வாக்குத்தத்தம்: 2022 நவம்பர் 1 செவ்வாய்

நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரை போடப்பட்டீர்கள் (எபேசி.1:13).

உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும் (ஏசா. 60:5).
வேதவாசிப்பு: காலை: எரேமியா 51,52 | மாலை: தீத்து 2

ஜெபக்குறிப்பு: 2022 நவம்பர் 1 செவ்வாய்

கர்த்தாவே நீர் உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடையாமற்போகப் பண்ணாதேயும் (சங்கீதம் 40:11).

கர்த்தருக்கு புதுப்பாட்டைப் பாடுங்கள்: அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார் (சங்கீதம் 98:1) கடந்த நாட்களெல்லாம் உன்னதமானவர் தமது சிறகுகளால் மூடி, எல்லாத் தீமைக்கும் விலக்கிக் காத்ததுபோல இம்மாதத்திலும் தம்முடைய அதிசயமான கிருபைகளாலே நம்மை வழிநடத்தும்படி நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.

கர்த்தரைத் துதியுங்கள்!

தியானம்: 2022 நவம்பர் 1 செவ்வாய் | வேத வாசிப்பு: சங்கீதம் 136:1-9

YouTube video

கர்த்தரை துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது (சங்கீதம் 136:1).

இந்த புதிய மாதத்திற்குள்ளாக நம் ஒவ்வொருவரையும் வழிநடத்தி வந்த மகத்தான தேவனைத் துதிப்போம். “உன் இருதயம் அதிசயப்பட்டு பூரிக்கும்” (ஏசா.60:5) என்ற வாக்கின்படி சோர்ந்து மனங்கலங்கி நிற்கும் ஒவ்வொருவரையும் தேவன் தமது கிருபையினாலும் நன்மையினாலும் பூரிப்பாக்குவார். எனவே நம்பிக்கையோடும் விசுவாசத்தோடும் முன்னேறி செல்லுவோம்.

“துதி” என்பது இன்று நமக்குப் பழக்கமான ஒன்றாகிவிட்டது. என்றாலும், நெருக்கம் மிகுந்த இந்தக் காலப்பகுதியில் எப்படித் துதிப்பது என்று சிலருக்கு ஒருவித குழப்பம் இருக்கத்தான் செய்கிறது. துதி, ஸ்தோத்திரம், விண்ணப்பம் எல்லாமே ஜெபத்தின் அம்சங்களே. சுருங்கச்சொன்னால், துதி என்பது தேவனாகிய கர்த்தரின் மகிமையைப் போற்றுவது; ஸ்தோத்திரம் என்பது கர்த்தர் செய்த நன்மைகளுக்காய் நன்றி செலுத்துவது; விண்ணப்பம் என்பது பிறர் தேவைகளுக்காக, பின்னர் நமது தேவைக்காக மன்றாடுவது. துதி என்பது உதடுகளிலிருந்து அல்ல. அது இருதயத்தின் ஆழத்திலிருந்து எழுந்து வரவேண்டும். நாம் சந்திக்கும் அன்றாட பிரச்சனைகளினால் பாதிக்கப்பட்ட இந்த மனநிலையில் எப்படித் துதிப்பது என்று பலர் கேட்பதுண்டு.

சங்கீதக்காரன் “கர்த்தரைத் துதியுங்கள்” என்று எல்லோரையும் அழைக்கிறான். எதற்காகத் துதிக்கவேண்டுமாம்? அவர் நல்லவராக இருப்பதற்காக, அவரது கிருபை என்றென்றைக்கும் இருப்பதற்காக, ஒருவராய், பெரிய அதிசயங்களைச் செய்வதற்காக, வானங்களை உண்டாக்கியதற்காக, பூமியை உண்டாக்கியதற்காக, சூரியன், சந்திரன் நட்சத்திரங்கள் இப்படியாக இயற்கைகள் அனைத்திற்காகவும் கர்த்தரைத் துதிக்கும்படியாகக் கூறுகின்றான். ஏன் இயற்கைக்காகக் கர்த்தரை நாம் துதிக்கவேண்டும்? கர்த்தர் நமக்காகத்தானே இயற்கையைப் படைத்தார். அது தரும் ஒளி, வெப்பம், காற்று, தண்ணீர் என்று எல்லா ஆசீர்வாதங்களையும் நாம் அனுபவிக்கிறோமல்லவா! இந்த இயற்கை இல்லாவிட்டால் நாமும் இல்லை. இப்படியிருக்க கர்த்தர் சிருஷ்டித்து தந்த இந்த இயற்கைக்காகத் தேவனைத் துதிக்காமல் இருப்பது எப்படி?

