ஜெபக்குறிப்பு: 2023 ஜனவரி 30 திங்கள்

இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் (ஏசா.6:8) இவ்வித அர்ப்பணிப்போடு மிஷனெரிபணிக்கு சென்றுள்ள ஒவ்வொருவரையும் கர்த்தர் வரங்களினால் நிரப்பி வல்லமையாய் பயன்படுத்தவும், அனைத்து மிஷனெரி ஸ்தாபனங்களுக்காகவும், இப்பணிகளை ஆதரிக்கும் அனைத்து விசுவாசக் குடும்பங்களையும் கர்த்தர் அளவில்லாமல் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.

சரியான சுதந்திரம்

தியானம்: 2023 ஜனவரி 30 திங்கள் | வேத வாசிப்பு: 1கொரிந்தியர் 10:14-24

YouTube video

எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது (1கொரி. 10:23).

நமது வாழ்வில் ஏற்படும் தாக்கங்களுக்கு, நமது தெரிந்தெடுப்புகளே காரணம் என்பதையும், நல்ல தெரிந்தெடுப்புகளைச் செய்தவர்கள் தேவநாம மகிமைக்காகவே ஜீவித்தார்கள் என்பதையும் சிந்தித்தோம். அப்படியிருந்தும் நமது அன்றாட வாழ்விலே தெரிந்தெடுக்கவேண்டிய தருணங்கள் ஏற்படும்போது நாம் தடுமாறுவது ஏன்? நாம் சுயாதீனர். நமக்குப் பிரியமானதைத் தெரிந்தெடுக்கும் உரிமை நமக்குண்டு. சுயாதீனம் கிறிஸ்தவ விசுவாசத்தின் அடையாளம். பாவத்திலிருந்து நமக்கு விடுதலை உண்டு. தேவன் அருளும் எல்லாவற்றையும் அனுபவிக்கவும் நமக்கு சுயாதீனம் உண்டு. ஆனால் கிறிஸ்தவர்கள் நாம் இந்த சுதந்திரத்தை தப்பாகப் பயன்படுத்தக்கூடாது. நமது சுதந்திரம் நம்மையும் கெடுக்கக்கூடாது; பிறரையும் துக்கப்படுத்தக்கூடாது.

பவுலடியார் அதைத்தான் நமக்கு விளங்க வைத்திருக்கிறார். உணவு தேவன் தந்தது. அதை அளவுக்கதிகமாக உண்டால் நமது சரீரத்திற்குக் கேடு வரும். அதேசமயம் ஒரு விக்கிரகக் கோவிலில் அமர்ந்து சாப்பிட்டோமானால் நம்மைப் பார்க்கிற விசுவாச பலவீனமான ஒருவனை நாம் தடுக்கி விழப்பண்ணுகிறவர்கள் ஆவோம். இதனால் நாம் கிறிஸ்துவுக்கு விரோதமாகப் பாவம் செய்கிறோம் (1கொரி.8:12). இப்படியே ஒவ்வொரு காரியத்தையும் கணக்கிட்டுப் பார்க்கலாம். ஆகவேதான் பவுலடியார் எல்லாவற்றையும் அனுபவிக்கத்தக்க அதிகாரம் இருந்தாலும், எல்லாம் தகுதியாயிராது என்று அறிவுரை கூறுகிறார்.

“கலாச்சாரம், பாரம்பரியம், காரணகாரியம் (தர்க்கரீதியாக காரணங்காட்டி செய்கின்றவை), உணர்ச்சி (எக்காரணமுமில்லாமல் உணர்ச்சிவசப்பட்டுச் செய்பவை), இதுபோன்ற எவ்விதத்திலும் உறுதியற்ற அதிகாரங்களின் அடிப்படையில் தெரிவுகளைச் செய்வதினாலேயே வாழ்க்கையில் அநேக குழப்பங்கள் ஏற்படுகின்றன. இவை நான்கும் மனிதனின் வீழ்ச்சியினால் ஏற்பட்டவைகள். எனவே, பிழையான திசையில் வழிநடத்தாத ஒரு பரிபூரண வழிகாட்டி நமக்கு தேவை. அத்தேவையை தேவனுடைய வார்த்தையே சந்திக்கிறது” – ரிக்வாரன்.

இன்றைய நாளிலும் எதைத் தெரிந்தெடுப்பது எதை விடுவது என்ற போராட்டத்தோடு இந்தத் தியானத்தில் இணைந்திருக்கும் தேவபிள்ளையே, நாம் தவறான வழிகாட்டிகளின் வழிகளை விட்டுவிட்டு, நமக்காக சகலத்தையும் தெரிந்தெடுத்து வைத்திருக்கிறவரிடம் திரும்புவோம். உணவு உடை செல்வம் எதுவானாலும், தேவன் தந்த சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தாமல் தகுதியானது எது என்று சிந்தித்து உன் தெரிந்தெடுப்புகளை தீர்மானங்களைச் செய். அப்போது உன்னில் தேவன் மகிமைப்படுவார்.

ஜெபம்: “கர்த்தாவே, நீர் அருளிய சுதந்திரத்தை உமக்குள் காத்துக்கொண்டு, உமக்குள் என் தெரிந்தெடுப்புகளைச் செய்யவும் உம்முடைய நாமத்தை என் வாழ்க்கையில் மகிமைப்படுத்தவும் என்னை நடத்தியருளும். ஆமென்.”

