ஜெபக்குறிப்பு: 2023 மே 31 புதன்
கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன் (சங்.89:1) இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளிலும் கர்த்தர் நம்மை கண்ணின்மணிபோல தம்முடைய கிருபையால் நம்மை சூழ்ந்து பாதுகாத்து நமது தேவைகளை சந்தித்து வழிநடத்தி வந்த தயவுகளை எண்ணி நன்றிகளையும் ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி அவரை மகிமைப்படுத்துவோம்.
அழியாத பொக்கிஷம்!
தியானம்: 2023 மே 31 புதன் | வேத வாசிப்பு: மத்தேயு 6:19-21

பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள் (மத்தேயு 6:20).
நமக்கு மிகவும் பெறுமதிப்பானவை என்று நினைத்துப் பத்திரப்படுத்தி வைத்திருந்த பலவற்றைச் சந்தர்ப்ப சூழ்நிலையால் இழந்துபோன அனுபவம் நமக்கு இருக்கலாம். அல்லது, அவை நம்மைவிட்டுத் தொலைந்துபோனதாகக்கூட இருக்கலாம். சமீபத்தில் வந்த வெள்ளத்தின்போது, ஞாபகத்திற்காகப் பத்திரப்படுத்திவைத்து, பார்த்துப்பார்த்து மகிழ்ந்திருந்த புகைப்பட அல்பங்கள் எல்லாம் ஒரு நிமிடத்தில் அழிந்துபோனது என்று ஒரு சகோதரி கூறி, துக்கப்பட்டாள்.
கர்த்தரின் வார்த்தை எவ்வளவு உண்மையானது! இவ்வுலகில் நாம் சேர்த்து வைக்கும் பொக்கிஷங்களெல்லாமே ஒருநாள் அழிந்துபோகும். அல்லது இழக்கப் படவும் வாய்ப்பு உண்டு. ஆனால், பரலோகத்தில் சேர்த்துவைக்கும் பொக்கிஷமோ அழியாதது. அந்த அழியாத பொக்கிஷம்தான் என்ன? நாம் தேவனுக்காய் செய்யும் பணிகள், மற்றவர்களுக்குச் செய்யும் நற்காரியங்கள், நமது விசுவாசம், நாம் ஆதாயப்படுத்திக்கொள்ளும் ஆத்துமாக்கள், தேவையுள்ளோருக்குச் செய்யும் உதவிகள், பிறருக்காக ஏறெடுக்கும் ஜெபங்கள் இப்படியாக நாம் பரலோகில் பொக்கிஷமாகச் சேகரித்து வைப்பதற்கு எத்தனையோ நற்காரியங்கள் உண்டு. அவைகள் ஒருநாளும் அழியமாட்டாது.
அன்பானவர்களே, நாம் இன்று இவ்வுலகத்தின் காரியங்களையே அதிகமாக சேர்த்துவைக்கப் பிரயாசப்படுகிறோம். பணம், சொத்து, நிலம் என்று எத்தனை! ஆனால், இவையெல்லாம் நாம் இந்த உலகத்தில் வாழும்வரைக்கும்தான். நாம் இவ்வுலகிற்கு ஒன்றும் கொண்டு வந்ததும் இல்லை; போகும்போது ஒன்றும் கொண்டு போவதும் இல்லை. பரலோகத்தில் நாம் சேர்த்துவைக்கும் பொக்கிஷமோ அழியாதது என்று ஆண்டவரே உறுதியளித்திருக்கிறார். நாம் உபவாசிப்போம், சில நேரங்களில் மாம்ச உணவுகளைத் தவிர்ப்போம், களியாட்டங்களை விட்டுவிடுவோம், இவைகள் நல்லதுதான். ஆனால், கஷ்டப்படுவோரை நினைந்து நாம் செய்யும் நற்கிரியைகள் நமக்குப் பொக்கிஷங்களை பரலோகத்தில் சேர்த்து வைக்கும். நாம் எதைச் செய்ய விரும்புகிறோம்? இவ்வுலகில் பொக்கிஷங்களைச் சேர்க்கப்போகிறோமா அல்லது பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்க்கப்போகிறோமா? இன்றே ஒரு தீர்மானத்துக்கு வருவோம். நமது தீர்மானமே நமது முடிவையும் நிர்ணயிக்கும். நாம் தகுதியற்றவர்களாய் இருந்தபோது நமக்காகத் தமது சொந்தக்குமாரனையே பொக்கிஷமாய்த் தந்தவர் தேவன். அவரது பிள்ளைகளாகிய நமக்கும் அந்தப் பொறுப்பு உண்டு.
நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும் … கட்டளையிடு (1தீமோ.6:18).
ஜெபம்: நல்ல ஆண்டவரே, நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், உதாரகுணமுள்ளவர்களாகவும் நாங்கள் நடந்து பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்த்து வைக்கிறவர்களாக காணப்பட உமதருள் தாரும். ஆமென்.
