வாக்குத்தத்தம்: 2023 மே 1 திங்கள்

குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் (யோவான் 8:36).

கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர் (எண்ணா. 6:25).
வேதவாசிப்பு: காலை: 1சாமுவேல் 29-31 | மாலை: லூக்கா.22:1-27

ஜெபக்குறிப்பு: 2023 மே 1 திங்கள்

கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும், உம்முடைய தயை நலமாயிருக்கிறது; உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கடாட்சித்தருளும் (சங்.69:16).

கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும் (சங்.4:6) என்ற வாக்குப்படியே கர்த்தர் தமது திருமுகப் பிரகாசத்தை நம்மேல் வீசச்செய்து நமக்கு முன்பதாக உள்ள எல்லா இருளையும், எல்லாத் தடைகளையும் கடந்து கிறிஸ்துவுக்குள் ஜெயமுள்ள வாழ்வை வாழ தேவகிருபைக்காய் ஜெபிப்போம்.

பின்னானவைகளை மறந்து…

தியானம்: 2023 மே 1 திங்கள் | வேத வாசிப்பு: பிலிப்பியர் 3:3-16

YouTube video

கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன் (பிலிப்பியர் 3:14).

மற்றுமொரு புதிய மாதத்திற்குள் வர நமக்கு கிருபை செய்த தேவனைத் துதிப்போம். இந்த புதிய மாதம் முழுவதும் நம் ஒவ்வொருவருக்கும் தேவன் போதுமானவராக இருந்து நம் தேவைகள் அனைத்தையும் சந்தித்து வழிநடத்துவாராக! கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர் (எண்.6:25) என்ற வாக்கின்படி நம்மை ஆசீர்வதித்து இம்மாதத்தில் வழிநடத்துவார்.

பந்தயத்தில் வெற்றியை மாத்திரமே இலக்காகக்கொண்டு ஓடுகிறவன், இலக்கை விட்டு தன் பார்வையை முந்திய தோல்விகள் பக்கம் திருப்பி, பயந்து, அல்லது, தான் முதலாவதாக ஓடுவதை உணர்ந்து பெருமையடைந்து பின்னே வருகிறவன் எங்கே வருகிறான் என்று பார்க்க சற்று திரும்பிப் பார்த்தாலும்கூட அவன் தன் வெற்றி இலக்கைத் தவறவிடுவது நிச்சயம். நமது வாழ்வின் வெற்றியும் அப்படித்தான்.

யூத மத வைராக்கியமும், கல்விமானுமாகிய பவுல், முதுநிலை பட்டத்தைப் பெற்றுக்கொள்ள எண்ணாமல், கிறிஸ்துவை அறிகிற அறிவின் மேன்மையை அடைவதும், கிறிஸ்துவைப்போல ஆகுவதும், கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனாகக் காணப்படுவதுமே தனது ஒரே இலக்கு என்று எழுதுகிறார். கிறிஸ்துவே தனக்கு எல்லாவற்றுக்கும் எல்லாமுமாக இருப்பதை நாடுகிறார். கிறிஸ்துவுக்காய் அளப்பரிய ஊழியத்தைச் செய்த பவுல், அநேக சபைகளை ஸ்தாபித்த பவுல், தன் சுய பெருமையை நாடாமல், தன் வாழ்வின் இலக்காகக் கிறிஸ்துவை மாத்திரமே கொண்டிருந்து, அந்த இலக்கை மாத்திரமே தன் கண்களுக்குள் வைத்திருந்தார். இதற்காகவே தனக்கு மேன்மையாக இருந்த சகலத்தையும் குப்பையாகத் தள்ளிவிட்டார். இந்த ஓட்டத்தில் தனக்குத் தடையாயிருந்த “பின்னானவைகளை” மறக்கவும், தனக்கு முன் வைக்கப்பட்டிருந்த “முன்னானவைகளை” நோக்கி ஓடவும் கவனமாக இருந்தார். அது என்ன பின்னானவைகள்? கிறிஸ்தவர்களுக்குச் செய்த அக்கிரமம், முக்கியமாக ஸ்தேவானின் மரணத்தில் உடன்பட்டிருந்தமை ஆகியவை பவுலின் மனதை வருத்தியிருக்கலாம். இன்னும், அவர் இருந்த மேன்மையான நிலை அவரை பெருமைகொள்ளச் செய்திருந்த காலங்கள் அவரை இப்போது வருத்தியிருக்கலாம். எதுவாயினும் இப்போது, உடைக்கப்பட்டவராய், பின்னானவைகளை மறந்து தேவன் அழைத்த பரமஅழைப்பை மாத்திரமே இலக்காகக்கொண்டு ஓடுகிறார்.

