வாக்குத்தத்தம்: 2024 மார்ச் 1 வெள்ளி

அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது (கொலோ.1:17)

நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார். (1நாளா. 28:20)
வேதவாசிப்பு: எண்ணாகமம் 15 – 17 | மாலை: மாற்கு 08:01-21

ஜெபக்குறிப்பு: 2024 மார்ச் 1 வெள்ளி

கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார் (சங்.55:22).

புதிய மாதத்திற்குள் கடந்துவர தேவன் கிருபை செய்தபடியால் அவரைத் துதிப்போம். நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார் (1நாளா.28:20) என்ற வாக்குப்படியே தேவன் நம்மோடிருந்து நமது குறைவுகள் யாவற்றையும் நிறைவாக்கி நம் தேவைகள் அனைத்தையும் சந்தித்து வழி நடத்த வேண்டுதல் செய்வோம்.

செயலில் மகத்துவமானவர்!

தியானம்: 2024 மார்ச் 1 வெள்ளி | வேத வாசிப்பு: ஏசாயா 28:23-29

YouTube video

இதுவும் சேனைகளின் கர்த்தராலே உண்டாகிறது; அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர் (ஏசாயா 28:29).

இவ்வாண்டில் மேலும் ஒரு புதிய மாதத்தைக் காண தேவன் நமக்கு கிருபை செய்த படியால் அவருக்கு துதிபலிகளை நாம் ஏறெடுப்போம். இப்புதிய மாதத்திலும் தேவன் நம்மை போஷித்து நம் தேவைகள் அனைத்தையும் சந்தித்து வழிநடத்த வேண்டுதல் செய்கிறோம். “நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி; நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்” (1 நாளா.28:20) என்ற வாக்கின்படியே தேவன் உங்களோடிருந்து வழிநடத்துவாராக!

ஒரு குறிப்பிட்ட காலத்தில் வயல் நிலங்களை உழுவார்கள். பின்னர் விதை விதைத்து, ஒரு பருவத்தில் அதைப்பிடுங்கி, நாற்று நட்டு, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நாற்றுக்கள் வளர்ந்து பச்சைப்பசேல் என்று தோன்றும் காட்சியோ மிகவும் அற்புதம்! அதற்காக எப்பொழுதும் வயல்நிலத்தை உழுவதுமில்லை, எப்பொழுதும் நாற்று நடுவதுமில்லை. அதற்குரிய சரியான காலத்தில் அந்தந்தக் காரியங்கள் செய்யப்பட வேண்டும். எதை விதைத்து, எதை அறுவடை செய்கிறோமோ, அதற்கு ஏற்றபடியான முறைமையிலேயே போரடிக்கப்படும். இந்த ஆலோசனைகளை மனிதரின் அறிவிலும் ஆற்றலிலும் வைத்தவர் யார்? கர்த்தர் அல்லவா!அப்படியானால் அவர் தமது பிள்ளைகளின் வாழ்வில் தவறுவிடுவாரா?

ஏசாயா தீர்க்கர் ஒரு அருமையான காரியத்தைச் சொல்வதற்காக, “செவி கொடுத்து என் சத்தத்தைக் கேளுங்கள்; நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள்” என்கிறார் (ஏசா.28:23). அதாவது, உழுவதற்கென்று ஒரு காலம் உண்டு: பின்னர் விதையை விதைப்பதற்கென்று ஒரு காலம் உண்டு. அதைப்போன்று போரடிப்பதிலும் வேறுபாடுகள் உண்டு. உளுந்தை தூலத்தாலோ அல்லது வண்டி சக்கரங்கள் அதன்மீது சுற்றிவிடப்பட்டோ அடிக்கிறதில்லை. உளுந்தை கோலினாலும், சீரகத்தை மிலாற்றினாலும் அடிப்பார்கள். அப்பமாக்க வேண்டுமானால் அந்த தானியம் இடிக்கப்படவேண்டும். தொடர்ந்து போரடித்துக்கொண்டோ அல்லது வண்டிலின் உருளைகளை அதன்மீது ஓடவிட்டுக்கொண்டோ இருப்பதில்லை. ஒவ்வொன்றையும் எப்படியாக நேர்த்தியாக செய்வது என்பதற்கு நேரமும், முறைகளும் உண்டு. அதன்படி செய்யும்போதே அதிக பலனைப் பெறமுடியும்.

