வாக்குத்தத்தம்: 2023 ஜனவரி 1 ஞாயிறு

கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு (2கொரி.3:17)

அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச் செய்வேன் (சங். 91:15).
வேதவாசிப்பு: காலை: ஆதியாகமம் 1,2 | மாலை: மத்தேயு 1

ஜெபக்குறிப்பு: 2023 ஜனவரி 1 ஞாயிறு

கர்த்தாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர்  கேட்டு, எனக்கு இரங்கி, எனக்கு உத்தரவு அருளிச்செய்யும் (சங்கீதம் 27:7).

அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன் (சங்.91:15) புதியவருடத்தைக் காணச்செய்த ஆண்டவருடைய பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்தி, அவருடைய கரத்தின் நிழலினால் கர்த்தர் நம்மை மறைத்து எல்லாத் தீங்குக்கும் விலக்கி இரட்சித்து வழிநடத்தும்படியாக ஒப்புவித்து ஜெபிப்போம்.

நித்திய புயமே ஆதாரம்!

தியானம்: 2023 ஜனவரி 1 ஞாயிறு | வேத வாசிப்பு: உபாகமம் 33:26-29

YouTube video

கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன்  யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே… (உபா.33:29).

வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். 2023ஆம் ஆண்டிற்குள்ளாக பிரவேசிக்க தேவன் நமக்கும் நமது குடும்பத்திற்கும் கிருபை செய்தபடியால் அவரைத் துதிப்போம். அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான்; நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளி செய்வேன் என்ற வாக்கின்படி இந்த ஆண்டு முழுவதும் தேவன் உங்களுக்கு மறுஉத்தரவு அருளி ஆசீர்வதித்து வழிநடத்துவாராக!

பல இடர்களைத் தாண்டி ஒரு புதிய வருடத்துக்குள் ஜீவன் சுகம் பெலத்தோடு நம்மை நடத்திவந்தவர் கர்த்தர் ஒருவரே. அவரே தொடர்ந்தும் நடத்துவார். கடந்த சில ஆண்டுகள் முழு உலகமுமே பெரிய பயங்கரத்தைச் சந்தித்தது. எத்தனையோ பாதிப்புகள், பயங்கர நோய்த் தொற்றுகள், மரண ஓலங்கள், இழப்புகள், பெருக்கெடுத்த கண்ணீர்! பலரையும் இழந்த நிலை என நமது நம்பிக்கை தடுமாறினாலும், சூரியனோ, சந்திரனோ, நட்சத்திரமோ இன்னமும் மாறவில்லை. மனிதன் தான் வாழும் சூழலை மாசடையச் செய்தாலும், இன்னமும் சமுத்திர அலைகள் ஓயவில்லை; கடற்கரை மணலைத் தாண்டவில்லை. தேவசாயலில் படைக்கப்பட்ட மனிதன் பதறினாலும், சிருஷ்டி கர்த்தரோ மாறவேயில்லை. இனியும் அவரே நம்மை நிச்சயம் ஆதரிப்பார்.

கர்த்தருடைய கட்டளைப்படி இஸ்ரவேலை எகிப்திலிருந்து மீட்டு, கானானுக்கு நடத்தி வந்த மோசே, தனது முடிவு நெருங்கிவிட்டதை உணர்ந்தவராய், கடந்து வந்த பாதைகளை இஸ்ரவேலுக்கு விபரித்து, தான் மரணமடையுமுன்னே இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதித்தார் (உபாகமம் 33:1). இந்த இடத்தில் ஒரு நீண்ட பயணத்தின் ஒரு பகுதி முடிவுக்கு வருகிறது; அடுத்தது, ஆரம்பிக்கிறது. “கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்?” மோசேயின் இவ்வார்த்தைகள், மீதியுள்ள நமது பயணத்திற்கான உற்சாகமளிக்கும் வார்த்தைகள்! சென்றடைய வேண்டிய கானான் தேசத்தைக் குறித்த நிச்சயம்! நடந்தவற்றை மறந்து முன்னேறிச் செல்வதற்கான உந்துதல்! எகிப்திலிருந்து புறப்பட்டவர்களின் அடுத்த தலைமுறையினர் யோர்தானின் இக்கரையில் நிற்கையில், மோசே அவர்களை யோசுவாவிடம் கர்த்தருடைய கட்டளைப்படி கையளிக்கிறார். ஒரு புதிய சந்ததி; புதிய தலைமைத்துவம்; இதற்கு முன்னே நடக்காத ஒரு புதிய வழி; “அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்” என்கிறார் மோசே.

