ஜெபக்குறிப்பு: 2023 பிப்ரவரி 28 செவ்வாய்

என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் (சங்.23:6) இம்மாதம் முழுவதும் தமது உள்ளங்கையில் நம்மை செதுக்கி பாதுகாத்து போஷித்த தேவன் இனியும் கைவிடாதிருப்பார், நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் என்ற விசுவாச அறிக்கைகளை அறிக்கையிட்டு கர்த்தருடைய பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்தி ஜெபிப்போம்.

அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் (ரோமர் 8:26).

எந்த நிலையிலும் கர்த்தருடன்

தியானம்: 2023 பிப்ரவரி 28 செவ்வாய் | வேத வாசிப்பு: ரூத் 1:1-5

YouTube video

….மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும், பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது (சங். 33:18,19).

கர்த்தருடைய கிருபைக்குக் காத்திருக்கின்றவர்களை மரணத்திற்கும் பஞ்சத்திற்கும் விலக்கிக்காப்பதற்கு தேவனுடைய கண்கள் அவர்களைப் பார்த்தபடியே இருக்கிறது என்பது வெறுமனே உத்தரவாதம் அளிக்கின்ற ஒரு வாக்கு அல்ல. கர்த்தரை நம்பி வாழ்ந்த எத்தனை பரிசுத்தவான்கள் சாகும்வரைக்கும் அடிக்கப்பட்டார்கள். கசையடிப்பட்டார்கள். சிங்கங்களுக்கு இரையானார்கள். அப்படியென்றால் மரணத்திற்கும் பஞ்சத்திற்கும் விலக்கிக்காக்க தேவனுக்கு முடியாதா? முடியும். ஆனால், சிலசமயம் தமக்கு மாத்திரமே தெரிந்த நோக்கங்களுக்காக சில பாத்திரங்களைப் பாடுகளுக்கென்றே தெரிந்தெடுக்கிறார். அவர்களும் தேவனுடைய மகிமைக்காக பஞ்சத்தையும் மரணத்தையும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார்கள். அதற்காக அவர்கள் தோற்றுப்போனவர்கள் அல்ல. நாம் கவனிக்கவேண்டியது, இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கும் சித்தத்திற்கும் நமது பார்வையைத் திருப்புகிறோமா? கொடுமையான சூழ்நிலைகளின் மத்தியிலும் தேவன் பக்கமே சார்ந்து நின்று, அவரிலேயே நம்பிக்கை வைத்துக் காத்திருக்கிறோமா? என்பதாகும். இக்கேள்விகளின் பதிலிலேதான் நமது வெற்றி தங்கியுள்ளது.

யூதாவிலுள்ள பெத்லெகேமிலே ஒரு மனுஷன், இஸ்ரவேலருக்கு தேவன் செய்த மகத்துவங்களை அறிந்து அவரையே தொழுதுகொள்ளும் ஒருவன், அவனுடைய வாழ்விலும்கூட தேவனுடைய கரத்தைக் கண்டிருப்பான். சிவந்த சமுத்திரத்தைப் பிளந்தவர், எரிகோவின் மதிலை சிதைத்தவர், எதிரிகளை முறியடித்தவர், ஒரு பஞ்சத்திலே காப்பாற்ற வல்லமையற்றுப் போவாரா? யூதாவிலே வந்த பஞ்சத்தைப் பார்த்து இந்த எலிமலேக்கு குழம்பித் தவிக்கிறான். உணவு இல்லாத இந்த இடத்திலிருந்து இஸ்ரவேலின் தேவனை நம்புவதா? உணவுள்ள மோவாப் தேசத்திற்குப் போவதா? அவனுக்கு இப்போ யார் கடவுள் என்பதல்ல? எங்கே உணவு என்பதன் அடிப்படையில்தான் தெரிவு நடக்கிறது. இறுதியில் வென்றது வயிறுதான். ஆனால் பின்னர், அவனோ அவனுடைய வாரிசுகளோ பெத்லெகேமுக்குத் திரும்பி வரவேயில்லை.

தேவபிள்ளையே, பெரிய பெரிய காரியங்களை தேவன் உன் வாழ்வில் செய்தாரே. யாராலும் தரமுடியாத மாபெரும் விடுதலையைத் தந்தாரே. அவரை நம்புவதற்கு இன்னும் உனக்கு என்ன வேண்டும்? சாதாரண பஞ்சம், எல்லோருக்கும் வருகின்ற வியாதி, பிரச்சனை, இவற்றிலே நீ அவரை நம்பாமல் போனால் எப்படி? தேவனை நம்பாமல் வேறு எதையோ தெரிந்துகொண்டு ஏன் நீ மாண்டு போகவேண்டும்? போதும், இக்கட்டுகளானாலும், நீ இருக்கிற இடத்தைவிட்டு இப்போதே தேவனிடம் திரும்பிவிடு. அவரை நீ நம்பலாம்!