அருமையானவர்களே, இப்படியே நமது வாழ்விலும், நாம் நல்ல கனிகொடுக்கிறவர்களாகத் திகழ சில பாதைகளுக்கூடாக கர்த்தர் நம்மை நடத்தியே ஆக வேண்டும். அதற்காக எந்நாளும் அப்படியே இருக்கமுடியாது. நம்மைப் புடமிட்டு பொன்னாக விளங்கும்படி செய்யவே இந்தக்கால அளவுகள் தேவைப்படுகிறது. நமக்குத்தான் துன்பம் சோதனைகள் என்று சிலவேளைகளில் நாம் புலம்புவதுண்டு. ஆனால் தேவன், அனைத்தையும் நமது நன்மைக்கும் தமது மகிமைக்கென்றுமே செய்கிறார். அவர் செயலில் மகத்துவமானவர். நாம் ஏற்றக்காலத்தில் எழுந்து நிற்கத்தக்கதாக, அவருக்குகந்த பாத்திரங்களாக மாற்றப்படுவதற்காகவே நாம் உழப்பட்டு, பிடுங்கப்பட்டு, போரடிக்கப்படுகிறோம்.

ஜெபம்: செயலில் மகத்துவமானவரே, நாங்கள் அதிக பலன் தரத்தக்கதாக நீர் எங்களை உழுவதற்கும் நடப்படுவதற்கும் போரடிப்பதற்கும் உம் கரத்தில் ஒப்படைக்கிறோம். ஆமென்.

ஆசிரியரிடமிருந்து… (மார்ச் – ஏப்ரல் 2024)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். இவ்விதழ் வாயிலாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இவ்வூழியத்தின் வாயிலாக தேவன் செய்துவரும் மகத்துவமான காரியங்களுக்காக தேவனைத் துதிக்கிறோம். இவ்வூழியத்தை காணிக்கையாலும் ஜெபத்தினாலும் தாங்கும் அன்பர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

ஓராண்டிற்குள் வேதாகமத்தை வாசிப்பதற்கான அட்டவணைப்படி 2023ஆம் ஆண்டு வேதாகமத்தை வாசித்து முடித்தவர்களின் பெயர்களை இவ்விதழில் பிரசுரித்துள்ளோம். இவ்வாண்டிலும் இன்னும் அநேகர் வேதாகமத்தை வாசிக்க உற்சாகப்படுத்துகிறோம். சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகள் வாரத்தில் நான்கு நாட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அநேகமாயிரமான மக்கள் இந்நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து சத்தியங்களை கேட்டு ஆவிக்குரிய வாழ்க்கையில் பயனடைந்து வருகிறார்கள். தாங்களும் குடும்பமாக நிகழ்ச்சியில் பங்கெடுங்கள். தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் நிகழ்ச்சி நிரல் உள்ளே பிரசுரிக்கப்பட்டுள்ளது. சத்தியவசன ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து ஊழியத்தைத் தாங்க தங்களை அன்பாய் அழைக்கிறோம். YouTube சேனலில் வெளிவரும் Audio version அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களையும் குடும்பமாக கேட்டு ஆசீர்வாதம் பெறுங்கள். இதற்கான Link தேவைப்படுவோர் எங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

வேதாகம அடிப்படைகள் (Bible Basics) என்ற தலைப்பில் Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய பரிசுத்த வேதாகமத்தைக் குறித்த ஆராய்ச்சி செய்திகள் ஒரு புதிய தொடராக வெளிவருகிறது. மார்ச் மாதத்தில் லெந்துநாட்களுக்கான இயேசு கிறிஸ்துவின் பாடுகளை குறித்த தியானங்களையும், ஏப்ரல் மாதத்தில் உயிர்த் தெழுந்தலைப்பற்றிய தியானங்களையும் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் நமது ஆவிக்குரிய வாழ்விற்கு ஆசீர்வாதமாக இருக்க வேண்டுதல் செய்கிறோம். தியானங்களை எழுதுகிற சகோதர சகோதரிகளுக்காக ஜெபியுங்கள். தியானங்கள் வாயிலாக தாங்கள் அடையும் ஆசீர்வாத அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

கே.ப.ஆபிரகாம்

விழுந்துபோன பராக்கிரமசாலி!

