ஜெபக்குறிப்பு: 2023 ஜுன் 30 வெள்ளி
பாதாளம் உம்மைத் துதியாது, மரணம் உம்மைப் போற்றாது … உயிரோடிருக்கிறவன், உயிரோடிருக்கிறவனே உம்மைத் துதிப்பான் (ஏசா.38:18,19) இம்மாதம் முழுவதும் நமது ஜீவனை பாதுகாத்து அழிவுக்கு தப்புவித்த கர்த்தாதி கர்த்தரை முழுப்பெலத்தோடு ஸ்தோத்திரித்து மகிமைப்படுத்துவோம்.
நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார் (மத்.6:17,18).
நமக்காக வேண்டுதல் செய்பவர்!
தியானம்: 2023 ஜுன் 30 வெள்ளி | வேத வாசிப்பு: ரோமர் 8:26-32

அந்தப்படியே … ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெரு மூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் (ரோமர் 8:26).
வாக்களிக்கப்பட்ட கானானைச் சென்றடையும் பயணத்திலே இஸ்ரவேல் மக்களுக்கு வழியில் பல தேவைகள் ஏற்பட்டன. இப்படியான வேளைகளில், அவர்கள் தம்மை வழிநடத்திச்செல்லும் மோசேயிடமே சென்று தமது தேவைகளைக் கூறினார்கள். அவரிடம் தமது வழக்குகளை முறையிட்டனர். தமக்கு என்னப் பிரச்சனை ஏற்பட்டாலும் மோசேயிடமே சென்றனர். மோசே அவர்களுக்காகத் தேவனிடத்திற்குச் சென்று, அவர்கள் விண்ணப்பங்களைக் கூறி, தேவனிடத்திலிருந்து பதிலைப் பெற்று, அதை மக்களுக்குக் கூறி வந்தார். இப்படியே அவர்களது தேவைகள் அனைத்தும் சந்திக்கப்பட்டன. அவர்கள் சமாதானத்தோடு வழிநடந்துச் சென்று கானானை அடைந்தார்கள்.
நாமும்கூட நமக்காக வாக்களிக்கப்பட்ட பரம கானானை நோக்கிப் பயணமாகிக் கொண்டிருக்கும் பயணிகள் அல்லவா? இந்த வாழ்க்கைப் பயணத்திலே இஸ்ரவேல் மக்களைப்போல பலவிதமான தேவைகளோடும், பிரச்சனைகளோடும் வழிநடந்து செல்லவேண்டியாதிருக்கிறது. பலவேளைகளிலும், தமது விண்ணப்பங்களுக்கான பதில் கிடைக்காதபோதும், அது தாமதிக்கும்போதும், பொறுமையை இழந்து ஜெபிப்பதையே நிறுத்திவிடுகிறவர்களும் உண்டு. அப்படியான சூழ்நிலையிலே நமக்காகக் கர்த்தரிடத்தில் பரிந்துபேசும் பரிசுத்த ஆவியானவரை மறந்தே போய்விடுகிறோம். ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியது எப்படி என்று நமக்குத் தெரியாததினாலே, அவர் நமக்காக பிதாவின் சந்நிதியில் எண்ணுக்கடங்காத பெருமூச்சுக்களோடு விண்ணப்பம் செய்து கொண்டிருக்கிறார் என பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.
அன்பானவர்களே, வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும்போது நமது வாழ்வைக் குறித்த தேவசித்தம் என்னவென்பதை பலவேளைகளிலும் நமக்கு அறிந்துகொள்ள முடியாமல் போய்விடுகிறது. அப்படிப்பட்ட வேளைகளில் நாம் எப்படியாக விண்ணப்பம் செய்யவேண்டும் என்பதைக்கூட அறியாமல் கலங்கிப் போகிறோம். இன்று நீங்களும்கூட அப்படியான ஒரு சூழ்நிலையில் இருக்கிறீர்களா? அன்று இஸ்ரவேலின் தேவைகளைச் சந்தித்த தேவன் உங்களைக் கைவிடார். உங்கள் இருதயத்தின் சகல பாரங்களையும் எண்ணங்களையும்; கர்த்தரிடத்தில் ஏறெடுங்கள். என்னிடத்தில் வருகிற ஒருவரையும் நான் புறம்பே தள்ளேன் என்று வாக்களித்தவர் நிச்சயமாகவே உங்களுக்குத் தமது சித்தத்தை வெளிப்படுத்துவார்.
“நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன், உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (சங்.32:8).
ஜெபம்: அன்பின் கர்த்தாவே, பாடுகள் உபத்திரவங்களின் மத்தியில் வழி தெரியாமல் தடுமாறுகையில் எங்களுக்காக ஜெபிக்கும் தேற்றரவாளனுக்காகவும், நீர் அருளும் உமது தெய்வீக வழிநடத்துதலுக்காகவும் உம்மைத் துதிக்கிறேன். ஆமென்.
வாக்குத்தத்தம்: 2023 ஜுன் 29 வியாழன்
மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள் (மத். 3:8).
