வாக்குத்தத்தம்: 2020 நவம்பர் 1 ஞாயிறு

என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும். அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை (சங்.62:5,6).


அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், … நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம். (1கொரி.10:17)
எரேமியா 51,52; தீத்து 2

ஜெபக்குறிப்பு: 2020 நவம்பர் 1 ஞாயிறு

இன்று உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய …வேண்டுதலையும் திருவுளத்தில் கொண்டருளும் (1இரா.8:28).


கர்த்தரின் இரக்கங்களை முன்னிட்டு இப்புதிய மாதத்தை காணச் செய்த தேவனைத் துதிப்போம். என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும் (சங்.62: 5) என்ற வாக்குப்படி கர்த்தர் நம்மையும் நமது குடும்பத்தையும் ஆசீர்வதித்து தேவைகளை சந்தித்து, வழிநடத்த மன்றாடுவோம்.

பயம்

தியானம்: 2020 நவம்பர் 1 ஞாயிறு | வேத வாசிப்பு: லூக்கா 2:8-18

… கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள் (லூக்.2:9).

இரவு வந்துவிட்டால் வீட்டில் தனிமையில் இருக்கப் பயம், வீதியில் போகும் போது என்ன நடக்குமோ என்று ஒருவித பயம், நாள் எப்படி விடியுமோ என்று பயம். இப்படியாக பலவிதமான பயங்களால் அநேகர் பீடிக்கப்பட்டிருப்பதை நாம் கண்டிருக்கிறோம். பயம் என்பது மனிதரை ஆட்டிப்படைக்கும் ஒன்றாக இருக்கிறது. ஆனால் தேவன் அவரது பிள்ளைகளுக்கு, பல தடவைகள் சொல்லிய வார்த்தை என்னவென்றால் “பயப்படாதிருங்கள்” என்பதேயாகும். இந்த வார்த்தையை அநேக தடவைகள் நாம் கேட்டாலும் இன்னமும் பயப்படத்தான் செய்கிறோம்.

தேவதூதன் ஆட்டிடையருக்குக் கொண்டு வந்த செய்தி மகிழ்ச்சியான, உன்னதமான, சமாதானமான ஒரு செய்தி. ஆனாலும், திடீரென தூதனைக் கண்டதாலும், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்ததாலும் இடையர்கள் பயந்தார்கள். ஏனெனில், இது முன்னொருபோதும் நடைபெறாத ஒரு புது நிகழ்வாக இருந்தது. இவர்கள் இதற்கு பழக்கப்பட்டு இருக்கவில்லை. அதனால் பயம் அவர்களைக் கவ்விக்கொண்டது எனலாம். ஆனால் இந்தப் பயத்துக்குப் பின்னால் இருந்ததோ ஓர் அருமையான செய்தி என்பதை நாம் காண்கிறோம். இதேபோல நம் வாழ்விலும் நாம் சில வேளைகளில் தேவையில்லாமல் பயந்து விடுகிறோம். ஆனால், நாம் பயந்த மாதிரி எதுவும் நமக்கு நிகழ்வதில்லை. தேவதூதன் அவர்களைப் பார்த்து, “பயப்படாதிருங்கள், இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்” என்றான்.

நாம் பயந்துகொண்டு கோழைகளைப்போல வாழுவதற்கு அழைக்கப்படவில்லை. பயம் நம்மைப் பெலனற்றவர்களாக ஆக்கிவிடும். தேவனுக்குள் உறுதியடைந்து, பெலன் கொண்டவர்களாய் கழுகுகளைப்போல செட்டைகளை விரித்து உயரப் பறக்கவே அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை மறக்கக்கூடாது. தேவையற்ற பயங்களிலிருந்து நம்மை மீட்க தேவன் வந்து பிறந்தார். அவர் நம்மை எல்லா வேளைகளிலும் தேவையற்ற பயங்களிலிருந்து விடுவிக்க வல்லவராக இருக்கிறார். நாம் அவரை நம்புவோம். அவரே நமக்கு அடைக்கலமும் பெலனும் ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர். பயம் நம்மை ஆட்கொள்ளவிடாமல் தேவபெலன் நம்மை ஆட்கொள்ளும்படியாய் வாழ முயற்சிப்போம். நமக்கு உதவிட தேவாவியானவர் நம்முடனே கூட எப்பொழுதும் இருக்கிறார்.

தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல் பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார் (2தீமோத்.1:7).

ஜெபம்: அன்பின் தேவனே, “பயப்படாதே” என்று அனுதினமும் எங்களைத் திடப்படுத்தி வருகிறீர். வீணான பயங்கள் எங்களை ஆட்கொள்ளாமல் தேவபெலன் எங்களை ஆட் கொள்ள ஒப்புவிக்கிறோம். ஆமென்.