பிரியமானவர்களே, தேவன்தாமே கிருபையாக அழைத்த பரம அழைப்புக்கு எதிரான தடைகள் நமக்கும் வரும். “கிறிஸ்து” என்ற ஒரே இலக்கைவிட்டுத் திசை திருப்பி, தேவனிடத்திலிருந்து நம்மைப் பிரிக்க, நமது பழைய பாவ வாழ்வை நினைவு படுத்தி, சோர்வுறப் பண்ணுவான் சத்துரு. அல்லது, கர்த்தருக்காகச் செய்த பணிகளை நினைவுக்குக் கொண்டுவந்து “பெருமை” என்ற வலைக்குள் தந்திரமாக நம்மை சிக்கவைப்பான். நாம் ஒன்றுமில்லை என்று உணர்ந்து, நமக்குள் உடைக்கப் படாதவரை இந்தப் பெருமை நிச்சயம் நம்மை வீழ்த்திப் போடும்.

ஜெபம்: அன்பின் தேவனே, பின்னானவைகளைத் திரும்பிப் பார்த்துப் பெருமை கொள்ளும் என் பாவத்தை இன்றே உடைத்தெறிந்துவிட்டு, உம் பாதத்தில் என்னை வெறுமையாக்கி ஒப்புவிக்கிறேன். ஆமென்.

ஆசிரியரிடமிருந்து… (மே – ஜுன் 2023)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

உலக இரட்சகராக இவ்வுலகில் வந்த கிறிஸ்து இயேசுவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மே-ஜுன் மாத அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்தை வெளியிட கர்த்தர் கிருபை செய்திருக்கிறார். தியான புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தியானங்கள் ஒவ்வொன்றும் கடைசிகாலத்தில் வாழுகின்ற நமக்கு அதிகப் பிரயோஜனமாக இருக்க ஜெபிக்கிறோம். தியானங்கள் வாயிலாக தாங்கள் பெற்றுவரும் ஆசீர்வாதங்களையும் எங்களோடு பகிர்ந்துகொள்ள அன்பாய் கேட்கிறோம். இப்புத்தகத்தை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்தி வையுங்கள். தங்களது உறவினர்கள், நண்பர்கள், சகவிசுவாசிகளின் முகவரிகளை எங்களுக்குத் தெரியப்படுத்தினால் அவர்களுக்கு மாதிரி பிரதியை நாங்கள் அனுப்பிவைப்போம்.

சத்தியவசன வெளியீடுகள் பிரிண்ட் பண்ணுவதற்கு பேப்பர் தடையின்றிக் கிடைக்கவும், பிரிண்டிங்கில் உள்ள தாமதம் நீங்கவும், உரியநேரத்தில் பங்காளர்களுக்கு வெளியீடுகள் அனுப்பிவைக்கவும், தபாலில் தவறாமல் பங்காளர்கள் அனைவருக்கும் கிடைப்பதற்கும் பாரத்தோடு ஜெபிக்க அன்பாய் கேட்கிறோம். சத்தியவசன தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் தொடர்ந்து வெளிவருவதற்கு உள்ள பணத்தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் ஜெபியுங்கள். தேவன் உங்களை ஏவுவாரானால் ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து தாங்கவும் அன்புடன் வேண்டுகிறோம்.

பங்காளர் குடும்பத்திலுள்ள அரசுத்தேர்வு, கல்வி இறுதியாண்டு தேர்வு எழுதின எல்லாப் பிள்ளைகளது சிறந்த தேர்ச்சிக்காகவும், புதிய கல்வியாண்டை தேவன் ஆசீர்வதிப்பதற்கும் ஜெபிக்கிறோம்.

