ஜெபக்குறிப்பு: 2023 ஜூலை 31 திங்கள்

கர்த்தாவே உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடிக் கீர்த்தனம் பண்ணுவோம் (சங்.21:13) இம்மாதத்தில் நாம் நடந்துவந்த ஒவ்வொரு விதமான அனுபவங்களிலும் தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவர் நம்மைப் பெலப்படுத்தி நிலைநிறுத்தின கிருபைகளுக்காக கர்த்தருடைய வல்லமையைப் பாடி கீர்த்தனம் பண்ணி ஸ்தோத்திரிப்போம்.

விட்டுக்கொடு!

தியானம்: 2023 ஜூலை 31 திங்கள் | வேத வாசிப்பு: பிலிப்பியர் 2:3-11

YouTube video

அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், …அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார் (பிலி.2:6,7).

ஒரு ஆண்மானும் பெண்மானும் ஒரு காட்டிலே தாகத்தினால் தண்ணீருக்காக அலைந்துகொண்டிருந்தன. கடைசியில் ஒரு பாறையருகில் தண்ணீர் இருப்பதைக் கண்டன. அந்தக் கொஞ்ச தண்ணீர் ஒரு மானின் தாகத்தைத் தீர்க்கத்தான் போதுமானதாக இருந்தது. ஆண்மான் பெண்மானைப் பார்த்து, “நீ இந்தத் தண்ணீரைக் குடித்துத் தாகத்தைத் தீர்த்துக்கொள்” என்றது. பெண்மானும் இப்படியே ஆண்மானைப் பார்த்துக்கூறியது. இப்படியாக இரண்டும் ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுக்கத் தீர்மானித்து தர்க்கம் பண்ணிக்கொண்டன. கடைசியாக இரண்டும் ஒரு முடிவுக்கு வந்தன. இரண்டுபேரும் கொஞ்சம் கொஞ்சம் குடித்துக்கொள்ளலாமென இரண்டு மான்களும் தண்ணீரில் வாயை வைத்தன. அதிக நேரமாகியும் தண்ணீர் குறையவில்லை. என்ன நடந்தது? பெண்மான் குடிக்கட்டும் என்று ஆண்மானும், ஆண்மான் குடிக்கட்டும் என்று பெண்மானும் தண்ணீரைக் குடிப்பதுபோல் நடித்தன. இது ஒரு கதைதான். இருந்தாலும் இப்படிப்பட்ட விட்டுக்கொடுக்கின்ற அன்பு நம்மில் காணப்பட்டால் நமது மகிழ்ச்சியின் எல்லைக்கு அளவேது?

“மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே” (ரோமர் 9:3). பவுலடியாரின் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மைக்கு இந்த வார்த்தை மிகுந்த எடுத்துக்காட்டு. கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட யார்தான் விரும்புவார்? ஆனால், இஸ்ரவேலராகிய தமது சகோதரருக்காக அவர் எதையும் விட்டுக்கொடுக்கத் தயாராயிருந்தார். ஆம், கிறிஸ்துவின் சிந்தை பவுலுக்குள் வேரூன்றியிருந்தது. பாவிகளாகிய நம்மை இரட்சிப்பதற்காக,தமது பரலோக மேன்மைகள் யாவையும் துறந்து, தூதர் கோடியின் துதிப்பாடலை மறந்து, தமது பரிசுத்தத்தை ஒரு பொருட்டாக எண்ணாமல், பாவம் நிறைந்த இந்த உலகில் கிறிஸ்து வந்து பிறந்தாரே! அதிலும் ஒரு ராஜாவாக எஜமானாக அல்லாமல் ஒரு அடிமையைப் போல ஆண்டவர் வந்தாரே. பரிசுத்த தேவன் நமது பாவங்களைச் சுமந்து, தமது சிங்காசனத்தைத் துறந்து இழிவான சிலுவையிலே தொங்கினாரே. இதற்கும் மேலே நமக்கு யாருடைய மாதிரி வேண்டும்?

தேவபிள்ளையே, நமது காரியம் என்ன? ஒரு அடி நிலத்திற்காக பல ஆண்டுகளாக வழக்கு நடத்தும் விசுவாசிகள் இன்று எத்தனைபேர் இருக்கின்றனர். நமது விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை எங்கே? நமக்காகத் தம்மை விட்டுக்கொடுத்த கிறிஸ்துவை நாம் நேசிப்பது மெய்யானால், நாம் எப்படி பிறருக்கு விட்டுக் கொடுக்காமல் வாழமுடியும்? நமது சுயநலம் சாகவேண்டும். நமக்குள் தாழ்மை தழைத்தோங்கவேண்டும். பிறர் சிநேகம் பெருகவேண்டும். நம்மால் முடியுமா?

ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்; மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள் (ரோமர் 12:16).