ஜெபக்குறிப்பு: 2023 ஜனவரி 29 ஞாயிறு

இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; இதை நான் விரும்பினபடியால், இங்கே வாசம் பண்ணுவேன் (சங்.132:14) தேவன் தங்கியிருக்கும் வாசஸ்தலத்திற்குள் ஆராதிக்கச் செல்லும் ஒவ்வொருவரும் பரிசுத்த பயத்தோடே காணப்படவும், கிறிஸ்துவின் சரீர மாகிய சபையானது பக்திவிருத்தி அடையவும் எல்லா திருச்சபை போதகர்கள், பேராயர்கள் சுவிசேஷ ஊழியர்களுக்காகவும் மன்றாடுவோம்.

யாருக்குப் பிரியமாய் நடப்பாய்?

தியானம்: 2023 ஜனவரி 29 ஞாயிறு | வேத வாசிப்பு: சங்கீதம் 143:1-12

YouTube video

உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன் (சங்கீதம் 143:10).

“இது என் வாழ்க்கை; எனக்குப் பிரியமானதை நான் செய்வேன்” என்று அநேகர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். சமயத்திலே நாமும் சொல்லியிருக்கிறோம். ஆனால் ஒரு உண்மைக் கிறிஸ்தவன், யாருக்குப் பிரியமாய் நடக்க வேண்டும் என்பதை திட்டவட்டமாகத் தெரிந்தெடுக்கவேண்டும். தேவனுடைய விருப்பமா? அல்லது தனது விருப்பமா? இது ஒரு முக்கிய தெரிந்தெடுப்பு. இது நமது வாழ்வின் பாதையையே தலைகீழாக மாற்றிவிடும்.

தனது நண்பனுடைய அகோர சாவைக் கேள்வியுற்ற ஒரு வாலிபன் குழம்பித் தவித்தான். ஆறு வாரங்களுக்கு பின்பாக அவன் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு அமைதியடைந்தான். தன் வாழ்விலே மாற்றம் கண்டவனாக, இனி ஆண்டவரைப் பிரியப்படுத்துவது மட்டுமே தன்னுடைய விருப்பமாகக் கொண்டான். “இது ஆண்டவரைப் பிரியப்படுத்துமா?” என்ற வாசகத்தைத் தன்னுடைய அறையின் எல்லாப் பக்கமும் எழுதிவைத்தான். ஒரு சிறந்த வழக்கறிஞராக அல்லது நாடக ஆசிரியராக வரவேண்டும் என்ற தன்னுடைய ஆசைகளை விட்டுவிட்டு, ஆண்டவரை மாத்திரமே பிரியப்படுத்துவேன் என்று உறுதிகொண்டான். அதன்படி அவன் பர்மா நாட்டிற்கு தன் மனைவியுடன் மிஷனரியாகச் சென்று, பயங்கரமான சிறைவாசத்தை அனுபவித்தான். தன் அன்பு மனைவியை இழந்தான். இறுதியில் தனது குழந்தையையும் இழந்தான். அப்படியானால் இவன் தோற்றுப் போனவனா? இல்லை. “இந்தப் பர்மாவில் சிலுவை நிரந்தரமாக நாட்டப்படும் வரைக்கும் நான் இந்த இடத்தைவிட்டுப் போவதில்லை’ என்ற அவனுடைய வைராக்கியமான தெரிந்தெடுப்பும் தீர்மானமும் வீண்போகவில்லை. 63க்கும் மேற்பட்ட ஆலயங்கள் பர்மாவிலே எழுந்தன. 7000க்கும் மேற்பட்டோர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். இவர்தான் அதோனி ராம் ஜட்சன் என்ற மிஷனரி பணியாளர்.

ஒவ்வொரு மனுஷனுக்கும் சொந்த விருப்பு வெறுப்புகள் இருக்கலாம். ஆனால் நமது காரியம் வேறு. பாவத்தில் கிடந்த நமக்காக கிறிஸ்து சிந்திய இரத்தத்தால் மீட்கப்பட்டவர்கள் நாம். இனி நமக்கென்று என்ன இருக்க முடியும். ஆண்டவரைப் பிரியப்படுத்துவதைத் தவிர நமக்கு வேறு என்ன வேலை? நமது வாழ்விலே அவருக்கு ஒரு நோக்கமும் ஒரு திட்டமும் உண்டு. அது கடினமான பாதையானாலும் மகிமையான பலனைத் தருவது உறுதி.

தேவபிள்ளையே, கர்த்தரைப் பிரியப்படுத்தவேண்டுமானால் உனக்கு மிகவும் பிரியமான பலவற்றை விடவேண்டும் என்று யோசிக்கிறாயா? ஆனாலும் தேவ பிள்ளையே, உறுதியான மனதோடு தேவனைப் பிரியப்படுத்துவதையே தெரிந்தெடுத்து உறுதியாக ஓடு. தன்மேல் பிரியம் வைக்கும் உன்னை தேவன் உயர்த்துவார்.

ஜெபம்: தகப்பனே, என் சொந்த விருப்பு வெறுப்புகளை கிறிஸ்துவுக்குள் சிலுவையில் அறைந்துவிட்டு, உம்மைப் பிரியப்படுத்தி வாழ எனக்கு அருள் செய்யும். ஆமென்.