அதிகாலை வேளையில்… (மார்ச் – ஏப்ரல் 2024)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: 1 சாமுவேல் 16:1-18

இஸ்ரவேலின் அலங்காரம் உயர்ந்த ஸ்தானங்களில் அதமாயிற்று; பராக்கிரமசாலிகள் விழுந்துபோனார்கள் (2 சாமுவேல் 1:19).

“மரித்தவரைப் பற்றி எப்பொழுதும் உயர்வாகவே பேசுங்கள்” என்பது ஒரு பழமொழி. தாவீது அதைப் பின்பற்றினான். மரித்துப்போன சவுல், யோனத்தானைப் பற்றி தாவீது உயர்வான ஓர் இரங்கற்பா பாடினான். அவன் சவுலின் சுயநலமான பாவச் செயல்களைப் பற்றிப் பேசவில்லை. ஆனால் “பராக்கிரமசாலிகள் விழுந்தார்கள்” (2சாமு.1:19,25, 27) என்று மூன்று முறை புலம்பினான். சவுல் தோற்றத்தில் பெரியவனாயிருந்தாலும் (10:23-24) குணத்தில் குள்ளனாகவே இருந்தான். ஏனெனில் அவன் எப்பொழுதும் மறைந்தேயிருந்தான்.

அவர் பொறுப்புகளை ஏற்க தயங்கி னான்: (1சாமு.10:20-24)

இஸ்ரவேலின் முதல் அரசரை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் சாமுவேல் ஒரு வியப்பினை உருவாக்கினார். பென்யமீன் கோத்திரம் வரும்வரை ஒவ்வொரு கோத்திரத்தையும் நீக்கினார். பின்னர் கீசின் குடும்பம் வரும்வரை குடும்பங்களை விலக்கினார். ஆனாலும் சவுலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கர்த்தரிடத்தில் விசாரித்தபொழுது “அவன் தளவாடங்களிலிருக்கிற இடத்தில் ஒளித்துக்கொண்டிருக்கிறான்” (வச. 22). அதாவது, கூடிவந்திருந்த மக்களின் சாமான்களின் நடுவே இருக்கிறான் என்று பதிலளித்தார். ஏற்கனவே அவர் சாமுவேலால் அபிஷேகம் செய்யப்பட்டவர். தேவன் தன்னை அரசராகத் தெரிந்தெடுத்திருக்கிறார் என்பதை நன்கு அறிந்திருந்தார். எனவே தயங்குவதற்கோ மறைந்துகொள்ளவோ எந்தவொரு காரணமும் இல்லை. இது பயத்தின் விளைவா அல்லது போலியான பணிவா? “தேவன் ஒரு மனிதனை அரசனாக அழைத்தால் அதை மறைத்துக்கொள்ள எந்த உரிமையும் இல்லை” என்று ஜி காம்ப்பெல் மார்கன் கூறியுள்ளார்.

பொறுப்புடைமையைப் பயிற்சி செய்வ தில் தயங்கினான்:

சவுலின் வாழ்க்கையை நாம் வாசிக்கும்போது அவர் அடிக்கடி தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்ததையும், பாவ அறிக்கை செய்து மன்னிப்பைத் தேடுவதற்குப் பதிலாக சாக்குப்போக்குகள் சொல்வதையும் நாம் காணலாம். 1 சாமுவேல் 13ம் அதிகாரத்தில் பலிகளைச் செலுத்த சாமுவேல் வரத் தாமதமானபோது அவர் காத்திருக்காமல் பொறுமை இழந்தார். எனவே அவரே சர்வாங்க தகனபலியை செலுத்தத் துணிந்தான். ஆனால் சாமுவேல் வர தாமதமாயிற்று என்று அவரைக் குற்றம் சாட்டினான். 14ஆம் அதிகாரத்தில் தனது மூர்க்கமான ஆணையால் தனது மகன் யோனத்தான் மேல் குற்றஞ்சாட்டி அவனைத் தண்டிக்கவும் முயற்சித்தான்.