மறைந்திருக்கும் வளங்கள்

அதிகாலை வேளையில்… (நவம்பர் – டிசம்பர் 2020)
– Dr.உட்ரோ குரோல்

இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி  உரைத்ததாவது: நீதிபரராய் மனுஷரை ஆண்டு தெய்வபயமாய்த் துரைத்தனம் பண்ணுகிறவர் இருப்பார். அவர் காலையில் மந்தாரமில்லாமல் உதித்து … சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார் (2 சாமு. 23:3,4).


தாவீது தனது உயிருக்கும் ஆட்சிக்கும் நேரிட்ட சவால்களை எல்லாம் வெற்றியுடன் சமாளித்து நாட்டின் தலை நகர் எருசலேமுக்குத் திரும்பிவிட்டார். யூதாவில் ஏழு ஆண்டுகளும் சமஸ்த இஸ்ரவேலில் முப்பத்து மூன்று ஆண்டுகளும் அரசராக இருந்த அவர் தற்போது எழுபத்தைந்து வயதை அடைந்து இறுதி காலத்தை நெருங்கியிருந்தார்.

தாவீது உண்மையிலேயே ஒரு சிறந்த மனிதர். அவரிடம் அதிகமான திறமைகளும், நுண்ணறிவும் தேவனுடைய கிருபையும் இருந்தன. அவர் ஒரு பராக்கிரமசாலி; மகா தைரியசாலி; இஸ்ரவேலின் இன்பமான சங்கீதக் காரர்; அரசியலில் தீர்க்கமான முடிவெடுத்த அறிவாளி; போரில் வீரச்செயல் புரிந்தவர்; மனிதாபிமானம் நிறைந்தவர்; இப்பண்புகளே அனைவராலும் விரும்பத்தக்கவராக அவரை மாற்றின. யேகோவா தேவனிடத்தில் அவர் அளவற்ற அன்பும் அசைக்க முடியாத நம்பிக்கையும் விசுவாசமும் வைத்திருந்தார். அடிக்கடி தடுமாறி விழுந்தாலும் தேவனைப் பற்றிக்கொள்ளவும், அவரிடம் மன்னிப்பு பெறும்விதத்தையும் அவருக்காக வாழும் விதத்தையும் அறிந்திருந்தார். தேவனுடைய சித்தத்தை அறிந்து அதற்குக் கீழ்ப்படியவும் மெய்யான வாஞ்சையுடையவராய் இருந்தார்.

தாவீதின் இறுதி வசனங்கள் 2 சாமு வேல் 23இல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவ்வதிகாரத்தின் முதல் வசனம் தெரிவிக்கிறது. இது தாவீதின் கடைசி இலக்கிய அல்லது சங்கீத வசனங்களாக இருந்தாலும் 1 இராஜாக்கள் 2ஆம் அதிகாரத்திலேயே அவருடைய கடைசி வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேவன் எதிர்பார்க்கும் ஓர் அரசனின் குணங்களைப் பற்றி இங்கு தாவீது விவரிக்கிறார். அவர் நீதியாய் மக்களை அரசாளவேண்டும் (2சாமு.23:3). அரசனாகவோ பிரதமராகவோ அல்லது தலைவராகவோ இருக்கும் ஒருவரிடத்தில் மனிதாபிமானத்தைவிட நீதியையும் நேர்மையையுமே மற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர் மனித நீதி அனைவரையும் சமம் எனக் காண்கிறது; ஆனால் தேவ நீதியோ மனிதர்கள் தேவனால் உண்டாக்கப்பட்டனர் என கூறுகிறது. எனவே தான் தேவ பக்தியுள்ள ஒரு தலைவர் தேவ பயத்தோடு ஆட்சி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

இஸ்ரவேலை வழிநடத்திச்சென்ற மோசேக்கு அவரது மாமனாகிய எத்திரோ “ஜனங்கள் எல்லாருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம் பேருக்கு அதிபதிகளாகவும், நூறு பேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பது பேருக்கு அதிபதிகளாகவும், பத்துப் பேருக்கு அதிபதிகளாகவும் ஏற்படுத்தும்” (யாத். 18:21) என்று ஆலோசனை அளித்தார். ஓர் ஆட்சியாளர் நீதியுடன் ஆளுவதும் தேவனுக்குப் பயப்படுவதும் மிகமிக அவசியமான காரியமாகும். அனைத்து மக்களுக்கும் நீதி செய்ய தேவைப்படும் தேவ பயத்தை எங்கிருந்து பெற்றுக்கொள்வது? அது மறைந்திருக்கும் நமது வளங்களையே சார்ந்திருக்கிறது.