இவ்விதழில் மே மாதத்தில் உடைக்கப்படுதலின் அனுபவத்தைக் குறித்தும், அதனால் நாம் அடையும் ஆசீர்வாதங்களைக் குறித்தும் தியானங்கள் இடம்பெற்றுள்ளன. ஜுன் மாதத்தில் இடம்பெற்றுள்ள தியானங்கள் கிறிஸ்துவுக்குள்ளான நமது வாழ்வை நாம் ஆராய்ந்து பார்ப்பதற்கு ஏதுவாய் அமைந்துள்ளது. இரு மாதங்களின் தியானங்களையும் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகள் அனைவரையும் உங்கள் ஜெபங்களில் தாங்க அன்பாய் கேட்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

பராக்கிரமசாலி!

அதிகாலை வேளையில்… (மே – ஜுன் 2023)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: நியாயாதிபதிகள் 6:11-14

அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார் (நியாயாதிபதிகள் 6:14).

ஒருவேளை நாம் கிதியோனின் அயலகத்தாராய் இருந்திருந்தால், ஒருநாள் அவர் இஸ்ரவேலின் பெரிய தளபதியாகவும், புகழ்பெற்ற நியாயாதிபதியாகவும் மாறுவார் என நினைத்திருக்கமாட்டோம்; ஆனால் அதுவே நிகழ்ந்தது. கிதியோன் திராட்ச ஆலைக்கு அருகே இருந்த களத்தில் இரகசியமாக கோதுமையைப் போரடித்துக் கொண்டிருந்தபோது, “பராக்கிரமசாலியே” (நியா.6:12) என்று அவனை கர்த்தருடைய தூதன் அழைத்ததைக் கேட் டதும் அவன் அதிர்ச்சிக்குள்ளானான்.

பாகாலின் பீடத்தைத் தகர்த்து தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டவேண்டும் என்று தைரியமாக அவன் கூறியது அவனுடைய நண்பர்களுக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கியிருக்கும். அவன் ஒரு சிறிய படையைத் திரட்டி மீதியானியரைத் தோற்கடித்தான். பயந்த அவன் தைரியசாலியானான். அவனுடைய இந்த மாற்றத்தின் இரகசியம் யாது? அவன் தேவனால் அனுப்பப்பட்டான். அவர் தம்முடைய வாக்குறுதியைக் காத்துக்கொள்வார் என நம்பினான். நாம் யார் என்பதோ, நம்மால் என்ன முடியும் என்பதோ முக்கியமல்ல. நாம் தேவனால் அனுப்பப்பட்டோமா என்பதே முக்கியம்.

தேவனுடனான முதல் சந்திப்பில் வெளிப்பட்ட கிதியோனுடைய அவிசுவாசம் அனைத்தையும் பாழாக்கிவிடுவது போல் இருந்தது. “கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான்”. தேவனை நோக்கிப்பார்த்து அவருக்குக் கீழ்ப்படியாமல் தன் சூழ்நிலையைப் பார்த்ததே கிதியோன் செய்த தவறு ஆகும். எந்த சூழ்நிலைகளும் நமது சர்வவல்ல தேவனை ஒரு போதும் பாதிக்காது; ஏனெனில் இயலாதவற்றையும் செய்ய அவர் அதிகாரமுடையவர். உண்மையான ஜீவனுள்ள தேவனை விசுவாசித்து நீங்கள் வாழ்ந்தால் வினா எழுப்பமாட்டீர்கள். அவருடைய வாக்குறுதியை நம்புவீர்கள்.

கிதியோன் தன் நிலையைப் பார்த்து இன்னும் அதிகமாக அதைரியமடைந்தான்.”அதற்கு அவன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான்” (வச.15). ஆனால் தேவன் அவனை “பராக்கிரமசாலியே” என்று அழைத்து விட்டார். தேவன் கூறுவது அனைத்தும் உண்மையாகவே இருக்கும்.

“ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமை பாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்” (1கொரி.1: 27- 29).

கிதியோன் தேவனால் தகுதி பெற்றான், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட நாமும்தான்!