வாக்குத்தத்தம்: 2023 மே 30 செவ்வாய்
பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் (யோவா.20:21).
வேதவாசிப்பு: காலை: 2இராஜாக்கள் 9,10 | மாலை: யோவான்.9:1-20
ஜெபக்குறிப்பு: 2023 மே 30 செவ்வாய்
கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான் (நீதி.29:25) என்ற வாக்குப் படியே இம்மாதம் முழுவதும் தங்களது மனப்பூர்வமான காணிக்கையாலும் ஜெபத்தாலும் தாங்கிவந்த அனைத்து பங்காளர்கள் ஆதரவாளர்கள் நேயர்களை கர்த்தர் ஆசீர்வதித்து அவர்கள் களஞ்சியங்களை பூரணமாய் நிரம்பச் செய்ய வேண்டுதல் செய்வோம்.
நீ எங்கே இருக்கிறாய்?
தியானம்: 2023 மே 30 செவ்வாய் | வேத வாசிப்பு: ஆதியாகமம் 3:6-10

அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார் (ஆதி. 3:9).
இப்பொழுதெல்லாம் அனைவரது கையிலும் எந்நேரத்திலும் கைதொலைபேசி இருப்பதால், அழைப்புக்களும் ஓய்வில்லாமல் வந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், நாம் ஒரு நூலகத்தில் இருக்கிறபோதும், படுத்து உறங்கிக்கொண்டு இருக்கிறபோதும், வீட்டில் இருக்கிறபோதும் வருகிறதான தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் பேசுகிற விதங்களில் நிறையவே வித்தியாசங்கள் உண்டு. காரணம் நாம் எங்கேயிருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம், அதன் அடிப்படையிலேயே பேசுவோம்.
இங்கே, கீழ்ப்படியாமையினாலே பாவத்தில் வீழ்ந்துபோன ஆதாம் இப்போது தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கேட்டு, அவருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே அவனது மனைவியோடுகூட ஒளித்துக்கொண்டிருக்கிறான். அப்பொழுதுதான் தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கிறாய்” என்கிறார். அவன் எங்கே இருக்கிறான் என்பது கர்த்தருக்குத் தெரியாதா? தெரியாததால் கர்த்தர் ஆதாமைக் கூப்பிடவில்லை. அவன் எங்கே இருக்கிறான் என்பதை ஆதாமே உணர்ந்து கொள்வதற்காகவே கர்த்தர் கேட்கிறார். அப்போதுதான் ஆதாம் தனது நிலையை உணருகிறான். “நான் நிர்வாணியாய் இருக்கிறேன், பயந்துபோய் ஒளித்துக்கொண்டிருக்கிறேன்” என்கிறான். அப்பொழுது தேவன், “நான் புசிக்க வேண்டாம் என்று விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ” என்றபோது, “நீர் தந்த ஸ்திரீதான் தந்தாள்” என்று ஏவாளைக் குற்றஞ்சாட்டிய பின்பே, தான் புசித்ததை ஒப்புக்கொள்ளுகிறான்.
தேவபிள்ளையே, இன்று நாமும்கூட தவறு இழைத்துவிட்டு, அதை நியாயப்படுத்த முனைவதுண்டு. நமது தவறுக்குப் பிறரை அல்லது சூழ்நிலையைச் சாக்கு சொல்வதுண்டு. நாம் பாவத்தில் விழுந்தால் முதலாவது எங்கே இருக்கிறோம் என்பதை உணரவேண்டும். தேவனுடைய சமுகத்தினின்று, அவர் வார்த்தையினின்று விழுந்துவிட்டோம் என்பதைப் புரிந்திடவேண்டும். அடுத்து, நாம் செய்த தவறுக்கு நாமேதான் பொறுப்பேற்க வேண்டும். தவறை உணர்ந்தவனே, மனந்திரும்பி வாழுவான். சாக்குப்போக்குச் சொல்லித் தப்ப நினைப்பவன் ஒரு போதும் மனந்திரும்பமாட்டான். இன்று நாம் எங்கே இருக்கிறோம் என்பதை நிதானித்துப் பார்ப்போம். தேவனைவிட்டு விலகியிருந்தால், மீண்டும் தேவனண்டை திரும்புவோம். நாம் தவறின நேரங்களை நினைத்துப் பார்த்து, தேவனிடத்தில் மன்னிப்பைப்பெற்று மீண்டும் தேவனோடு வாழத் தொடங்குவோம். நாம் எங்கே நிற்கிறோம் என்பதைத் தேவன் அறிவார். ஆனால், நாம் அதை உணர வேண்டும். எப்போது அதை உணருகிறோமோ அன்றே நமக்கு இரட்சண்ய நாள்!
உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன் (சங்கீதம் 139:7).
ஜெபம்: அன்பின் தேவனே, உமது சமுகத்தைவிட்டு விலகினதை உணரும்படியான இரு தயத்தை எங்களுக்குத் தந்து உம்மண்டை கிட்டிச்சேரும் பாக்கியத்தைத் தாரும். ஆமென்.