15ஆம் அதிகாரத்தில்: அமலேக்கிய அரசன் ஆகாகைக் கொலை செய்யவும், எதிரிகளின் ஆடு மாடுகளை அழிக்கவும் கட்டளையிட்ட தேவனின் சொல்லுக்குக் கீழ்ப்படியவில்லை. மாறாக ஜனங்கள் ஆடுமாடுகளில் “நலமானவைகளைத்” தப்பவைத்து அற்பமானவைகளையும் உதவாதவைகளையும் அழித்துப்போட்டார்கள் என்று சாக்கு சொன்னான். “ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்ப வைத்தார்கள்; மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம் (15:15)” என்றான். தேவன் சங்கரிக்கச் சொன்னால் அதில் நலமானவைகள் என்பது எதுவும் இல்லை. இந்த சாக்கு சவுலின் ராஜாங்கத்தை இழக்கச்செய்தது. அவன் மனச்சிதைவுக்குள்ளாகி சந்தேகப் பிராணியாக மாறினான்; தாவீதுக்கு உதவின அனைவரையும் சந்தேகித்தான்; நோப் பட்டணத்து ஆசாரியன் தாவீதுக்கும் அவனுடைய மனிதருக்கும் ஆலயத்தின் பரிசுத்த அப்பங்களைக் கொடுத்ததினால் நோப் பட்டணத்து ஆசாரியர்களின் குடும்பங்கள் அனைத்தையும் கொன்றுபோட்டான் (1சாமு.21,22). சவுல் பொய்யனும் கொலைகாரனுமாகிய சாத்தானைப்போல (யோவான் 8:44) நடந்து கொண்டான்.

உண்மை நிலையை எதிர்நோக்க தயங்கினான்: (1சாமு.28:31)

சவுலுக்குக் கர்த்தரிடத்திலிருந்து எந்த உத்தரவும் வரவில்லை. அது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்திருக்கக் கூடாது. ஏனெனில் “என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்” (சங்.66: 18) என்று வேதவசனம் கூறுகிறது. நம்மிடத்தில் பாவம் இருக்கிறது என்று தெரிந்தும் அதனை அங்கீகரித்து, அதை அகற்ற எந்த திட்டங்களையும் நாம் போடவில்லையானால் நமது ஜெபத்துக்கு பதில் வராது. சவுல் வேஷம் மாறி ஓர் அஞ்சன ஸ்திரீயிடம் ஆலோசனை கேட்கச் சென்றான். ஆனால் பிசாசிடமிருந்துதான் அவனுக்குரிய குறிப்பு வந்தது. சவுல் அங்கே உருமாறவில்லை; தன் சுய ரூபத்தை வெளிப்படுத்தினான். தனது ஆட்சி காலத்தில் ஒரு நடிகனாகவே இருந்து வந்திருந்தான். அவனது குமாரர்கள் மூவரும் மரிப்பார்கள் என்றும், மறுநாள் அவருடைய கடைசி நாளாக இருக்கும் (1 சாமு.26:19; 31:1-6) என்றும் பதில் வந்தது. இஸ்ரவேல் தோற்கும் என்றும் தான் இறந்துவிடுவேன் என்று தெரிந்தும் அவர் போருக்குத் துணிவுடன் சென்றான்.

ஒரு ராஜபரம்பரையை சவுல் உரு வாக்கவேண்டும் என்று தேவன் எண்ணவில்லை. இஸ்ரவேலின் ராஜா யூதா கோத்திரத்திலிருந்து வரவேண்டும் (ஆதி. 49:10). தாவீது ஏற்கனவே ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டிருந்தார். சவுலின் சோகமான வீழ்ச்சி “இதோ சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக் கொண்டிரு” (வெளி 3:11) என்ற நமது ஆண்டவரின் வார்த்தைகளை எனக்கு நினைப்பூட்டுகிறது.