ஜெபம்: அன்பின் கர்த்தாவே, பஞ்சமோ சாவோ எது வந்தாலும், எனக்குரிய வழியைத் தெரிந்து மாண்டுபோகாமல், உம்மையே சார்ந்து நிற்கப் பெலன் தாரும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2023 பிப்ரவரி 27 திங்கள்

எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன் (சங்கீதம் 57:2) பலவிதமான தேவைகளோடு எதிர்பார்ப்புகளோடு அநேக நாட்களாக கர்த்தருக்கு காத்திருக்கும் தேவபிள்ளைகள் சோர்ந்து போகாமல் தொடர்ந்து ஜெபித்து யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனையே அண்டிக்கொள்ள கர்த்தர் கிருபை செய்ய ஜெபிப்போம்.

கட்டாயத்தாலா? அன்பினாலா?

தியானம்: 2023 பிப்ரவரி 27 திங்கள் | வேத வாசிப்பு: உபாகமம் 28:1-7; 15-27

YouTube video

…கர்த்தருடைய கட்டளைகளின் படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால்… (உபா. 28:1).

“நல்ல பிள்ளையாக இருந்தால் உனக்கு ஒரு நல்ல பரிசு தருவேன்” என்றார் அப்பா. “அப்படி நான் இருக்காவிட்டால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டான் மகன். “உனக்குப் பரிசு இல்லை” என்றார் அப்பா. “அவ்வளவுதானா, தண்டனை எதுவும் இல்லையே” என்ற மகனின் பதிலைக்கேட்ட அப்பா திகைத்துவிட்டார். இப்படிதான் நாமும் பலசமயம் குழந்தைகள்போல, தண்டனைக்குப் பயப்படுவதாலேதான் தீமையான வழியைத் தவிர்க்க எத்தனிக்கிறோம். தண்டனை இல்லை என்று தெரிந்தாலும் தீமையைத் தவிர்ப்போமா? அல்லது தண்டனையுண்டு என்பதாலேயே நன்மையைத் தெரிந்தெடுப்போமா? இப்படிப்பட்ட தெரிவு சரியான தெரிவல்ல; இங்கே சுயநலம்தான் வெளிப்படும்.

கர்த்தர் இஸ்ரவேலருக்குக் கொடுத்தது, வேண்டுகோள் அல்ல; வாக்குறுதிகள் சேர்ந்த கட்டளைகள். அந்த சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுத்தால் கர்த்தர் அந்த வாக்குகளையெல்லாம் நிச்சயம் நிறைவேற்றுவார். செவி கொடாமற்போனால் ஆசீர்வாதம் இல்லையென்ற நியதி மாத்திரம் இருக்குமானால் நாம் தப்பித்திருப்போம்; தேவசத்தத்தை உதாசீனம் செய்திருப்போம். ஆனால், கர்த்தருடைய சத்தத்திற்கு செவிகொடாதேபோனால் சாபங்கள் வரும் என்று கர்த்தர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். இப்போது நாம் என்ன சொல்வோம்? சாபம் வரும் என்பதனாலே தேவனுக்குக் கீழ்ப்படிவேன் என்று சொல்வேனா? நரகத்திற்குப் போகக்கூடாது என்பதற்காக இயேசுவைத் தெரிந்தெடுத்தேன் என்று சொல்வேனா?

தேவபிள்ளையே, சாபம் என்பது அழிந்துபோகும்படி தேவன் நம்மைச் சபிக்கும் காரியம் அல்ல. நாம் அவரது ஆசீர்வாதத்தை உதாசீனம் செய்யும்போது, அதை இழந்துபோகிறோம்; மொத்தத்தில் தேவனுடைய பிரசன்னத்தை இழந்துபோகிறோம். அதன் விளைவுகள்தான் சாபங்களாகின்றன. இவற்றைத் தெரிந்திருந்தும்கூட நமது வாழ்வுப் பாதைகளை நாம் மாற்றியிருக்கிறோமா? இல்லையே! ஏன் அப்படி நடக்கிறோம்? அதுதான் நமது பாவசுபாவம். “நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். ..நிர்ப்பந்தமான மனுஷன் நான்” என்று பவுல் தன் நிலையை விளக்குகிறார். இதுதான் நம் நிலையும். ஆகவேதான் அடிக்கடி நமது தெரிந்தெடுப்புகளிலும் நாம் தவறுகிறோம். தண்டனைக்காக தேவனை நேசிக்காமல், தேவன் நம்மேல் வைத்த நேசத்தை உணர்ந்து தேவனை நேசிப்போமானால் நமது தெரிந்தெடுப்புகள், செய்கைகள் ஒருபோதும் பிழையாகாது. ஆகவே, இதுவரை செய்த தவறான தெரிவுகளை தேவஅன்பின் நிமித்தம் சரி செய்வோமாக.

ஜெபம்: அன்பின் கர்த்தாவே, பயத்தினாலல்ல, உமது அன்பினிமித்தம் என்னை உமக்குத் தருகிறேன். என் சுபாவ குணத்தை மாற்றி என்னை ஏற்றுக்கொள்ளும். ஆமென்.