அனைத்து இயற்கையும் மறைந்திருக்கும் வளங்களையே சார்ந்துள்ளன. அகலமும் ஆழமுமான நதிகளின் தோற்றம் பனிபடர்ந்திருக்கும் மலைகளேயாகும். பெரிய மரங்களின் வலிமை நம் கண்களுக்குப் புலப்படாத வேர்களில் அடங்கியுள்ளது. உலகம் முழுவதும் தனக்கு வேண்டிய நீர் மற்றும் கனிம வளங்களை மறைந்திருக்கும் நிலத்தடியிலிருந்தே பெற்றுக்கொள்கிறது. எந்த நாட்டின் ஆட்சியாளரும் தேவ பயத்துடன் இருந்தால்மட்டுமே மாமனிதராய் இருக்கமுடியும். அந்த தெய்வ பயம் அவரது ஆழ்மனதில் இருக்கும் மறைந்துள்ள வளத்தைப் பொறுத்தே அமையும். எனவேதான் கட்சிப்பற்றுக்கும் அப்பாற்பட்டவராய், அடிப்படை நன்னடத்தையுடன் ஒப்புரவுடைமை உள்ளவரையே ஒரு நாட்டின் தலைவராகத் தெரிந்தெடுக்க வேண்டும்.

தாவீது சுத்தமான, கலப்படமற்ற, தூய பக்தியை தான் வெளிப்படுத்தவில்லை என்பதை அறிந்திருந்தார். தேவனுக்கு பயப்படும் நீதியுள்ள மனிதன் “விடியற்கால ஒளியெனத் திகழ்ந்து, மேகமற்ற காலைக் கதிரவன்” (2 சாமுவேல் 23:4) போன்று கறையற்றவனாய்க் காணப்படுவான். தேவனைத் தேடும் ஒரு மனிதனிடமே இத்தகைய தெளிவும் பிரகாசமும் காணப்படும். அவன் தன்னுடைய அனுதின காரியங்களைத் திட்டமிடும் முன்பதாக அதிகாலையில் தேவனைத் தேடுவான். இத்தகைய ஆட்சியாளர்களை நமக்குத்தர நாம் தேவனிடம் மன்றாடுவோம்.


அதிகாலைப் பாடல்:

தூய்மை பெற நாடு; உன் தேவனிடம் உரையாடு;
கர்த்தர் பாதமே நிலைத்திரு;
அவர் வார்த்தை உட்கொள் என்றுமே;
தேவபிள்ளைகளோடு சேர்ந்திரு,
எளியவரைத் தாங்கிடு; யாவிலும்
தேவ தயவைத் தேட மறவாதே.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

வாசகர்கள் பேசுகிறார்கள்

(நவம்பர் – டிசம்பர் 2020)

[01]
அனுதினமும் கிறிஸ்துவுடன் வாசிக்கும்பொழுது ஒவ்வொரு வார்த்தைகளும் என் ஆத்துமாவைப் புதுப்பித்து ஒவ்வொரு நாளும் ஆண்டவருக்குள் வளரச் செய்கிறது. மனநிறைவும் கிடைக்கிறது. இந்த ஊழியத்தில் பங்கு பெற்றுள்ள சகோதர, சகோதரிகளுக்காக ஜெபிக்கிறேன். ஆண்டவர்தாமே இந்த ஊழியத்தின் எல்லாத் தேவைகளையும் சந்தித்து தொடர்ந்து சிறப்பாக நடைபெற கிருபை செய்வாராக!

Mrs.Darling Gunaranjitham, Tuticorin.


[02]
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகம் சரியாக ஒவ்வொரு நாளும் வாசிக்கும்போது கர்த்தர் நடத்திகொண்டு போவதை உணரமுடிகிறது. தியான புத்தகம் சரியான நேரத்தில் கிடைப்பதற்கு உதவுங்கள். மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்போம்.

Mr.Mani, Dindigul


[03]
சத்தியவசன ஸ்தாபனத்தின் மூலம் நடைபெறும் வல்லமையான ஊழியத்திற்காக ஆண்டவரைத் துதிக்கிறோம். தங்கள் ஊழியம் மேலும் வளர்ச்சி அடையவும் அநேக மக்கள் இயேசுவின் அன்பையும் ஒளியையும் கண்டுகொள்ளவும் ஜெபிக்கிறோம்.

Mr.D.Thangaraj, Kottaram, K.K.dt.