ஜெபம்: எனக்காக எல்லா மேன்மைகளையும் விட்டுவந்த ஆண்டவரே, உம் வழியிலே நானும் நடக்க என்னை உமது ஆவியால் வழிநடத்தும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2023 ஜூலை 30 ஞாயிறு

… அந்த ஸ்தலம் என்னுடைய மகிமையினால் பரிசுத்தமாக்கப்படும் (யாத்.29:43) இன்றைய ஆராதனைகள் நடைபெறும் எல்லா சபைகளிலும் விசுவாசிகள் பயபக்தியோடு கர்த்தரைத் தொழுதுகொண்டு ஆராதிப்பதற்கும், கொடுக்கப்படும் செய்திகளாலே தேவ எச்சரிப்பைப் பெற்றுக்கொண்டு கர்த்தரிடம் முழுமனதோடு மனந்திரும்புவதற்கும், ஒவ்வொருவரோடும் கர்த்தர் பேசவும் வேண்டுதல் செய்வோம்.

குடும்ப ஜெபம்

தியானம்: 2023 ஜூலை 30 ஞாயிறு | வேத வாசிப்பு: யோசுவா 24:14-16

YouTube video

நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் (யோசுவா 24:15).

குடும்ப ஜெபம் இல்லாத வீடு கூரையில்லாத வீடு என்பார்கள். நான் சிறுவனாயிருந்தபோது எனது தாய் தந்தை இருவரும் ஒவ்வொரு நாளும் இரவு எட்டு மணிக்கு பிள்ளைகளாகிய எங்கள் எல்லோரையும் அழைத்து குடும்ப ஜெபம் வைப்பார்கள். இரவு குடும்ப ஜெபம் முடிந்த பின்னர்தான் சாப்பிடச் செல்வோம். என் தாயார் பிள்ளைகளாகிய எங்கள் ஒவ்வொருவரையும் கண்ணீருடன் தேவனிடம் ஒப்படைத்து “இஸ்ரவேலின் சேனைகளுக்கு முன் நடந்த தெய்வமே” என்ற பாடலைப் பாடி தேவனை ஸ்தோத்தரித்து ஜெபிப்பார்கள். சுகவீனமான மக்கள், தேவையில் உள்ளோர் அனைவருக்காகவும் ஜெபிப்பார்கள். கர்த்தர் எங்கள் குடும்பத்தை அதிசயமாக வழிநடத்தினார்.

யோபு ஒரு சரியான குடும்பத் தலைவனுக்கு உதாரணமானவர். அவர், அதிகாலமே எழுந்து தன்னுடைய பிள்ளைகளின் இலக்கத்தின்படியே சர்வாங்க பலிகளைச் செலுத்துவார் (யோபு 1:5). அடிக்கடி வழிதவறிப்போன இஸ்ரவேல் மக்கள் மத்தியில் யோசுவா ஒரு உதாரணமாக விளங்கினார். கர்த்தரைச் சேவிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்திய யோசுவா, ஜனங்கள் யாரைச் சேவித்தாலும், தன்னைப் பொறுத்தளவில் தான் கர்த்தரையே சேவிப்பதாக சவால் விட்டார். அந்த நேரத்திலே அவரது வாயில் புறப்பட்ட வார்த்தையானது மிகவும் பெலம் வாய்ந்தது. அவர், “நான் சேவிப்பேன்” என்று சொல்லாமல், “நானும் என் வீட்டாரும்…” என்று சொன்னதை நாம் சிந்திக்கவேண்டும். யோசுவா தன் குடும்பத்தாரின் சம்மதத்தைக் கேட்டாரோ இல்லையோ தெரியாது. ஆனால், அவருடைய வார்த்தை மிகவும் திட்டவட்டமாக வெளிவந்தது. சிறைச்சாலைக்காரனுக்குப் பவுல் சொன்னதும் இதைத்தான்: “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” என்று.

அன்பானவர்களே, குடும்பம் என்பது தேவன் அருளிய மகத்தான ஈவு. அது அவருடைய அநாதித் திட்டமாகும். அந்தக் குடும்பம் செழித்திருக்க வேண்டுமானால் நாம் குடும்பமாக தேவனுடைய பாதத்தில் அமரவேண்டியது கட்டாயமல்லவா? அப்படியிருக்க, நம்;முடைய குடும்பத்தில் குடும்ப ஜெப ஒழுங்கை எவ்வளவாகக் கடைபிடித்து வருகின்றோம். சாக்குப்போக்குகள் சொல்லி குடும்ப ஜெபத்தைப் புறக்கணிப்பது நமக்கு நல்லதல்ல. நமக்குக் குடும்பத்தை அமைத்து தந்தவரை மறந்து நாம் குடும்ப வாழ்வை அனுபவிப்பது எப்படி?

ஒன்று கூடி ஜெபிக்கும் குடும்பம் ஒன்றாய் வாழும். அப்பொழுதுதான், “நமது பிள்ளைகள் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; அவர்களுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்” (ஏசாயா 54:13).

ஜெபம்: அன்பின் கர்த்தாவே, நீர் அமைத்துத் தந்த குடும்பத்துக்காக உமக்கு நன்றி. தினமும் குடும்பமாக ஜெபித்து, உம்மையேத் தேடி, உமக்கென்று வாழும்படியான கிருபையை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.