ஜெபக்குறிப்பு: 2022 டிசம்பர் 31 சனி
சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா (சங்.150:6) இவ்வருட முழுவதும் நம்மையும் நமது குடும்பத்தையும் சபையையும் வழிநடத்தின அன்பின் தேவனை துதிப்போம். புதிய வருடத்திற்குள் பிரவேசிக்கவிருக்கும் நம்மை தேவன்தாமே பரிசுத்தப்படுத்தி புதிய வாக்குத்தத்தங்களால் ஆசீர்வதிக்கவும் புத்தாண்டு ஆராதனைகள் ஆசீர்வதிக்கப்படவும் வேண்டுதல் செய்வோம்.
மறுபடியும் பிறந்துவிடு!
தியானம்: 2022 டிசம்பர் 31 சனி | வேத வாசிப்பு: யோவான் 3:1-13

நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொனனதைக் குறித்து அதிசயப்படவேண்டாம் (யோவான் 3:7).
சிறுவயதில் ஒருதடவை புதுவருட விழிப்பு ஆராதனைக்குச் சென்றிருந்தபோது, வருடம் முடிகின்ற கடைசி நேரத்தில் ஆலயமணி விட்டுவிட்டு மெதுவாக ஒலித்ததையும், புதிய வருடம் பிறந்ததும் விரைவாக ஒலித்ததையும் கவனித்தேன். இது ஏன் என்று எனது தாயாரிடம் கேட்டபோது அவர் கூறியது இதுதான்: பழைய வருடத்திற்குச் சாவுமணி, புதிய வருடத்திற்கு மகிழ்ச்சியின் மணி என்றார். இன்று நீங்கள் ஒரு ஆலய ஆராதனையில் கலந்துகொள்ள முடிகின்றதா? அல்லது முடங்கிப்போய் உள்ளீர்களா? என்பது தெரியவில்லை; ஆனால் பழைய வருடம் கடந்து, புதிய வருடம் பிறக்கப்போவது மட்டும் நிச்சயம்.
யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னும் பரிசேயன், இரகசியமாக இராக்காலத்தில் இயேசுவிடம் வந்து, அவரைக்குறித்தும், அவர் செய்யும் அற்புதங்களைக் குறித்தும் கேட்டு ஆச்சரியப்படுகிறான். ஆனால் இயேசுவோ, “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்” என்ற பதிலையே கூறினார். ஆக, நாம் செய்யும் கிரியைகளோ, அற்புதங்களோ முக்கியம் கிடையாது; மறுபடியும் பிறப்பதே முக்கியம் என்பதையே இயேசு வலியுறுத்துகிறார். நிக்கொதேமுவும் விடாமல் கேள்வி கேட்கிறான். இயேசுவும், ஆவியினால் பிறப்பதன் முக்கியத்துவத்தை அவனுக்கு விளங்க வைக்கிறார். அவனும், “இது எப்படி ஆகும்” என்று தொடர, இயேசுவும் பொறுமையாய் பல காரியங்களைப் புரியவைத்தார். இதே நிக்கொதேமுதான் யோசேப்பு என்கிறவனுடன் சேர்ந்து இயேசுவின் உடலை அடக்கம் பண்ணினான் (யோவான் 19:39). ஆகவே, நிச்சயம் இயேசுவின் வார்த்தைகள் அவனுடைய வாழ்வில் கிரியை நடப்பித்திருக்கிறது என்பதை நாம் ஊகிக்கலாம்.
வருடத்தின் இறுதிக்குள் வந்திருக்கிற தேவபிள்ளையே, சற்றுத் திரும்பிப் பார்ப்போம். இயேசு தெளிவுபடுத்திய கிறிஸ்துவுக்குள் மறுபடியும் பிறந்த வாழ்வு வாழ்கிறோமா? கிறிஸ்துவைத் தரித்தவனாய் ஜீவிக்கிறோமா? இல்லாவிட்டால், மறுபடி பிறந்த நிச்சயம் இல்லையானால், இப்போதே ஆண்டவர் பாதம் மண்டியிடுவோமாக. புதிய வருடத்திற்குள் நுழையும்போது, கிறிஸ்துவுக்குள் மறுபடியும் பிறந்த புதிதான குழந்தைகள்போல புதிய அனுபவத்தோடுகூட செல்வோமாக. இந்தக் கொரோனா வைரஸ் தாக்கத்தைத் தவிர்க்க நாம் கடந்த வருடங்களில் எவ்வளவு போராடினோம். அப்படியிருக்க, நம்மை நிரந்தரமாய் அழித்துவிடத் தருணம் பார்த்து நிற்கும் பாவம் என்ற கொடிய வைரஸ் நம்மைத் தாக்காதிருக்க எவ்வளவாய்ப் போராடவேண்டும். அதற்கு ஒரே வழி இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினாலான மீட்பு மாத்திரமே. பழைய வாழ்வுக்குச் சாவுமணி அடித்து, புதிய வாழ்வுக்குள் மகிழ்ச்சியோடு பிரவேசிப்போம்.
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன் (ரோமர் 6:23).
ஜெபம்: பரிசுத்தமுள்ள ஆண்டவரே, இவ்வருட இறுதிநாளில் உம் சமுகத்தில் என்னை பரிசுத்தப்படுத்திக்கொண்டு புதிய வருடத்திற்குள் பிரவேசிக்க கிருபை தாரும். ஆமென்.
வாக்குத்தத்தம்: 2022 டிசம்பர் 30 வெள்ளி
அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே (வெளிப்படுத். 19:31).
