கர்த்தராகிய தேவன் மீது தன் நம்பிக் கையை வைத்திராவிட்டால் அவர் ரூத்தினுடைய விசுவாசமுள்ள கிரியைக்கு பலனளித்திருக்கமாட்டார். ஏனெனில் கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது (யாக்கோபு 2:26). ரூத் தன் மாமியார் நகோமியிடம் செய்த அறிக்கை (1:16-17) வேதாகமத்தில் மிகவும் முக்கியமான ஒரு சான்றுரையாகும். ரூத், தூய்மையானதும் இன்பமானதுமான ஒரு வரலாற்றுப் பெண்மணியாவாள். அவள் தேவனை நம்பினபடியால் ஆண்டவர் அவளுடைய வாழ்க்கையில் சில அற்புதமான மாற்றங்களை அருளினார்.
விலக்கப்பட்டவள் சேர்த்துக்கொள்ளப்பட்டாள்:
அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது (உபா.23:3). ரூத் தன்னுடைய விக்கிரக தேவர்களைவிட்டு ஆண்டவரை ஏற்றுக்கொண்டு நாட்டின் யூத மதத்திற்கு மாறினாள். ஆவிக்குரிய வார்த்தைகளில் கூறுவோமானால், அவள் மகா பரிசுத்த ஸ்தலத்தில் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியைக் காவல் செய்யும் கேரூபின்களின் செட்டைகளின் கீழ் வந்து சேர்ந்தாள் (சங்.36:7,8; 61:4; 91:1-4). நான் கிறிஸ்துவை விசுவாசித்தபொழுது இதைப் போன்ற அனுபவத்தைப் பெற்றுக் கொண்டேன். முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள் (எபே.2:13).
சஞ்சலப்பட்டவள் சமாதானம் பெற்றாள்:
ரூத்தின் ஆரம்ப அதிகாரத்தில் எலிமெ லேக்கும் அவன் மனைவி நகோமியும் தங்களுடைய இரு மகன்களுடன் பெத்லெகேமை விட்டு புறப்பட்ட காட்சி கண்ணீரை வரவழைக்கிறது. நகோமியின் கணவரும் இரு மகன்களும் மரித்ததால் மூன்று விதவைப்பெண்கள் தனித்து விடப்பட்டனர். அக்காலத்தில் விதவைகளும் குஷ்டரோகிகளும் சமுதாயத்தின் அடித்தளத்தில் வைக்கப்பட்டிருந்தனர். நகோமி பெத்லெகேமுக்குத் திரும்ப முடிவெடுத்தாள். ரூத்தும் அவளுடன் வருவதாக வற்புறுத்தினாள். அவர்கள் தங்கள் ஊரை அடைந்தபொழுது நகோமி தன் இனத்தாரிடம் “நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல் மாராள் என்று சொல்லுங்கள்” என்று கூறினாள். மாராள் என்ற எபிரெயச் சொல்லுக்கு கசப்பு என்று பொருள் (ரூத் 1:20). ஆனால் ரூத் தன்னுடைய இருதயத்தில் தேவசமாதானத்தைப் பெற்றிருந்ததால் உடனடியாக தன் மாமியாருக்கு உதவ ஆரம்பித்தாள். மோவாபிலிருந்த நகோமியின் அடுத்த மருமகளோ மறுமணம் செய்துகொண்டு அங்கேயே வாழ ஆரம்பித்திருக்கலாம் (1:9). ஆனால் பெத்லெகேமிலே ரூத் அனுபவித்த சமாதானமோ மிகச்சிறந்தது.
உழைப்பாளி மனநிறைவடைந்தாள்:
அறுவடைகாலத்தில் ஏழைகள் வயலில் அரிக்கட்டுகளிலிருந்து சிந்தினதைப் பொறுக்கிக்கொள்ள எபிரெயச் சட்டம் அனுமதித்திருந்ததை ரூத் அறிந்துகொண்டாள். தன்னால் இயன்ற அளவு நகோமியை நன்கு கவனிக்க விரும்பினாள். இங்கே தேவனுடைய வழிநடத்துதலை நாம் காண்கிறோம். “தற்செயலாய்” அவளுக்கு நேரிட்ட வயல்நிலம் எலிமெலேக்கின் வம்சத்தானாகிய போவாசுடையதாயிருந்தது. அவள் கதிர்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கும் பொழுது போவாஸ் அங்கு வந்ததும் தற்செயலாக நிகழ்ந்தது. அதைக் “கண்டதும் காதல்” என நாம் கருதலாம். தன்னுடைய வயலில் மாத்திரமே பொறுக்கிக் கொள்ள அவன் கூறினான். மேலும் அவள் பொறுக்கிக் கொள்ளும்படிக்கு அவளுக்காக அரிகளிலே சிலதைச் சிந்தவிடுங்கள், அவளை அதட்டாதிருங்கள் என்று தன் வேலைக்காரருக்குக் கட்டளையிட்டான். அவள் அந்நியளாயிருந்தும் அவள் ஓய்வெடுக்கவும், சாப்பிடவும், தண்ணீர் அருந்தவும் வேண்டியவைகளைக் கட்டளையிட்டான். அவனுடைய கண்களில் அவளுக்கு தயை கிடைத்தது (2:2,10,13); இதுவே இரட்சிப்பின் வழிக்கான ஆரம்பம்.
ஒன்றுமில்லாதவள் மேன்மையை அடைந்தாள்:
ரூத் தேவனை விசுவாசித்து, யூத சமுதாயத்தின் உறுப்பினரானது மாத்திரமல்ல, போவாஸை மணந்து தாவீது அரசரின் பாட்டனாரைப் பெற்றெடுத்தாள். அதற்கும் மேலாக, நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு அட்டவணையில் அவளுடைய பெயரும் காணப்படுவது அதிக விசேஷமானது (மத்.1:5). ஓர் ஏழை விதவையாக ஆரம்பித்து (அதி.1), பொறுக்கினதில் வாழ்ந்து (அதி.2) போவாஸிடமிருந்து பரிசுகளைப் பெற்று (அதி.3) இறுதியில் அவனை மணந்து அவனுடைய சம்பத்துகள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டாள். இதுவே தேவனுடைய கிருபை! இவை யாவும் தேவன் அளித்த “பரிசு” ஆகும். ஒருநாளில் அவள் பரலோகத்தை அடையும்பொழுது “முழு வெகுமதியையும்” பெற்றுக்கொள்வாள். இங்கு பரிசுகளும் பரலோகத்தில் முழுமையான வெகுமதிகளும் கிடைக்கும். நாம் ஊழியம் செய்யும் எஜமான் எவ்வளவு தயையுள்ளவர்! நாம் அனைவரும் உன்னதரின் உச்சிதமான வெகுமதிகளைப் பெற்றுக்கொள்ளும் ஊழியக்காரராய் பணிபுரிய உறுதிகொள்வோம்.
உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள் (2 யோவான் 8).