எபிரெயர் 11:32இல் தங்களை அனுப்பின தேவனுக்காக பெரிய காரியங்களைச் செய்து அவரை மகிமைப்படுத்திய விசுவாச வீரர்களின் பட்டியலில் கிதியோனும் இடம் பெற்றுள்ளார். தேவன் நம்மை அனுப்பும்பொழுது அவரும் நம்முடன் வருகிறார்; நம்முடன் தங்குகிறார். “இதோ நான் உங்களுடன் கூட இருக்கிறேன்” என்று வாக்களித்த தேவன் அவர்களைத் தாங்கினார். அவருடைய வாக்குறுதி இன்றும் நம்மைத் தாங்குகிறது. தேவன் ஆபிரகாமுக்கு வாக்குறுதி அளித்தார் (ஆதி.26:3), யாக்கோபுக்கு (ஆதி. 31:3), மோசேக்கு (யாத்.3:12), யோசுவாவுக்கு (யோசுவா 1:5,9) எரேமியாவுக்கு (எரே.1:8,19), அப்.பவுலுக்கு (அப்.18: 9-10) கிறிஸ்தவ விசுவாசி ஒவ்வொருவருக்கும் (எபி.13:5-6) இவ்விதமான வாக்குறுதி அளித்துள்ளார். “உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா˜”, “நான் உன்னோடே இருக்கிறேன்” என்ற வாக்குறுதிகள் எந்த ஒரு கிறிஸ்தவனையும் தைரியசாலியாக்கிவிடும்.

என் நண்பர் அனுப்பிய ஒரு சிறு கவிதை இந்த தியானத்தின் சுருக்கத்தை விளக்குவதாக அமைந்துள்ளது.

சூழ்நிலையைப் பார்த்தால் அது துயரத்தைத் தரும்;
சுயத்தைப் பார்த்தால் அது மனச்சோர்வை அளிக்கும்;
ஆனால் விசுவாசத்தோடு இயேசுவைப் பார்த்தால்
அது உங்களுக்கு ஆசீர்வாதத்தை அளிக்கும்.

“விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” (எபிரெயர்12:1-2).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

வாசகர்கள் பேசுகிறார்கள் (மே – ஜுன் 2023)

1

Dear Brother in Christ, I feel so much happy in blessed towards your wonderful posters (whatsapp) daily in very much appreciated to you. I am so blessed in very impressed with your daily posters… Thank you.

Mr.G.Antony.

2

Dear Brother in Christ, Praise God. Your team prayer brings more victorius of my daughters life. She had leg pain eighty percent OK relief for through prayer and regular physiothrephy treatment. She got a Job in ESI Medical College in Chennai. Thank God.

Mr.Paul Inbanathan, Salem.

3

கிறிஸ்துவுக்குள் அன்பான ஐயா அவர்களுக்கு, நாங்கள் பல ஆண்டுகளாக சத்தியவசன பங்காளர்களாக இருந்துவருகிறோம். அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் முதிர்வயதில் உள்ள எனக்கும் எனது மனைவிக்கும் நாங்கள் இருக்கும் சூழ்நிலைக்கேற்றவாறு உள்ளன. சகோதரி அவர்களுக்காகவும் ஊழியங்களுக்காகவும் ஜெபிக்கிறோம்.

Mr.Selvaraj, Nazareth.

4

Dear Brother in Christ, Pray for a Rental house in UK for my daughter’s family to settle last month we prayed for the same. May God listen our prayers and do a miracle. Praise God.

Mrs.Julina

5

Praise the Lord, We got Sathiyavasanam Calendar. Thanks for monthly Magazines, we are really blessed by daily reading & meditation. We are daily praying for you all of Sathiyavasanam Ministry. May God bless you.

Sis.Sarah Grace, Nagapattinam.

6

அன்பான தேவ ஊழியருக்கு, தங்களின் ஜெபகடிதம் கிடைக்கப் பெற்றேன். தங்களின் வேதபாடங்களைப் பற்றியும், நிகழ்ச்சியைப் பற்றியும் ஆண்டவர் வேதத்தில் சொன்ன கருத்துக்களையும் எனது தோழி மூலம் தெரிந்து கொள்வேன். ஆண்டவரைப்பற்றி இருவரும் பேசுவோம். எங்களுக்காய் ஜெபியுங்கள்.

Sis.Rajeswari, Vellery