முற்பிதாக்களுக்குச் செய்த வாக்குப்படி, முரட்டாட்டம், கீழ்ப்படியாமையின் மத்தியிலும் இஸ்ரவேலரைக் கைவிடாது தேவன் நடத்தினார். இன்று தமது ஒரே பேறான குமாரனின் இரத்தத்தினால் கிருபையாக இரட்சிக்கப்பட்ட நம்மை, பரம கானானை நோக்கி நடத்துகிறார். அவர் கைவிடமாட்டார். கர்த்தருடைய புயங்கள் எப்போதும் நம்மை நோக்கி நீண்டிருக்கிறது. அதற்குள் அடைக்கலம் புகுபவர்களை அவர் நிச்சயம் ஆதரிப்பார்.

ஜெபம்: எங்களுக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரே, இந்த புதிய ஆண்டில் நீர் எங்களுக்கு தாபரமாக இருந்து வழிநடத்த வேண்டுதல் செய்கிறோம். ஆமென்.

ஆசிரியரிடமிருந்து… (ஜனவரி – பிப்ரவரி 2023)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இம்மட்டும் நம்மோடிருந்து நம்மை வழிநடத்தின ஆண்டவருடைய நாமத்தினாலே அன்பின் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தேவனுடைய பெரிதான கிருபையாலும் இரக்கத்தாலும் 2022ஆம் வருடத்தை கடந்து புதிய வருடத்திற்குள் பிரவேசிக்க கர்த்தர் நமக்கு தயை செய்திருக்கிறார். கடந்திட்ட நாட்களில் எல்லாம் நம்மை வழுவாமல் பாதுகாத்து நம் தேவைகளையெல்லாம் சந்தித்து நிலைநிறுத்தின ஆண்டவருக்கு நன்றிபலிகளை ஏறெடுப்போம். அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச் செய்வேன் (சங்.91:15) என்ற வாக்கை விசுவாசித்து முன்னேறிச் செல்வோம். இந்த புதிய ஆண்டிலே நாம் ஏறெடுக்கும் எல்லா விண்ணப்பங்களையும் கர்த்தர் கேட்டு நம் தேவைகள் அனைத்தையும் நிச்சயமாய் தேவன் சந்திப்பார்.

2023ஆம் வருட சத்திய வசன காலண்டரை பங்காளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். கூடுதலான காலண்டர் தேவைப்படுபவர்கள் 7ஆம் பக்கத்திலுள்ள விளம்பரத்தைக் கவனிக்கவும். சத்தியவசன ஊழியத்தை கடந்த ஆண்டு முழுவதும் ஜெபத்தோடும் மனப்பூர்வமான காணிக்கையாலும் தாங்கி வந்த அன்பு பங்காளர்கள் ஆதரவாளர்கள் யாவருக்கும் நன்றி கூறுகிறோம். இப்புதிய ஆண்டிலும் தொடர்ந்து தங்களது மேலான ஆதரவைத் தர அன்பாய் கேட்கிறோம்.

தியான புத்தகத்தின் வேதவாசிப்பு அட்டவணையைப் பயன்படுத்தி 2022ஆம் ஆண்டில் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்கள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் எங்களுக்கு தெரியப்படுத்த அன்பாய் கேட்டுக்கொள்கிறோம். அடுத்த இதழில் உங்களது பெயர்கள் பிரசுரிக்கப்படும். இந்த ஆண்டிலும் அநேகர் வேதாகமத்தை ஒரு வருடத்திற்குள் வாசித்து முடிப்பதற்கு உற்சாகப்படுத்துகிறோம்.

இவ்விதழில் ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களும் புதிய வருடத்தில் நாம் தியானித்து கிறிஸ்துவுக்குள் வளருகிறதற்கு உகுந்த தியானங்களை சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். ஜெபத்தோடு தியானியுங்கள். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபியுங்கள். இந்த தியானங்கள் தங்கள் ஆவிக்குரிய வாழ்விற்கு ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம். கர்த்தரின் கிருபை உங்களனைவரோடும் கூட இருக்க ஜெபிக்கும்…

கே.ப.ஆபிரகாம்

சகலமும் நன்மைக்கே!

அதிகாலை வேளையில்… (ஜனவரி – பிப்ரவரி 2023)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: ஆதியாகமம் 50:14-20

யோசேப்பு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நான் தேவனா; நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார் (ஆதியாகமம் 50:19, 20).

இவ்வசனமானது ரோமர் 8:28இல் காணப்படும் “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிற தென்று அறிந்திருக்கிறோம்” என்ற பவுலடியாரின் கூற்றுக்கு ஒத்துள்ளது. நம்முடைய கண்ணோட்டத்தில் மனிதர்கள், சூழ்நிலைகள், நமது ஆண்டவரும்கூட நமக்கு எதிர்த்து நிற்பதாகத் தோன்றும். ஆனால், நமது பரமபிதா அனைத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் என அவருடைய பிள்ளைகளாகிய நாம் நன்கு அறிந்துள்ளோம். அவர் நம்மை நேசிக்கிறார்; நமக்கு நன்மை இன்னதென்று அவர் அறிந்திருக்கிறார் என்று நாம் நிச்சயமாகக் கூறமுடியும். இதற்கு யோசேப்பின் வாழ்க்கை மிகச்சிறந்த ஓர் உதாரணமாகும்.

