ஜெபக்குறிப்பு: 2020 நவம்பர் 27 வெள்ளி
கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது (சங்.34:10) பலவிதமான தேவைகளுக்காக ஜெபிக்கக்கேட்ட பங்காளர்களுடைய தேவைகளை தேவன்தாமே அற்புதமாக சந்திக்கவும் நன்மைகளைச் சுதந்தரிப்பதற்கு தடையாயிருக்கிற சகல கிரியைகளையும் அகற்றவும் புதிய வழிகளை கர்த்தர் அவர்களுக்குத் திறந்தருளவும் மன்றாடுவோம்.
பாடுகளைக் கண்டு பயப்படாதே!
தியானம்: 2020 நவம்பர் 27 வெள்ளி | வேத வாசிப்பு: வெளி.2:8-11
நீ படப்போகிற பாடுகளைக் குறித்து எவ்வளவும் பயப்படாதே… (வெளி.2:10).
கர்த்தருக்காய் உண்மைத்துவத்துடன் ஊழியம் செய்கிற பலர் முகங்கொடுக்கின்ற பாடுகளும், அவமானங்களும், அவர்கள் எதிர்கொள்ளும் எதிர்பாராத சூழ்நிலைகளும் பிரச்சனைகளும் சொல்லிமுடியாதவை. கர்த்தரை நம்பி கர்த்தருக்குள்ளாய் வாழும் இவர்களுக்கு ஏன் இத்தனை பிரச்சனைகள் என்ற கேள்வி அநேகரது மனதில் இருக்கலாம். ஏதோ தவறு செய்கிறார்கள்போலும்; அதுதான் தேவன் தண்டிக்கிறார் என சிலர் கூறக்கூடும். ஆனால், உண்மை அதுவல்ல. தேவனுக்குள் உண்மையாய் வாழுவோருக்கு, சாத்தான் கொடுக்கும் பிரச்சனைகள் ஏராளம். எங்கே தேவ ஊழியம் வளருகிறதோ அதைத் தடுக்க அங்கே சாத்தான் வந்து நிற்பான்.
சிமிர்னா சபையின் தூதனுக்கு, “உனது கிரியைகளை அறிந்திருக்கிறேன்” என்று கூறிய கர்த்தர், படப்போகும் பாடுகளைக்குறித்து எவ்வளவேனும் பயப்படாதே என்றார். அதாவது தேவனுக்கு உத்தமமாய் வாழுகிறவனுக்கு நிச்சயம் பாடுகள் இவ்வுலகில் உண்டு. மேலும், இது பிசாசினால் உண்டாயிருக்கும் சோதனை, இதிலும் மரண பரியந்தம் உண்மையுள்ளவனாய் இருக்கும் படிக்கும் சிமிர்னாவுக்குக் கர்த்தர் புத்தி சொல்லுகிறார். அப்பொழுது ஜீவகிரீடத்தை அவன் பெற்றுக்கொள்ளலாம். இங்கே சொல்லப்பட்ட துன்பம், சாதாரண உலக கஷ்டங்கள் அல்ல. மாறாக, தேவனுக்காய் அவரது நாமத்துக்காய், அனுபவிக்கும் பாடுகளையும், பிசாசின் சோதனைகளால் வரும் துன்பங்களுமாகும். இப்படியான பாடுகள் மத்தியிலும், “பயப்படாமல் இரு”, “மரண பரியந்தமும் உண்மையாயிரு” என்பதே தேவன் தரும் நம்பிக்கையாகும்.
அன்பானவர்களே, நாம் தேவனுக்காய், அவரது நாமத்தை உயர்த்துவதற்காக பாடுகளை அனுபவிக்க அழைக்கப்பட்டுள்ளோம். அதுவே கிறிஸ்தவனுக்கு மேன்மை. இவ்வுலகத்தில் வரும் சாதாரண காய்ச்சல், பணக்கஷ்டம் என்று சின்னச் சின்ன பிரச்சனைகளைக் கண்டு பயந்து, அவற்றையெல்லாம் பூதாகரமாக்கி, நமக்கொருவர் இருக்கிறார் என்பதை மறந்து, நம்மை விடுவிப்பவர் யார் என்று கலங்கி நிற்பதேன்? இந்த மனநிலையிலிருந்து நாம் வெளிவரவேண்டும். தேவனை நோக்கிப் பார்த்து அவருக்காய் பாடுகள் அனுபவிக்க, அவருக்காக மரண பரியந்தம் பிழைத்திருக்க நம்மை ஒப்புக்கொடுப்போம். பாடுகளைக் கண்டு பயந்திட வேண்டாம் என்று நம்மை எச்சரிக்கும் ஆண்டவரின் ஆசியும், கிருபையும் என்றென்றைக்கும் நம்முடனே இருக்கும். அதைத் தவிர்த்து, பயத்துக்கு இடமளிப்போமென்றால் அதுவே நம்மைக் கெடுத்துவிடும்.
இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன் (ரோமர் 8:18).
ஜெபம்: விடுவிக்க வல்லமையுள்ள தேவனே, கிறிஸ்துவின் நாமத்தின் நிமித்தம் வரும் நிந்தைகள் அவமானம் இவைகளை கண்டு பயந்திடாமல் பாடுகளில் உண்மையாய் நிலைத்திருக்க எங்களுக்கு உதவும். ஆமென்.