அன்பானவர்களே, காலையில் சூரியன் உதிக்காவிட்டால், மாலையில் அஸ்தமிக்காவிட்டால், என்னவாகும் என்று சிந்தித்துப்பார்ப்போம். காற்று நின்றுபோனால் நாம் செத்துவிடுவோமே! நீரூற்றுக்கள் வற்றிப்போனால் நமது நிலை என்னாவாகும்? நம் கண்கள் காண்கின்ற பச்சையான தாவரங்கள் இல்லாவிட்டால் நமது உலகம் எப்படியிருக்கும்? இக்கொள்ளை நோய் காலத்தில் எத்தனை இயற்கை மூலிகைகள் நமக்குக் கைகொடுத்திருக்கின்றன. காற்றிலுள்ள ஆக்ஸிஜன் வாயுவின் அருமை இப்போதுதானே நமக்குத் தெரிகிறது. இப்போது சொல்லுங்கள்; நமது பிதாவாகிய தேவன் எவ்வளவு நல்லவர்! மனதார அவரை, அவருக்காக, அவருடைய சிருஷ்டிப்புகளுக்காக தேவனைத் துதிப்போமா!!

ஜெபம்: அன்பின் தேவனே, நீர் நல்லவர், நீர் எங்களுக்குத் தந்திருக்கிற நல்ல ஈவுகளுக்காக உமக்கு ஸ்தோத்திரம். இப்புதிய மாதத்தை எங்களுக்கு ஆசீர்வதித்துத் தாரும். ஆமென்.

ஆசிரியரிடமிருந்து… (நவம்பர் – டிசம்பர் 2022)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

உன்னதமான தேவனின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த இதழின் வாயிலாக தங்களைச் சந்திக்க கர்த்தர் கிருபை செய்தபடியால் ஆண்டவருக்கு மகிமையைச் செலுத்துகிறோம். அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அதிக பயனுள்ளதாக இருந்திருக்கும் என்றே கர்த்தருக்குள் விசுவாசிக்கிறோம். அநேகர் தங்களது ஆசீர்வாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டீர்கள். தேவனைத் துதிக்கிறோம். உங்களது ஆவிக்குரிய நண்பர்களுக்கும் தியான புத்தகத்தை அறிமுகப்படுத்த வேண்டுகிறோம்.

சத்தியவசன விசுவாசபங்காளர் சிறப்புக்கூடுகை நவம்பர் 19ஆம் தேதி சென்னையில் நடத்த ஜெபத்தோடு திட்டமிட்டு வருகிறோம். இக்கூட்டத்திற்கான விபரங்கள் 8ஆம் பக்கத்தில் பிரசுரித்துள்ளோம். சென்னையிலும் அருகாமையிலுமுள்ள விசுவாச பங்காளர்கள் தாங்கள் குடும்பமாக இக்கூடுகையில் பங்குபெற்று சிறப்பிக்க அன்பாய் அழைக்கிறோம்.

சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் இடம்பெற்ற செய்திகளடங்கிய புத்தக வெளியீடுகளை மறுபதிப்பு செய்துவருகிறோம். இப்பணிக்கான தேவைகள் அனைத்தும் சந்திக்கப்பட வேண்டுதல் செய்யவும். தேவன் உங்களை ஏவுவாரானால் மனமுவந்து இப்பணிகளைத் தாங்கவும் அன்பாய் கேட்கிறோம்.

இவ்விதழில் நவம்பர் மாத தியானங்களை சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் ஆவிக்குரிய வாழ்வில் கடைபிடிக்கவேண்டிய சிறந்த தியானங்களை எழுதியுள்ளார்கள். டிசம்பர் மாதத்தில் சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் கிறிஸ்துமஸ் நாட்களுக்கான தியானங்களோடு மேலும் பல ஆவிக்குரிய தியானங்களையும் எழுதியுள்ளார்கள். இத்தியானங்களை எழுதுகிற தேவ பிள்ளைகளை உங்களது தனிஜெபங்களிலும் குடும்ப ஜெபங்களிலும் நினைத்து ஜெபிக்க மறவாதீர்கள். நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருக்க கர்த்தர் அனுக்கிரகம் செய்ய வேண்டுதல் செய்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

ஆசீர்வாதத்தைப் பகிர்ந்துகொள்ளுதல்!