சவுலின் அரசவாழ்வு அவன் உயரமாக நிற்பதில் தொடங்குகிறது (1 சாமு.10:23-24), ஆனால் முடிவில் அவர் பரிதாபமாக இறந்து கிடந்தார்;. சிம்சோன், லோத்து, யூதாஸ் மற்றும் தேமா போன்றவர்களைப்போல தோல்வியையே தழுவினார்.

இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன் (1 கொரி. 10:12).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

1.வேதாகமம் தேவனின் வெளிப்பாடாகும்!

வேதாகமத்தின் தனிச்சிறப்பு (மார்ச் – ஏப்ரல் 2024)
Dr.உட்ரோ குரோல்

2. மிகச் சிறப்பான வெளிப்பாடு

இது மூன்று வகைகளில் நடைபெறுகிறது.

i. ஆரம்ப காலத்தில் தேவன் மக்களோடு நேரடியாகப் பேசினார். சிலவேளைகளில் அது பரலோகத்திலிருந்து வெளிப்படும் சத்தமாயிருந்தது.

“அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு, நீ எங்கே இருக்கிறாய்? என்றார் (ஆதி.3:9). சில தடவைகளில் தேவன் மக்களோடு சொப்பனத்தின் மூலமாகப் பேசினார்.

யாக்கோபு தான் கண்ட தரிசனத்தில் வானத்துக்கும் பூமிக்கும் வைக்கப்பட்டிருந்த ஏணியில் தேவதூதர்கள் ஏறுகிறவர்களுமாய், இறங்குகிறவர்களுமாய் இருக்கக் கண்டான். அப்பொழுது யாக்கோபு தேவனுடைய சத்தத்தைக் கேட்டான் ( ஆதி.28:12-17).

தரிசனஙகளின் மூலம் தேவன் அடிக்கடி மக்களுடன் பேசினார். அப்பொழுது தேவன் தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். தேவன் எசேக்கியேல் தீர்க்க தரிசியைப் பலதடவைகளில் கிரியை செய்யும்படி தூண்ட வேண்டியதாயிற்று (எசேக்.43:3). அப்போதும் கூட இத்தகைய நிகழ்ச்சிகள் சாதாரணமாக நடை பெறவில்லை. புதிய ஏற்பாட்டு காலத்தில் இது மிக மிகக் குறைவு.

ii. இரண்டாவதாக, இயேசு இந்த பூமியில் வாழ்ந்துகொண்டிருந்தபோது, வாழும் வார்த்தையாக இருந்த அவர் தேவனை நமக்கு வெளிப்படுத்தினார்.

அவர் பிதாவாகிய தேவனின் வார்த் தைகளை உலகில் பேசினார். “பூர்வ காலங்களில் பங்குபங்காகவும், வகை வகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன் இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம் பற்றினார்” (எபி. 1:1,2).

தம்முடைய பிதாவாகிய தேவனைக் குறித்து இயேசு கூறும்போது, “என்னை அனுப்பினவர் (தேவன்) சத்தியமுள்ளவர் அவனிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன்” என்றார் (யோவான் 8:26).

தேவனுடைய நித்திய தன்மையையும், திட்டத்தையும் வெளிப்படுத்த தேவனுடைய நித்தியகுமாரன் வந்தார். எனினும் உலகம் அவரை அறிந்துகொள்ளவில்லை. உலகம் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவரை ஏற்றுக்கொண்டவர்களுக்கோ, தேவனுடைய பிள்ளைகளாகும் உரிமை கொடுக்கப்பட்டது.

“அவருடைய நாமத்தின்மேல் விசுவாசம் உள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்” (யோவான் 1:12).