[04]
அன்பான சகோதரருக்கு, அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்தில் 21.8.2020-நாளின் தியானம் (வெளி.3:1-6) சர்தை சபையைப்பற்றி ஆவியானவர் வெளிப்படுத்தின செய்தி என்னை உற்சாகப்படுத்துகிறதாகவும் சவால் நிறைந்ததாகவும் இருந்தது. ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Mr.Asir Thomas, Kallidaikurichi.


[05]
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நான் வாட்ஸ் அப் – ஒரு குருப்பில் உள்ளேன். அந்த குரூப்-பில் உங்களது தியான செய்திகளும் வரும். அதிலுள்ள வேதவாசிப்பு எல்லாவற்றையுமே தவறாமல் பின்பற்றி வருகிறேன். இன்றைக்கு உள்ள தியான செய்தி (செப்டம்பர் 19) கண்களோடு உடன்படிக்கை யோபுவின் புத்தகத்திலிருந்து கொடுக்கப்பட்ட செய்தி ரொம்பவே பயனுள்ளதாக இருந்தது. தியானத்தின் இறுதியில் இடம்பெற்றுள்ள ஜெபமும் எனக்கு அதிக பிரயோஜனமாக உள்ளது. என்னுடைய அன்றாட வேத பகுதிகளோடு நான் இவற்றையும் சேர்த்து படிப்பது வேதத்தை ஆராய்ந்து படிக்க ஏதுவாயிருக்கிறது. இவ்விதமாக எங்களை ஆன்மீக வழியில் நடத்துகிற உங்கள் ஊழியங்களுக்காக ஜெபிக்கிறோம் .

Sis.Banumathi, Panakudi.

ஆசிரியரிடமிருந்து…

(நவம்பர் – டிசம்பர் 2020)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இம்மட்டும் நமக்கு உதவி செய்து பாதுகாத்து வந்த அன்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்வருடத்தின் கடைசி பாகத்தில் பிரவேசிக்க உதவி செய்த தேவாதி தேவனை ஸ்தோத்திரிக்கிறோம். இவ்வருடத்தை ஆரம்பிக்கும்போது நாம் எதிர்பார்த்திராத அநேக காரியங்கள் நமது தேசத்திலும் உலகமெங்கும் நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான ஜனங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டும், அநேகர் மரித்துப்போயிருப்பதையும் நாம் அறிகிறோம். தேவனுடைய கண்களிலே ஜனங்களுக்கு தயை கிடைக்கும்படியாக தொடர்ந்து பாரத்தோடு ஜெபிப்போம். “பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு .. அவர்களுக்கு இரங்கத்தக்கதான இரக்கத்தை அவர்களுக்குக் கிடைக்கப்பண்ணுவீராக (1இரா.8:49,50).

சத்தியவசன ஊழியத்தை வருடமுழுவதும் ஜெபத்தோடு தாங்கிவந்த அனைத்து பங்காளர்கள் ஆதரவாளர்கள் யாவருக்காகவும் ஆண்டவருக்கு நன்றி கூறுகிறோம். தங்கள் மனபாரங்கள், வாழ்வின் பிரச்சனைகளைப் பகிர்ந்துகொண்ட பங்காளர்களுக்காகவும், லாக் டவுன் சமயங்களில் வேலை இழந்து, தொழில்கள் பாதிக்கப்பட்டும் வருமானம் இன்றி தவிக்கிற அனைத்து பங்காளர் குடும்பங்களுக்கும் கர்த்தர் புதிய காரியத்தை செய்ய வேண்டுமென்றே பாரத்தோடு தேவனிடத்தில் மன்றாடி வருகிறோம். நிச்சயமாகவே ஆசீர்வாதமான பதில்களை கர்த்தர் குடும்பங்களுக்குத் தந்தருளுவார் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை. இத்தியான புத்தகத்தின் வாயிலாக தாங்கள் பெற்றுக்கொண்ட ஆவிக்குரிய நன்மைகளை எங்களுக்குத் தெரியப்படுத்த மறவாதீர்கள்.

இவ்விதழில் நவம்பர் மாதத்தில் சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் பலவிதமான பயங்களைக் குறித்து தியானங்களை எழுதியுள்ளார்கள். டிசம்பர் மாதத்தில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் இயேசுகிறிஸ்துவின் பிறப்பின் சிறப்புத் தியானங்களையும், ஆண்டவருடைய இரண்டாம் வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்தும் செய்திகளையும் தியானங்களாக எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் அனைத்தும் வாசிக்கிற நம் அனைவருக்கும் எச்சரிப்பூட்டுவதாயும் கர்த்தருடைய வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறதாயும் இருக்க நாங்களும் வேண்டுதல் செய்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்