அதிகாலை வேளையில்… (நவம்பர் – டிசம்பர் 2022)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: ஆதியாகமம் 12:1-8; கலாத்தியர் 3:6-9

நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் (ஆதியாகமம் 12:2).

பரிசுத்த வேதாகமத்தில் 400 தடவைகளுக்கு மேலாக “ஆசீர்வாதம்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. நம்முடைய ஊழியங்களிலும், உரையாடல்களிலும், ஜெபங்களிலும் அடிக்கடி நாமும் இச்சொல்லைப் பயன்படுத்தி வருகிறோம். தேவன் ஆசீர்வாதத்தின் ஊற்றாய் இருக்கிறார்; நமக்கு ஆசீர்வாதங்களை அருளுகிறார். தம் மக்களை சீர்ப்படுத்தவும் அவர்கள் தம்மை மகிமைப்படுத்தவும் அதனைச் செய்கிறார். அப்.பவுல் தன்னுடைய சரீரத்தில் தரப்பட்ட முள்ளை ஆசீர்வாதமாக எண்ணவில்லை. அதை நீக்கும்படியாக மூன்று முறை தேவனை வேண்டிக்கொண்டார். ஆனால், அது பவுலுக்கும் சபைக்கும் ஆசீர்வாதமாக மாறியது (2 கொரி.12:7-10). சிலுவை மரணத்தைத் தவிர்ப்பதற்கு இயேசுவுக்கு பேதுரு ஆலோசனை கூறினார் (மத்.16:21-28). ஆனால், இயேசு அதனை நிராகரித்து கல்வாரியில் தன்னை பலியாக்கி உலகத்தின் பல சந்ததிக்கு ஆசீர்வாதத்தை அருளினார். மேலும் எதிர்காலத்தில் தம்முடைய ஜனங்களுக்கு நித்திய ஆசீர்வாதத்தையும் தருவார்.

தேவன் நமக்குத் தரும் ஆசீர்வாதம் மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமாக மாற வேண்டும். ஏனெனில் கிறிஸ்தவர்கள் தேக்கிவைப்பவர்களாக அல்ல, பகிர்வாளர்களாக இருக்கவேண்டும். ஏனெனில் கிறிஸ்தவர்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்று அதனை சுயநலமாய் தங்களுக்கென்று வைத்துக்கொள்வது, கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படைக் கொள்கைகளை மீறுவதாகும். “உதார குணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்” (நீதி.11:25). நாம் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காகவே ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்.

ஆபிரகாமும் சாராளும் தேவனை விசுவாசித்து அவருக்குக் கீழ்ப்படிந்ததினால் தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்; முழு உலகத்துக்கும் அத்தம்பதியரை ஆசீர்வாதமாக மாற்றினார். அவர்கள் மூலமாக இஸ்ரவேல் கோத்திரமும், தேசமும் உருவானது. இஸ்ரவேலரே உலகத்திற்கு உண்மையான ஜீவனுள்ள தேவனைப்பற்றிய ஞானத்தைத் தந்தனர். இஸ்ரவேலர் மூலமாகவே நாம் வேதாகமத்தையும் இயேசு கிறிஸ்துவையும் பெற்றுக்கொண்டோம். இஸ்ரவேலரின் சாட்சி இல்லாவிட்டால் இன்றைய புறஜாதிகள் மெய்தேவனை அறியாதவர்களாயும், விக்கிரக ஆராதனைக்காரராயும் வாழ்ந்துகொண்டிருப்பர். “நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்கள்” (எபே.2:12). மாறாக, “அந்தப் படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்” (கலா.3:9).

ஆபிரகாம் தனது சகோதரன் மகனை ஆசீர்வதித்து கானான் தேசத்தின் நிலப்பகுதியின் தெரிந்தெடுப்பைக் கொடுத்தான் (ஆதி.13). லோத்து போர்க் கைதியாகச் சென்ற பின் அவனை மீட்டு வந்தான் (ஆதி.14). சோதோம் அழிக்கப்படும்பொழுது ஆபிரகாமின் மன்றாட்டினால் லோத்து காப்பாற்றப்பட்டான் (ஆதி.19:1-29). ஆனால், துரதிர்ஷ்டவசமாக லோத்து ஆபிரகாமின் விசுவாச மாதிரியைப் பின்பற்றவில்லை. எனவே அவன் ஒரு குகையில், குடிவெறியில் முறையற்ற பாலியல் தொடர்புகொண்டான் (ஆதி.19:30-38). லோத்தும் அவனுடைய சந்ததியினரும் எதிர்காலத்தில் இஸ்ரவேலுக்குத் துன்பத்தையே கொண்டுவந்தனர்.