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 17,18 | மாலை: அப்போஸ்தலர் 7:1-19
ஜெபக்குறிப்பு: 2023 ஜுன் 29 வியாழன்
உங்கள் வழிகளைப் பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது (ஏசா.55:9) என்ற வாக்குப்படியே மனபாரங்களோடும், சொல்ல முடியாத வேதனைகளோடும் பல பிரச்சனைகளின் மத்தியில் ஏற்ற பதிலுக்காக காத்திருக்கிற தம்முடையவர்கள்மேல் கர்த்தர் தமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணி அவர்களை விடுவித்திட வேண்டுதல் செய்வோம்.
மாராவின் தண்ணீர்
தியானம்: 2023 ஜுன் 29 வியாழன் | வேத வாசிப்பு: யாத்திராகமம் 15:22-27

அவர்கள் மாராவிலே வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததினால் அதைக் குடிக்க அவர்களுக்குக் கூடாதிருந்தது (யாத்தி. 15:23).
இஸ்ரவேல் மக்களின் வனாந்தரப் பயணமானது பலவிதங்களில் நமது வாழ்க்கைப் பயணத்திற்கு ஒத்திருக்கிறது. அவர்கள் தமது பயணத்தில் மூன்று நாட்களாக வனாந்தரத்தில் குடிக்கத் தண்ணீர் இன்றி நடந்து வந்தார்கள். இவர்கள் மாரா என்ற இடத்திற்கு வந்துசேர்ந்தபோது, அங்கே தண்ணீர் இருந்தது; ஆனாலும் குடிக்கக்கூடாதபடிக்கு அது கசப்பாக இருந்தது. உடனே அவர்கள் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள். மோசே என்ன செய்ய முடியும்? “நான் உங்களோடேகூட இருந்து உங்களை வழிநடத்துவேன்” என்று கூறிய தேவனிடமே, மோசே சென்று முறையிட்டார். வாக்கில் உண்மையுள்ள கர்த்தர், மோசேயிடம் ஒரு மரத்தைக் காண்பித்து, அதை வெட்டி, தண்ணீரிலே போடும்படி கூறினார். மோசே அப்படிச் செய்தபோது தண்ணீரின் கசப்பு மாறி, அது தித்திப்பாயிற்று. அவர்கள் தண்ணீரைப் பருகி தங்கள் தாகத்தைத் தீர்த்துக் கொண்டார்கள்.
ஆம், நமது வாழ்க்கைப் பயணத்தில்கூட நாம் பல கசப்பான அனுபவங்களைச் சந்திக்க நேரிடுகிறது. அவ்வேளையில் நாம் அதிகமாய் சோர்ந்து போகிறோம். சிலவேளைகளில் அந்த இஸ்ரவேலரைப்போல முறுமுறுக்க ஆரம்பிக்கிறோம். ஆனால், எவ்விதக் கசப்பான அனுபவங்களானாலும் அவற்றை மதுரமானதும் ஆசீர்வாதமுமான அனுபவங்களாக மாற்றக்கூடிய ஒரே கர்த்தர் நமக்கு உண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
பழைய ஏற்பாட்டில் நகோமி தன் கணவனையும் இரு மகன்மாரையும் இழந்து, இறுதியில் வேதனையின் மிகுதியால் தன் பெயரைக்கூட “கசப்பு” என்று அர்த்தம் கொள்ளும்படி “மாராள்” என மாற்றிக்கொண்டாள். ஆனால் கர்த்தரோ, அவளது வாழ்வு கசப்போடேயே முடிந்துவிட இடங்கொடுக்கவில்லை. அவளது வாழ்க்கையில் இடைப்பட்டு, முடிந்தது என நினைத்திருந்த அவளது வம்சத்தை மறுபடியும் தழைக்கச்செய்தார். அவளது மருமகள் மூலம் அவளுக்கு ஒரு வாரிசைக் கொடுத்து, அவளது கசப்பை இனிப்பாக மாற்றினார்.
அன்பானவர்களே, வாழ்க்கையில் கசப்பான அனுபவங்கள் ஏற்படும்போது, அவற்றையே எண்ணிஎண்ணிக் கசந்து கொண்டிருக்கவேண்டாம். தண்ணீர் தாகம் எப்படி நம்மை வாட்டுமோ அதிலும் அதிகமாக வாழ்வின் அனுபவங்கள் நம்மை வாட்டும். ஆனாலும் அவற்றை அப்படியே ஆண்டவரிடம் கொண்டு வாருங்கள். அவர் உங்கள் கசப்பை நிச்சயம் மாற்றுவார். முடிந்தது என்று நீங்கள் நினைத்தது கிறிஸ்துவுக்குள் மீண்டும் தழைக்கும். உங்கள் துக்கம் களிப்பாக மாறும்.
என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம் பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்து போட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர் (சங்.30:11).
ஜெபம்: அன்பான தேவனே, கசந்துபோன என் வாழ்க்கையை நீர் ஒருவரே மகிழ்ச்சியாக்குவீர் என்பதை விசுவாசிக்கிறேன். என் விசுவாச ஓட்டத்தில் சோர்வடைந்து தளர்ந்து போகாமல் முன்செல்ல என்னை வழி நடத்துவீராக. ஆமென்.