அவனது தந்தை யாக்கோபு அவனை அதிகமாக நேசித்தார். அதினால் அவனுடைய பத்து அண்ணன்மார்களாலும்; வெறுக்கப்பட்டான். அவனுடைய பதினேழாவது வயதில் அவர்கள் மீதியானியரிடத்தில் அவனை விற்றுப்போட்டார்கள். எகிப்துக்குச் சென்ற அவன் அவனுடைய எஜமானனின் மனைவியால் தவறான நடத்தைக்கு வற்புறுத்தப்பட்டான். அவன் இணங்காததால்; வீண்பழி சுமத்தப்பட்டு சிறைக்குச் சென்றான். ஆனால் முப்பதாவது வயதில் சிறையிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலையானான். பார்வோன் அவனை எகிப்தின் இரண்டாவது அதிகாரியாக உயர்த்தினான். யோசேப்பின் சகோதரர்கள் இருமுறை எகிப்துக்கு வந்து தானியம் வாங்கிச்சென்றனர். அந்த சந்தர்ப்பங்களை அவர்கள் மனம் வருந்தவும், மனந்திரும்பவும் யோசேப்பு நன்கு பயன்படுத்திக் கொண்டான். அவர்களுக்குத் தன்னை வெளிப்படுத்தி, மன்னிப்பை அருளி, தன் தகப்பன் யாக்கோபையும் தன் சகோதரர்கள் குடும்பத்தார் அனைவரையும் தான் பராமரிப்பதாகக் கூறி எகிப்துக்கு அவர்களை வரவழைத்தான். பதினேழு ஆண்டுகள் கழித்து யாக்கோபு இறந்தபின்னர், யோசேப்பு தங்களை பழிவாங்குவான் என அவனுடைய சகோதரர்கள் பயந்தனர்.

ஆனால் யோசேப்போ நடந்தவை யாவும் தேவனுடைய செயலேயாகும்; சகலமும் நன்மைக்கே என்று அவர்களுக்கு உறுதியளித்தார். எபிரெய மக்களினம் அழிந்துபோகாதபடிக்கு தேவன் யோசேப்பை எகிப்து தேசத்தில் ஒரு கருவியாக உபயோகித்தார்.

யோசேப்புக்கு நிகழ்ந்த யாவும் அவரை ஒரு சிறந்த தலைவனாக உருவாக்க தேவன் அனுமதித்திருந்தார். ஒருவேளை யோசேப்பு தனது தகப்பனுடனே தங்கியிருந்தால், அளவுக்கு மீறிய தகப்பனுடைய பாசத்தால் அவன் சீரழிந்திருப்பான். “தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது” (புலம்பல் 3:27). யோசேப்பின் துன்பங்கள் யாவும் அவனை ஒரு தேவ மனிதனாக்கியது. இயேசுகிறிஸ்துவுக்கு நிழலாக வேதாகமம் சுட்டிக்காட்டும் உன்னத மனிதர்களுள் ஒருவராக யோசேப்பு அமைந்தான். தேவனுடைய திட்டம் அவனுடைய சகோதரர்களுக்கும் நன்மையாக அமைந்தது. அவர்களுடைய சதித்திட்டங்களிலிருந்து மனந்திரும்புவதற்கு ஏதுவானது. யாக்கோபும் தனது இளவயதில் சூழ்ச்சி செய்து தனது தகப்பனை ஏமாற்றினவரே. அதற்கான பலனையும் அவர் அனுபவித்தார். ஆனால், பிற்காலத்தில் தேவன் 17 ஆண்டுகள் தனது குடும்பத்தினருடன் சந்தோஷமாயும் சமாதானமாயும் வாழும் ஆசீர்வாதத்தையும் அருளினார். யோசேப் பின் மூலமாக முழு எகிப்துக்கும் உணவு அருளி நன்மை செய்தார். யோவான் 4:22 இன்படி இரட்சிப்பு யூதர்கள் வழியாய் இன்றைய நம்முடைய உலகத்திற்கும் வந்தது.

