ஜெபக்குறிப்பு: 2022 நவம்பர் 30 புதன்

நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன் (சங்.59:16) இம்மாதம் முழுவதும் நமது கண்ணை கண்ணீருக்கும், காலை இடறுதலுக்கும் தப்புவித்து நடத்திவந்த கர்த்தருடைய கிருபைகளையும் வல்லமைகளையும் மகிழ்ச்சியோடு புகழ்ந்து ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.

உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். … நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன் (யோவான் 14:1,13).

நம்முடன் வாழ்கின்ற கர்த்தர்!

தியானம்: 2022 நவம்பர் 30 புதன் | வேத வாசிப்பு: சங்கீதம் 23:1-6,136

YouTube video

பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது (சங். 136:26).

23ஆம் சங்கீதம் முழுமையுமே, நமக்கொரு மேய்ப்பர் இருக்கிறார் என்ற நிச்சயத்தைத் தருகிறது. இந்த சங்கீதத்தை உச்சரிக்கின்ற ஒருவராவது அந்த உணர்வைப் பெற்றுக்கொள்ளாதிருக்க முடியாது. ஆம், அவர் என்றோ இருந்தவரோ, அல்லது இனிமேல் இருப்பார் என்றோ அல்ல; நமது மேய்ப்பர் இன்று இந்த விநாடியிலும் நம்முடன் இருக்கிறார். அவரே என்றென்றும் முடிவு பரியந்தமும் நம்முடன் கூடவே இருக்கின்ற ஜீவனுள்ள மேய்ப்பர். இந்த உலக வாழ்வு முடிந்தாலும், நித்தியத்திலும் அவரே நம்மோடு இருக்கிறவர். அவரோடு வாழும் நித்திய வாழ்வுக்கு, இன்று அவருடன் வாழும் வாழ்வே நம்மைத் தயார்ப்படுத்துகிறது. ஆகவே அவர் மேய்ச்சலுக்குள் அடங்கியிருப்பேனாக.

இந்த மாதத்தின் முதல் நாளில் தேவனைத் துதிக்க நமக்கு அழைப்பு விடுத்த 136ம் சங்கீதத்துடன் ஆரம்பித்தோம். மாதத்தின் இறுதியிலும், “கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது” என்று கர்த்தருடைய கிருபைகளை எண்ணித் துதிக்க சங்கீதக்காரன் நம்மை அழைக்கிறான். படைப்பில் ஆரம்பித்த சங்கீதக்காரன், தம் பலத்த கரத்தால் இஸ்ரவேலை மீட்டு, சிவந்த சமுத்திரம் வழியாய் வழிநடத் தியதுவரைக்கும் கர்த்தருடைய கிருபையை நினைத்து அவரைத் துதிக்கிறான். சத்துருக்களின் கைக்குத் தமது ஜனத்தைப் பாதுகாத்து, அவர்களுக்கு ஒரு தேசத்தைச் சுதந்தரமாகக் கொடுத்த தேவனுடைய கிருபையை நினைத்து நினைத்து அவன் துதிக்கிறான்!

இவைகள் அன்று நடந்தவை; இன்று நம்மையும் தமது பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டு அரவணைத்த கர்த்தருடைய கிருபைக்கு அளவுமில்லை, முடிவுமில்லை. நமது தாழ்வில் நம்மை நினைத்த நமது மேய்ப்பரின் அன்பு; சத்துருவாகிய சாத்தானின் கரத்திலிருந்து நம்மை மீட்ட அந்த அன்பு; அன்றன்று நம்மைப் போஷித்து நடத்துகின்ற கரிசனை; இந்தக் கிருபைகளை எண்ணி எண்ணித் துதிக்க இந்த வாழ்வு போதாது என்பதை உணர்ந்திருக்கிறோமா? கர்த்தர் என்றும் என் மேய்ப்பராக எப்படி இருக்கிறாரோ, அப்படியே அவருடைய கிருபையும் என்றென்றும் மாறாதது. இந்த தேவன் நம் தேவன். அவர் நம்முடன் இன்றும் வாழுகிறார் என்ற நிச்சயம் நமக்குள் இருந்தால் அவருக்குள் நாமும் வாழுவோம். என்றோ ஒருநாள் அவரோடே இருந்தேன், இனி இருப்பேன் என்று அல்ல; இன்றும் நான் அவரோடே இருக்கிறேன் என்கிற உறுதி நமக்கு வேண்டும். ஆண்டவர் நம்மைக் கைவிடமாட்டார். சறுக்கி விழுந்தாலும், இதோ, நம்மை அன்பாகவே அழைக்கிறார். அவருடைய மந்தைக்குள் நாம் வருவோமானால் அவர் நம்மை அரவணைக்க ஆயத்தமாகவே இருக்கிறார்.

பிரியமானவர்களே, சத்துரு நம்மைத் தொடர்ந்து வந்து, நமது பழைய வாழ்வை நினைவுபடுத்தி, நம்மை அழிக்க எத்தனித்தாலும், கர்த்தர் நம்மைக் கைவிடவேமாட்டார். நம்மோடு இருக்கிறவருடன் நாமும் இருக்கிறோமா?