தேவகுமாரன் இப்போது பரலோகத்தில் தம் பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். அப்படியானால் நாம் தேவனைப்பற்றிய எந்த சிறப்பான வெளிப்பாடும் இல்லாமல் விடப்பட்டிருக்கிறோம் என்று பொருளா? அவருடைய அன்பையும், கரிசனையையும் குறித்து நாம் அறிந்துகொள்ள ஒரு இடம் இல்லையா?

தேவன் நம்மிடம் எதை எதிர் பார்க்கிறார்? என்று அறிய ஒரு மார்க்கமும் இல்லையா? நிச்சயமாக இருக்கிறது! ஜாண்பர்ட்டன் எழுதிய பழைய பாடலைப் பாருங்கள்.

பரிசுத்த வேதம், தெய்வீக புத்தகம் விலையேறப்பெற்ற பொக்கிஷம்!
நீ என்னுடையதே! எங்கிருந்து வந்தேன்? நான் யார்? என்று நீ எனக்குப் போதிக்கிறாய்.
வனாந்தரப் பாடுகளிலும் துன்பத்திலும் எனக்கு ஆறுதல் நீயே!
மனிதன் மரணத்தை வெல்லலாம் என்று ஜீவனுள்ள விசுவாசத்தின் மூலம் காட்டுகிறாய் எனக்கு நீயே!

iii. மூன்றாவதாக, தேவன் தம்மை இன்னொரு சிறந்த வழியின் மூலம் வெளிப்படுத்த விரும்பினார். அது தான் எழுதப்பட்ட கர்த்தருடைய வார்த்தை, வேதவசனம் அடங்கிய பரிசுத்த வேதாகமம் அது ஒரு தெய்வீகபுத்தகம்.

வேறு எல்லாப் புத்தகங்களையும் விட வேதாகமத்தைப் பிரித்துக்காட்டுவது எது? அது ஏன் வித்தியாசமாகக் காணப்படுகிறது? ஏனென்றால், இது தேவனுடைய புத்தகம். அந்தப் புத்தகத்தின் ஆக்கியோன், தேவனே! அதைத் தோற்றுவித்தவர் அவரே. இந்த வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கும் அனைத்துக்கும் மூல கர்த்தா அவரே!

தேவன் ஆசிரியராய் இருந்து எழுதிய புத்தகம் ஒன்றே. அதுவே வேதாகமம்! அது ஒன்றே தேவனுடைய உள்ளத்தின் சிந்தனைகளை மனிதனின் உள்ளத்துக்குக் கொடுக்கிறது. இது ஒன்றே தேவனுடைய குணாதிசயத்தையும், மனிதனுடைய எதிர்கால வாழ்வின் திட்டத்தையும் வெளிப்படுத்துகிறது. அந்தத் திட்டம் நேரடியாக ஆக்கியோனாகிய அவரிடமிருந்தே வருகிறது.

புகழ்பெற்ற சில புத்தகங்களைப் பாருங்கள். வெப்ஸ்டர் அகராதி, ஜோசப் ஸ்மித் எழுதிய “மார்மன் பற்றிய புத்தகம்”, மேரி பேக்கர் எடி எழுதிய “வேதாகம வெளிச்சத்தில் விஞ்ஞானமும், ஆரோக்கியமும்”, L.ரான் ஹப்பார்டு எழுதிய “டயனெட்டிக்ஸ்” (சிந்தனை) இந்தப் புத்தகங்கள் எல்லாம் தேவனால் எழுதப்பட்டவை அல்ல.

தேவனால் எழுதப்பட்ட புத்தகம் வேதாகமம்மட்டுமே! அது தனித்தன்மை வாய்ந்தது. அதைப்போல வேறொரு புத்தகமும் இல்லை. அதற்கு இணை ஏதும் இல்லை. அந்த இனத்தில் அது மட்டுமே உலகில் உள்ளது; தெய்வீக அதிகாரம் கொண்டது. வெளிப்படுத்துவதிலோ, அதிகாரத்திலோ, மக்களின் வாழ்க்கையை மாற்றும் வல்லமையிலோ, வேறு எந்தப் புத்தகமும் இதற்கு இணை இல்லை.

(தொடரும்)

மொழியாக்கம்: ஜி.வில்சன்

page 1 of 2