு துணையாகக் கர்த்தர் எல்லா வேளைகளிலும் இருக்கிறார் என அவர்களுக்கு கூறவேண்டும். பிள்ளைகளின் பயந்த சுபாவத்தைப் பயன்படுத்தி மென்மேலும் அவர்களை பயமுறுத்தக் கூடாது. அது மிகவும் தவறான காரியமாகும். அது எதிர்காலத்தில் பிள்ளையை உறுதியற்றவனாக மாற்றிவிடும். பெற்றோராகிய நாம் ஜாக்கிரதையுள்ளவர்களாய் நடந்துகொள்ள வேண்டும். வயதுசென்ற போதும் ஊசிபோடுவதற்கு தனக்குப் பயம் என்று சொன்ன ஒருவர், தான் சிறுவனாக இருக்கும்போது டாக்டர் வந்து ஊசி போடுவார் என்று தனது பெற்றோர் தன்னைப் பயங்காட்டியதுதான் இதற்குக் காரணம் என்றார். நமது பிள்ளைகள் நமது பொறுப்பு. அவர்களை நல்வழியில் தேவனுக்குரியவர்களாய் வளர்ப்பது மிக முக்கியம். நாம் எத்தனை காலத்துக்கு அவர்களுடன் இருக்கப்போகிறோம்? அவர்களும் சுயமாக வாழக் கற்றுக்கொள்ளவேண்டும் அல்லவா!

தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார் (2தீமோ.1:7).

ஜெபம்: அன்பின் பிதாவே, கர்த்தர் அருளிய ஈவாகிய சிறுபிள்ளைகளை பயமற்ற தைரியமான பிள்ளைகளாக கர்த்தருக்குள் வளர்ப்பதற்கு ஒவ்வொரு பெற்றோருக்கும் வேண்டிய கிருபைகளுக்காக ஜெபிக்கிறோம். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2020 நவம்பர் 29 ஞாயிறு

தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக (சங்.67:3) என்ற வாக்குப்படி இரட்சிக்கப்படுகிறவர்கள் அனுதினமும் சபையில் சேர்க்கப்பட்டு, சகல ஜனங்களும் தேவனைத் துதித்து மகிமைப்படுத்தும்படி சபைகளில் உயிர்மீட்சி உண்டாக ஜெபிப்போம்.

முதுமையின் பயம்!

தியானம்: 2020 நவம்பர் 29 ஞாயிறு | வேத வாசிப்பு: சங்கீதம் 71:1-24

முதிர்ந்த வயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும் (சங்கீதம் 71:9).

“உங்கள் பாட்டி எப்படி இருக்கிறார்கள்” என ஒருவரிடம் விசாரித்தபோது, அவர்,“பாட்டியின் சகோதரர் எல்லாருமே எண்பது வயதில் இறந்துவிட்டார்களாம் ஆதலால் இப்பொழுது தனக்கும் எண்பது ஆகிவிட்டது நானும் இறந்துவிடுவேன் என்று சொல்லி பயத்தினால் நித்தமும் புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அதற்காகவே வெளிநாட்டிலிருக்கிற மகன் பாட்டியைப் பார்ப்பதற்காக வர இருக்கிறார்” என்று ஒரு பெரிய கதை சொன்னார். முதுமை பலருக்கு பயத்தை ஏற்படுத்து வதை மறுக்கமுடியாது.

71ஆம் சங்கீதத்தை எழுதியவர், ஒரு மனிதனுடைய வாழ்வில் அவனது குழந்தைப் பருவத்திலிருந்து முதிர்வயது வரைக்கும் தேவனே நமக்கு உறுதுணை என்பதையும், நமது வாழ்வுதான் அவருக்குச் சாட்சி என்பதையும் அழகாகப் பாடி வைத்துள்ளார். சிறுவயது முதல் தேவனே தனக்கு துணையாகவும், நம்பிக்கையாகவும் இருந்துவந்தார் என்று அவர் தனது நம்பிக்கையைத் தெளிவாக அறிக்கையிட்டுள்ளார். அவர் தனது முதிர்வயதில் தான் செய்யும் ஊழியத்தைக் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். “இந்தச் சந்ததிக்கு உம்முடைய வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், நான் முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக” (வச.18) என்று ஜெபிக்கிறார்.

தேவனுடைய பிள்ளைகளுக்கு வயது ஒரு தடையே அல்ல. சிறுவயதோ முதிர்வயதோ எந்த வயதினராயினும், தேவன் நம்மோடிருக்கிறார் என்ற நம்பிக்கையும், தேவன்மீது பற்றுதலும், தேவனின் மகத்துவத்தை பிறருக்கு அறிவிக்க வேண்டும் என்ற தாகமும் இருக்குமானால் தேவன் நிச்சயம் நம்மைப் பயன்படுத்துவார். முதிர்வயதின் பெலவீனம் நம்மை வருத்தினாலும், இருந்த இடத்தில் இருந்தே நாம் தேவனுக்கு ஏராளமான பணி செய்யலாம். ஏனென்றால் தேவன் பெலப்படுத்துகிறவர். இன்று முதுமை வந்ததும் அதனுடன் சேர்ந்து, இனி என்னவாகுமோ என்ற பயமே அநேகரையும் வருத்துகிறது. எப்ப சாவு வருமோ என்ற எண்ணம் வேறு! நம்மில் யாராவது அப்படியான ஒரு நிலையில் இருக்கிறீர்களா? என்னால் ஒன்றுமே முடியாது என்று சோர்ந்துபோய் அமர்ந்துவிட்டீர்களா? கர்த்தருக்காய் எழும்பிடுங்கள். தேவன் உங்களைக்கொண்டும் பெரிய காரியம் செய்வார். நான்கு சுவர்களுக்குள் நாம் செய்கின்ற ஜெபம், பகிரங்க ஊழியத்தைவிடவும் அதிக பலனைத் தருமல்லவா! ஆகவே, வயதை மறந்து தேவபெலனைத் தரித்துக்கொண்டு தேவபணி செய்வோமாக.

அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள் (சங்.92:15).

ஜெபம்: பெலனாகிய கர்த்தாவே, முதுமையின் பயத்தோடு உள்ள ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கிறோம். தாங்குவேன், ஏந்துவேன், சுமப்பேன், தப்புவிப்பேன் என்றீரே. உமது கரத்திலே எங்களை ஒப்புவிக்கிறோம். ஆமென்.