ஜெபம்: என்னோடிருக்கும் நல்ல மேய்ப்பரே, எந்தச் சூழ்நிலையாயினும் எங்களோடிருக்கிறீர் என்ற உறுதியை இன்று எங்களுக்குத் தந்தீர். உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2022 நவம்பர் 29 செவ்வாய்

… பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன் (யோவேல் 2: 25) கடந்தநாட்களிலே அநேக மாநிலங்களிலே வெள்ளம், கனமழை போன்ற இயற்கை பேரிடனால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு ஏற்பட்ட எல்லா இழப்புகளும் சரிக்கட்டப்பட கர்த்தர் தேசத்தின்மேல் கண்ணோக்கமாயிருக்க, இனி ஒரு சேதம் நேரிடாதபடி காத்தருள ஜெபிப்போம்.

தேவனுக்குப் பிள்ளையா? அந்நியனா?

தியானம்: 2022 நவம்பர் 29 செவ்வாய் | வேத வாசிப்பு: எபேசியர் 4:17-20

YouTube video

நீங்களோ இவ்விதமாய்க் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை (எபேசியர் 4:20).

தன் மகனிடம் ஏற்பட்ட திடீர் மாற்றத்தைக் கண்டு, தாய் ஆச்சரியப்பட்டாள். தகப்பனை வெறுத்துவந்த இம்மகனுக்காக தாய் பல வருஷங்களாக ஜெபித்து வந்தாள். இப்போது அவனுக்கு நடந்தது என்ன? “அம்மா, அப்பாவை ஒரு அன்பற்ற பொறுப்பற்ற அப்பா என்றுதான் இதுவரை நினைத்து அவரை மனதிலே வெறுத்தேன். இரவிலே வீட்டிற்கு வராத அப்பா, பிள்ளைகளோடு நேரம் செலவழிக்காத அப்பா, ஒரு அப்பாவா என்று அப்பாவைக் குறித்துத் தப்பு கணக்குப் போட்டிருந்தேன். ஆனால், எனக்கே தெரியாமல் எனக்குள் இருந்த பழுதடைந்த கிட்னிக்குச் சிகிச்சை செய்வதற்காக இரவு பகல் பார்க்காமல் அப்பா உழைத்ததையும், இன்று நான் அவருடைய கிட்னியினால்தான் உயிர் வாழ்கிறேன் என்பதையும் இப்போதுதான் உணர்ந்துகொண்டேன். அம்மா, நான் அப்பாவைப் புரிந்துகொண்டேன் என்பதைவிட அவரிடம் கற்றுக்கொண்டேன் என்பதுதான் சரி. இனி நான் அவர் பிள்ளையாகவே வாழ்வேன்” என்று சொன்னான் மகன்.

அன்பான தேவபிள்ளையே, நரகத்திற்கு நியமிக்கப்பட்டிருக்கின்றோம் என்ற அறிவே இல்லாமல் மனம்போன வாழ்க்கை வாழ்ந்த நமக்கு நித்திய ஜீவனை அளித்த ஆண்டவரை நாம் எவ்விதமாகக் கற்றுக்கொண்டிருக்கிறோம்? கற்றுக் கொண்டிருந்தால் அவருடைய பிள்ளையாக வாழவேண்டுமென்ற நினைவு நமக்குண்டா? அவர் பிள்ளையானால் அவர் நமது வாழ்வில் வெளிப்படுகிறாரா? கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்கின்ற நமது வாழ்க்கை முறை, நடத்தை, செயல்கள், பேச்சு ஆகிய அனைத்தும் நமக்கும் பிறருக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் தாமாகவே கண்டுகொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும். பவுலடியார் எபேசியருக்கு அன்று சொன்ன காரியங்கள் இன்றும் நமக்கு மிகவும் அவசியமாக இருக்கிறது. புத்தியீனத்தினாலும் அறியாமையினாலும் தேவனுக்கு அந்நியராக இருக்கின்ற மக்களைப்போல நாமும் நடக்கக்கூடாது.

இன்று கலை, கலாச்சாரம் என்ற பெயரில் பல புதிய பழக்கவழக்கங்கள் கிறிஸ்தவ சமுதாயத்துக்குள்ளும் மெதுவாக நுழைந்துவிட்டிருக்கிறதை யாரும் சிந்திக்கிறதில்லை. இன்று நமக்குள் இருக்கும் அந்தகாரத்தின் கிரியைகளை உணர்ந்துகொள்ளக்கூட முடியாதளவுக்கு நமது கண்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. கிறிஸ்துவுக்காக வைராக்கியத்தோடு ஆரம்பித்த கிறிஸ்தவ வாழ்வு இன்று திசை மாறிவருகிறது. இன்று நமக்கும் பிறருக்கும் என்ன வேறுபாடு காணப்படுகிறது? தேவபிள்ளையே, நாம் தேவனுக்குப் பிள்ளைகளா? தேவனுடைய ஜீவனுக்கு அந்நியரா? வீண் தர்க்கங்களைவிட்டு மனந்திரும்புவோமா!

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத் தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள் (ரோமர்.12:2).

ஜெபம்: பிதாவே, எனக்காக ஜீவன் தந்த உம்மை நான் கற்றுக்கொண்ட பிரகாரம் வாழ என்னை நீரே ஜீவபாதையில் வழிநடத்தும். ஆமென்.