வேதவாசிப்பு: காலை: சகரியா 11-14 | மாலை: வெளிப்படுத்தல் 21
ஜெபக்குறிப்பு: 2022 டிசம்பர் 30 வெள்ளி
நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள் (கொலோ.3:15) ஒவ்வொரு நாளிலும் தேவன் காண்பித்த இரக்கங்களை எண்ணி நன்றி செலுத்துவோம். அநேக நாட்களாக விண்ணப்பித்தும் இதுவரையிலும் ஏற்றபதில் கிடையாமல் சோர்ந்துபோயிருப்போரும் கர்த்தர் செய்த நன்மைகளை தியானித்து துதித்து கர்த்தருடைய வழிகளில் தொடர்ந்து முன்னேறிச் செல்ல தூய ஆவியானவரின் ஒத்தாசையை நாடி ஜெபிப்போம்.
ஆலயம் சுத்தமாகட்டும்!
தியானம்: 2022 டிசம்பர் 30 வெள்ளி | வேத வாசிப்பு: யோவான் 2:12-25

புறா விற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டு போங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார் (யோவான் 2:16).
சிறுபிள்ளைகள் நடத்தும் ஆராதனைக்காக, ஆலயத்தில் அவர்களுக்குப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தோம். சிறு இடைவேளை கொடுத்து, பிள்ளைகள் உண்பதற்கு தின்பண்டம் கொடுத்தோம். அப்போது போதகர், ஆலயத்துக்குள்ளே வேண்டாம், அவர்களை வெளியே அழைத்துச்சென்று கொடுங்கள் என்றார். எப்போதுமே நாம் ஆலயத்தைச் சுத்தமாக வைத்திருக்கவே நினைப்பதுண்டு. நாமும்கூட வெளியே எப்படித்தான் வாழ்ந்தாலும், என்னதான் செய்தாலும், ஆலயத்துக்குள் வந்ததும் பக்திமான்கள்போல நடந்துகொள்கிறோம் அல்லவா!
இங்கே இயேசு எருசலேம் தேவாலயத்துக்குள் வருகிறார். அங்கே ஆடு, மாடு விற்கிறவர்களையும், புறா விற்கிறவர்களையும் காண்கிறார். உடனே கயிற்றினால் ஒரு சவுக்கை உண்டுபண்ணி, அவர்களையும், ஆடுமாடுகளையும் வெளியில் துரத்தி, காசுக்காரரின் காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப் போட்டார். “என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள்” என்று அவர்களைக் கடிந்துகொண்டார். அன்று மெய்யாகவே ஆலயத்தில் மகா பரிசுத்த ஸ்தலம் ஒன்று இருந்தது. ஆனால் இன்று ஆலயம் என்பது வெறும் ஒரு கட்டிடம் மட்டுமே; ஆனாலும், தேவபிள்ளைகள் ஒன்றுகூட தேவனை ஆராதிக்க அங்கே ஒன்றுகூடும்போது அது வெறும் ஆலயம் அல்ல, அது தேவனுடைய சபை என்ற உயிரோட்டத்தைப் பெறுகிறது. ஆனால், அந்த உணர்வு இருக்கிறதோ இல்லையோ, ஆலய கட்டிடத்துக்குள் பிரவேசிக்கும்போது, எங்கிருந்தோ பக்தியும் பயமும் வந்துவிடுகிறது என்றால் அது உண்மைதான்!
இன்று ஆண்டவர் வாசம்பண்ணும் ஆலயம் நமது சரீரமேயாகும். எனவே நமது சரீரத்தையும் நாம் பரிசுத்தமாய்க் காத்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம். “தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது. நீங்களே அந்த ஆலயம்” என்கிறார் பவுல் (1கொரி.3:17). சிந்திப்போம்! நாம் ஆராதிக்க ஒன்றுகூடுகின்ற கட்டிடமாகிய ஆலயத்துக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தில் ஒரு சிறுபகுதியையேனும், தேவன் வாசம் செய்ய விரும்புகிற ஆலயமாகிய நமது சரீரத்தின் பரிசுத்தத்திற்குக் கொடுக்க வேண்டாமா! நமது சரீரம் நமக்கே சொந்தம் என்று நினைக்கிறோமே தவிர, நம்மை மீட்பதற்காகவே தமது சரீரத்தில் பாடுகளை ஏற்றுக்கொண்டு, தமது சரீரம் பிட்கப்படக் கொடுத்த இயேசுவுக்கே நாம் சொந்தம் என்பதை மறப்பது எப்படி? ஆகவே தேவபிள்ளையே, நமது சரீரத்தைப் பரிசுத்தமாகக் காக்கும்படிக்கு ஆண்டவரின் ஆளுகைக்குள் நமது சரீரங்களை ஒப்புக்கொடுப்போமாக. அவர் வாசம் பண்ணும் சரீரம் அவருக்கேற்ற பரிசுத்தமாகவே பேணுவீர்களா?
நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? (1கொரி.3:16).
ஜெபம்: தேவனே, ஆவியானவர் வாசம் பண்ணும் எங்களது சரீரமாகிய ஆலயம் தேவனுக்கேற்ற பரிசுத்தத்தோடு காணப்படுவதற்கும், உள்ளத்தின் அசுத்தங்கள் களையப்படுவதற்கும் உமது சமுகத்தில் முற்றிலுமாக அர்ப்பணிக்கிறோம். ஆமென்.