பக்திமானாகிய ஆபிரகாமும் மூன்று நிகழ்வுகளில் ஆசீர்வாதமாக இருக்க தவறிவிட்டார். பஞ்சகாலத்தில் தேவனை நம்புவதற்குப் பதிலாக எகிப்துக்குத் தப்பியோடினார், அங்கு அவர் பொய்யுரைத்து அம்மக்களுக்கு வாதை உண்டாகக் காரணமானார் (ஆதி. 12:10-20). கேராரின் அரசரிடமும் பொய்யுரைத்தார் (ஆதி.20:1-18). வாக்குத்தத்தத்தின் மகனைப் பெற்றுக்கொள்ள தன்னுடைய வழியில் செல்ல முயற்சித்தான்; ஆனால் அது, அவனுடைய குடும்பத்தில் ஒரு பெரும் பிளவை உண்டுபண்ணியது (ஆதி.16). நாம் தேவனோடு நடக்காவிட்டால் நமது குடும்பத்திலும் வெளியிலும் ஆசீர்வாதம் இருக்காது.

நாம் அனைவரும் தேவனிடமிருந்து ஆசீர்வாதத்தைப் பெற விரும்புகிறோம். ஆனால் அனைவரும் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க விரும்புவதில்லை. இதுதான் ஒரு நதிக்கும் குட்டைக்கும் உள்ள வேறுபாடு. சங்கீதம் 1 இல் காணப்படும் பக்தியுள்ள விசுவாசி தேவனிடமிருந்து ஆசீர்வாதத்தைப் பெற்று, கனிதரும் ஒரு மரமாக மற்றவர்களுக்கு தனது ஆசீர்வாதத்தை பகிர்ந்து கொள்கிறான். “மரத்தை நடுகிறவன் தன்னையும் மற்றவர்களையும் நேசிக்கிறான்” என்று ஓர் ஆங்கிலப் பழமொழி கூறுகிறது. கனிதரும் மரமாக வாழ்ந்து ஆசீர்வாதத்தைப் பகிரவேண்டிய கிறிஸ்தவர்களுக்கும் இது பொருந்தும்.

இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள் (மத்.10:8).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

வாசகர்கள் பேசுகிறார்கள் (நவம்பர் – டிசம்பர் 2022)

1

கிறிஸ்துவுக்குள் அன்புள்ள சகோதரர்கட்கு, உங்கள் யாவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். தேவனுடைய பெரிதான கிருபையிலும் 83 வயதில் நலமாக வைத்திருக்கும் தேவனுக்கு நன்றி சொல்லுவதை விட வேறொன்றும் இல்லை. நிறைய எழுத ஆவல் இருந்தும் முடியவில்லை. அனுதின தியான புத்தகம் தவறாமல் கிடைக்கிறது. மிக்க நன்றி. உங்கள் ஊழியம் அதிகமான ஆத்துமாக்களுக்கு பிரயோஜனமாக இருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி. உங்களுக்காக ஜெபிக்கிறோம்.

Mr.Richard Sam Alex, Chennai.

2

Beloved Brother in Christ, Greetings in “Jesus Name”. We are regularly receiving your ‘Abuthinamum Christhuvudan’. It is very useful to our spiritual life, without reading your book we don’t go out. It leads us guides and guards us. Thank you so much. I am thankful for all your valuable prayer. When I went through the valley of death, God helped me to come out it. I am grateful to you all for the ardent and fervent prayers.

Mr.S. Mathews, Vellore.

3

புத்தம் புதிய சிறப்பான காலைப்பதிவுகள் (வாட்ஸ்அப்). வாழ்த்தும், தேவ வாக்குத்தத்தமும் மிக அருமை. மகிழ்கிறேன். ஞாயிறு பரிசுத்த ஓய்வுநாளின் ஒப்பற்ற ஆசீர்வாதமான வாக்குத்தத்தமும் வாழ்த்தும் கொண்ட மிக அருமையான பதிவுகள். நன்றிகள். பாராட்டுக்கள்.

Mr.Antony.