ஜெபக்குறிப்பு: 2023 மார்ச் 31 வெள்ளி

அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களை விசாரித்து, அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவார் (செப்பனியா 2:7) இவ்வாக்குப்படியே நம்மை விசாரிக்கிற தேவன் இந்தமாதத்தில் நமக்கு நிழலாய் இருந்து, நம்மை விசாரித்து, போஷித்து காண்பித்த எல்லா தயவுகளுக்காகவும் அவருக்கு இருதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி செலுத்தி ஜெபிப்போம்.

இன்னும் உணர்வில்லையா!

தியானம்: 2023 மார்ச் 31 வெள்ளி | வேத வாசிப்பு: மாற்கு 9:30-37

YouTube video

அவர்களோ அந்த வார்த்தையை அறிந்து கொள்ளவில்லை, அதைக்குறித்து அவரிடத்தில் கேட்கவும் பயந்தார்கள் (மாற்கு 9:32).

உனக்கு ஒருதரம் சொன்னால் புரியாதா? உன் கவனம் எங்கே இருந்தது? என்று பெற்றோர் நம்மைக் கடிந்துகொண்ட ஞாபகம் இருக்கிறதா? உணர்வுடன் கவனித்துக் கேட்கிறவனுக்கு கேட்பது ஒரேதரத்தில் மனதில் பதிந்துவிடுகிறது. அலட்சியப்போக்கு உள்ளவனுக்கு இரண்டுதரம் சொன்னாலும் அது மனதிலே ஏறாது. இதில் நாம் யார்?

தமது பாடு, மரணம், உயிர்த்தெழுதல்பற்றி இயேசுவானவர், இரண்டாவது தடவையாகவும் வெளிப்படையாகவே தமது சீஷருக்குச் சொன்னதை இன்று வாசித்தோம். ஆனால், அதனைக் கிரகிக்கின்ற நிலையில் அவர்கள் இருக்கவில்லை. நடக்கவிருப்பது வெறும் தற்செயல் நிகழ்வோ, திட்டமிட்ட கொலையோ அல்ல; மாறாக, அது தெய்வீகத் திட்டத்தின் பலன்! அது சீஷருக்குப் புரியவில்லை என்பது ஒருபுறம் இருக்க, புரியாததைக் கேட்டறியவும் அவர்கள் முயற்சி செய்யவில்லை. ஏனென்றால் அவர்களுக்குள் வேறு பிரச்சனையிருந்தது. தங்களுக்குள் எவன் பெரியவன் என்ற தர்க்கத்தில் இருந்தனர். அவர்கள் வாழ்ந்த சமுதாயம் தகுதி தராதரத்திற்கும், பெருமைக்கும், பெரும் வல்லமைக்கும் முதலிடம் கொடுத்ததாய் இருந்ததால், அதற்கு எதிர்மாறான பாடு மரணத்தைக்குறித்து அவர்கள் புரிந்துகொள்ளவோ தெரிந்துகொள்ளவோ விரும்பவில்லை. முதல்முறை கூறியபோது, இது நடக்கக்கூடாது என்று பேதுரு தடுத்தான். இரண்டாவது தடவையாகவும் இயேசு தமது பாடு மரணத்தைக் குறித்துப் பேசியபோது, அதனைக் கருத்தில் கொள்ளத்தக்க மனநிலை அவர்களுக்கு இருக்கவில்லை. தங்களுக்குள் யார் பெரியவர் என்ற சர்ச்சை சீஷர்களின் மனங்களை மழுங்கடித்தது. அவர்கள் தங்கள் அந்தஸ்து தராதரத்தைப் பற்றியே சிந்தித்தார்கள். இறுதியில் நடந்தது என்ன? ஒருவன் காட்டிக்கொடுக்க, சொன்னபடியே இயேசு பிடிக்கப்பட, ஒருவன் மறுதலிக்க, எல்லோரும் சிதறி ஓட, இயேசு சொன்னபடியே சிலுவை மரணம் நிறைவேறிற்று!

தேவபிள்ளையே, நமது கையிலுள்ள வேதாகமத்தை எத்தனைதரம் வாசித்திருக்கிறோம்; எத்தனை செய்திகளை திரும்பத்திரும்பக் கேட்டிருக்கிறோம். என்ன செய்யவேண்டும், எப்படி வாழவேண்டும், காலம் சமீபமாகிவிட்டது என்பதெல்லாம் தெரியும். வாழ்வு நிலையற்றது என்பதுவும் தெரியும். இப்படியிருக்க திரும்பத் திரும்ப சுயநலத்துடன் வாழ்வதேன்? வார்த்தைக்குப் புறம்பாக நடப்பதேன்? பதவி ஆசையும், பண ஆசையும், சண்டையும் சச்சரவுகளும் குடும்பத்திலும் சபையிலும் ஏன்? இயேசுவின் இரண்டாம் வருகை நிச்சயம் என்பதையறிந்த நாம், அதற்கான ஆயத்தங்களில் ஈடுபடுகிறோமா? அல்லது அலட்சியமாக இருக்கிறோமா? அன்று சீஷர்கள் சிதறி ஓடினாலும், உயிர்த்த இயேசு அவர்களைச் சேர்த்துக்கொண்டு, புதிய பாதையைக் காட்டினார். இரண்டாம் வருகையில் கைவிடப்பட்டால் நமக்கு இன்னொரு தருணம் கிடைக்குமா? சிந்திப்போம்.