நீங்களும் யாக்கோபைப்போல “இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது” (ஆதியாகமம் 42:36) என்று அங்கலாய்க்கிறீர்களா? உண்மையில் யோசேப்புக்கும் அவனுடைய குடும்பத்தாருக்கும் நடந்ததைப்போலவே நமக்கும் நடக்கிறது. அடுத்த முறை நீங்கள் ஆண்டவரிடம் வாழ்வு கடினமாக இருக்கிறதே என கேள்வி கேட்கும்பொழுது, அவருடைய வழிகளை நாம் அறியாதிருக்கும்பொழுது, யோசேப் பின் இளவயதில் நடந்த சோதனைகளையும் தேவனுடைய இரக்கங்களையும் நாம் நினைவுகூருவோம். அனைத்தும் சர்வவல்ல தேவனுடைய கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தேவன் சகலத்தையும் நன்மைக்கு ஏதுவாக நடத்துகிறார் என்பதை நாம் பார்க்கவோ உணரவோ அவசியமில்லை. ஏனெனில் தேவன் நமக்காகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.

நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல் லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன் (சங்.119: 71).

இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன் (ஏசா.12:2).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

வாசகர்கள் பேசுகிறார்கள் (ஜனவரி – பிப்ரவரி 2023)

1

கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நான் உங்களுடைய நிகழ்ச்சியை நம்பிக்கை டிவியில் எப்போதுமே தவறாமல் பார்ப்பேன். ஜயாவுடைய பிரசங்கத்தை கேட்க வாஞ்சை யோடு காத்திருப்பேன், தேவன் ஐயாவுக்கு நல்ல சுகபெலன் தந்து தொடர்ந்து பயன்படுத்த ஜெபிக்கிறேன். நன்றி.

Mrs.Seliya Rajakumari, Chennai.

2

அன்பின் தோத்திரம். 2 வருடங்கள் கழித்து 19.11.2022 அன்று சென்னையில் நடைபெற்ற விசுவாச பங்காளர் கூடுகையில் கலந்துகொள்ள தேவன் கிருபை செய்தார். செகந்திராபாத்தில் இருந்து வந்த தேவதாசர்கள் அளித்த செய்தி மிகவும் அருமையாக இருந்தது. பாடல்கள் உற்சாகமூட்டுவதாக இருந்தது. ஐக்கியவிருந்தும் அமுதமாக இருந்தது. அனைத்து ஒழுங்குகளும் கிரமமாக இருந்தது. மிக்க நன்றி. தங்கள் ஊழியங்களுக்காக தினமும் ஜெபிக்கிறேன்.

Mrs.Shanthi Kirubakaran, Chennai.

3

அன்பு சகோதரர்களுக்கு, நாங்கள் ஒரு பேப்பர் கடை வைத்துள்ளோம். எங்கள் கடைக்கு வரும் நல்ல புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துவந்து நானும் படித்து பிள்ளைகளுக்கும், படிக்க விருப்பமுள்ள மற்றவர்களுக்கும் கொடுப்பேன். இதன் மூலம் கிடைத்த அரிய பொக்கிஷம்தான் விருத்தாப்பியம். இதை நான் பலமுறை படித்து பயன்பெற்று வருகிறேன். 92 வயதான என் அன்பு தாயாரை பராமரிக்க கிருபை கொடுத்த ஆண்டவருக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி செலுத்துகிறேன். விருத்தாப்பியம் புத்தகத்தை வாங்கி பலருக்கும் கொடுத்துவருகிறேன். அன்பு சகோதரி சாந்தி பொன்னு அவர்களையும் அவர்கள் எழுத்து ஊழியத்தையும் ஆண்டவர் மேன்மேலும் ஆசீர்வதிக்க ஜெபிக்கிறோம்.

Mrs.P. Devakumari Gnanaprakasam, Chennai.

4

சத்தியவசன ஊழியத்தின் வெளியீடுகளான “அனுதினமும் கிறிஸ்துவுடன்” மற்றும் “சத்தியவசனம்” பத்திரிக்கைகளை நானும் என் கணவரும் 30 வருடங்களாக படித்து பயனடைந்துள்ளோம். ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறோம், கணவர் கர்த்தருடைய அழைப்பை பெற்றுவிட்டார்கள். எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன். நன்றி.

Mrs.Russel Raj, Erode.

5

சத்தியவசன வாட்ஸ் அப் தியானங்கள் பெற்றுவருகிறேன். மலர்ந்த காலை தூரல் தென்றலுடன், தெவிட்டாத உங்களது பதிவுகளால் வாழ்த்தும், தேவ வாக்குத்தத்தமும் மணம் கமிழ்கிறது. உள்ளம் உவகை கொள்கிறது. நன்றிகள்.

Mr.Anthony.

6

சத்தியவசன வாட்ஸ் அப்பில் தினமும் தியானங்களை பெற்றுவருகிறேன். என்னுடைய அனுதின வாழ்க்கைக்கும் ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் அதிகதிகமாக இந்த தியானங்கள் பயனளிக்கிறது. தவறாமல் அனுப்பித் தாருங்கள்.

Mr.Mariappan.

7

Praise the Lord, I have been listening to your daily devotion thru “YouTube”. God bless your digital ministry abundantly in the days to Come.

Mrs.Mothi Bai, Hyderabad.