ஜெபம்: எங்களை உணர்த்துகிற சத்திய தேவனே, வேதத்தை வாசிக்கும்போது நாங்கள் உணர்த்தப்பட்ட இடங்களில் மனந்திரும்பி ஆயத்தப்பட கிருபை செய்யும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2023 மார்ச் 30 வியாழன்

2024-ஆம் வருடம் இந்தியதேசத்தின் 18வது மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் நமது தேசத்திற்காக பாரத்தோடு ஜெபிப்போம். பொய்யான வாக்குறுதிகளினால் வஞ்சிக்கப்படாதவாறு மக்கள் ஞானமுள்ளவர்களாய் நடந்துகொள்ள, முறைகேடில்லாத நியாயமான தேர்தல் நடைபெறவும் மத பிரிவினைகளை ஆதரிக்கிற தலைவர்கள் தோற்கடிக்கப்படவும் ஜெபிப்போம்.

பாடுகள் அவசியந்தானா?!

தியானம்: 2023 மார்ச் 30 வியாழன் | வேத வாசிப்பு: மத்.16:21-23; மாற்கு 8:31-33

YouTube video

அதுமுதல் இயேசு, …. தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத் தொடங்கினார் (மத்.16:21).

“ஆனாலும்”, “அப்பொழுது”, “பின்பு” போன்ற சொற்கள் மிக முக்கியமான வையாகும். “பின்பு” என்று வசனம் ஆரம்பித்தால், “முன்பு” நடந்தது என்ன என்று முந்தியதைப் படிக்கும்போது தெளிவான விளக்கம் கிடைக்கும். மாற்கு 8:31ல், “அல்லாமலும்” என்று ஆரம்பிக்க, மத்தேயு 16:21ல் “அதுமுதல்” என்று ஆரம்பிப்பது அதிக விளக்கம் தருகிறது. சீஷர்கள் தம்மை யார் என்று நினைக்கிறார்கள் என்று இயேசு கேட்க, பேதுரு அவரை “ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று அறிக்கை செய்தான். பின்னர், அதுமுதல், என்று ஆரம்பிக்கிறது. ஆக, எதுமுதல்?

இயேசுவே, வரவிருந்த கிறிஸ்து என்று தெரிந்ததுமுதல், இயேசு தாம் எருசலேமுக்குப் போய், ஆகாதவன் என்று தள்ளப்பட்டு, பாடுகள்பட்டு, கொலை செய்யப்பட்டு, மூன்றாம்நாள் உயிர்த்தெழவேண்டும் என்று தமது சீஷருக்குப் போதிக்கத் தொடங்கினார் என்று பார்க்கிறோம். இயேசு இக்காரியங்கள்பற்றி மூன்று தடவைகளாகக் கூறியதையும் சீஷரின் பிரதிசெயல்களையும் 8ம், 9ம், 10ஆம் அதிகாரங்களில் மாற்கு தொடர்ச்சியாக விபரித்திருக்கிறார். இவரே கிறிஸ்து என்று தெரிந்தும், சீஷரின் பிரதிச்செயல்கள் மாறுபாடாகவே இருந்தது! தமது பாடு, மரணம், உயிர்ப்பைக் குறித்து இயேசு தமது சீஷருக்குப் போதிக்க ஆரம்பித்த முதல் தடவையில் நடந்தது என்ன? இயேசுவில் மிகுந்த கரிசனை கொண்ட பேதுரு அவரைத் தனியே அழைத்து, அத்தனை கரிசனையோடு, “இது உமக்கு நேரிடக்கூடாது” என்று இயேசுவையே கடிந்துகொண்டான். சற்று முன்னர்தான், “நீ பாக்கியவான்” என்று இயேசுவிடமிருந்து வாழ்த்துப் பெற்றவன்தான் இந்தப் பேதுரு. சொற்பவேளைக்குள், “எனக்குப் பின்னாகப் போ சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்” என்று இயேசுவே பேதுருவைக் கண்டிக்கும்படிக்கு பேதுரு நடந்துகொண்டது என்ன? வனாந்தரத்திலே சாத்தான், தன்னைப் பணிந்துகொண்டால் ராஜ்யத்தைத் தருவதாகக் கூறி, இயேசுவைச் சோதித்தானே; இங்கே பேதுரு அல்ல, அவனுக்குள் இருந்து, தம்மைப் பின்னடையச் செய்வது சாத்தானே என்பதை இயேசு அறிந்திருந்தார். ஆகவே பேதுருவைக் கடிந்துகொண்டது மாத்திரமல்ல, தம்மைப் பின்பற்றுகிறவன் தன் சிலுவையைச் சுமக்கவேண்டிய சத்தியத்தையும் போதித்தார்.

ஒன்று, நாம் தேவனுக்கேற்றவைகளைச் சிந்திக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு நமது வாழ்வில் தேவசித்தத்தை உணர்ந்துகொள்வது அவசியம். இரண்டாவதாக, இயேசுதான் கிறிஸ்து என்று தெரிந்திருந்தும், அவர் பூமிக்கு வந்த நோக்கத்தை மறந்துவிடக்கூடாது. இயேசுவுக்கு நடந்தது நமது வாழ்விலும் சம்பவிக்கும். இயேசுவின் பாடுகள்தான் இன்று நம்மை இரட்சித்தது. ஆகவே, இயேசுவைப்போல, தேவசித்தம் மாத்திரமே நமக்கும் பிரதானமாய் இருக்கட்டும்.

ஜெபம்: எங்களுக்காக பாடுகளைச் சகித்த ஆண்டவரே, கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்கு மட்டுமல்ல, பாடுபடுகிறதற்கும் அருளப்பட்டிருக்கிறது என்ற சத்தியத்தை அறிந்துகொண்டு தேவசித்தத்தை நிறைவேற்ற எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.