ஜெபக்குறிப்பு: 2024 பிப்ரவரி 25 ஞாயிறு

ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரேநாள் நல்லது (சங்.84:10) இன்றைய ஆராதனை நாளில் தேவசெய்தியளிக்கும் செய்தியாளர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், தேவ எச்சரிப்பின் சத்தத்தைக் கேட்டு, பின் மாற்றத்திற்குள்ளானோர் பரிசுத்த வாழ்க்கைக்கு தங்களை அர்ப்பணம் செய்து இரட்சிப்பின் சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்ள ஜெபிப்போம்.

இருளுக்குள் இருந்தது போதும்!

தியானம்: 2024 பிப்ரவரி 25 ஞாயிறு | வேத வாசிப்பு: அப்போஸ்தலர் 16:22-35

YouTube video

ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு … அவர்களைப் போகவொட்டாதிருந்தார் (அப். 16:6,7).

கருவறைக்குள் அமைதியாயிருக்கின்ற ஒரு சிசுவினால் கருவறைக்கு வெளியே ஒளியும் நிறமும் உள்ள வேறொரு உலகம் இருப்பதை நம்ப முடியுமா? அந்த உலகை தான் பார்க்கவேண்டும், அதிலே நடக்கவேண்டும், அங்கு பேசவேண்டும் என்பதையெல்லாம் அது அறியாது. இப்படியாக கருவறைக்குள் முடங்கியிருக்கும் ஒரு சிசு கருவறையைவிட்டு வெளியே வரும்வரையிலும், கருவறைக்கு வெளியிலேதான் மெய்யான உலகம் உண்டு என்பதை நம்பவும் முடியாது; அனுபவிக்கவும் முடியாது. இப்படித்தான் நாமும் இருளுக்குள் சுகமாக தூங்குகிறோம். இதுதான் உலகம் என்று நம்புகிறோம். வெளிச்சத்திற்குள் வரும்வரைக்கும் வெளிச்சத்தின் மகிமையை எப்படி உணருவது? இவ்வுலக வாழ்வின் சொகுசையும் சோம்பலையும் விட்டு வெளிவந்து, பரிசுத்த ஆவியானவரின் நடத்துதலுக்குட்படும் வரைக்கும் அதன் சந்தோஷத்தையும் நம்மால் அனுபவிக்கமுடியாது. சிலசமயம் அது கடினமாகவும் இருக்கலாம். ஆனால், நம்பிக்கையோடு ஒப்புவிப்போமானால் அதன் பலனை நிச்சயம் காண்போம்.

சொகுசாய் படுத்திருந்த சிசுவை, கருவறை வெளியே தள்ளும்போது, சிசுவுக்கு சற்று கடினமாகவே இருக்கும். ஆனால் ஒரு சுதந்திரமான, அசைவாடத்தக்க அழகான ஒரு வாழ்வினைக் காணும்போது, அந்தக் குழந்தை எத்தனை மகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்ளும்! ஆனால், வெளியே வர சிசு தாமதமானால் அதன் விளைவு ஆபத்தானது. அதேபோலவே, இருளிலிருந்து வெளியே புறப்படத் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் நமக்கும் ஆபத்துத்தான்.

திட்டமிட்டபடி ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடி ஆவியானவர் தடுத்தபோது பவுலுக்கும் சீலாவுக்கும் அதை ஏற்றுக்கொள்ள சற்றுக்கடினமாக இருந்திருக்கும். அதேசமயம் ஆவியானவருக்குக் கீழ்ப்படிந்து சென்றவர்கள், பிலிப்பி பட்டணத்திலே தொழுமரத்தில் வைத்துப் பூட்டப்பட்டபோது, மனம் தடுமாறியிருக்கவேண்டாமா? இனி எல்லாம் முடிந்தது என்று நினைத்திருக்கமாட்டார்களா? ஆனால் அவர்களோ, எதைக் குறித்தும் கவலைப்படாமல் அழைத்தவரை அறிந்திருந்ததால் தேவனைத் துதித்தார்கள். அதனாலே ஒரு குடும்பமே இரட்சிக்கப்பட்டது.

ஆம்! பிரியமானமானவர்களே, சும்மா இருக்கும்மட்டும் நாம் எதையும் அனுபவிக்க முடியாது. தகுந்த தருணத்திலே வெளியே வரவேண்டும். பரிசுத்தாவியானவரின் நடத்துதலுக்கு, கேள்வி கேட்காமல் கீழ்ப்படியவேண்டும். அதற்கு நம்மை ஒப்புக்கொடுத்துக் கீழ்ப்படியவேண்டும். அப்பொழுது தேவ வழிநடத்துதல் நமக்கு நிச்சயம் ஆச்சரியமான விளைவுகளையேத் தரும். கருவறைக்குள் படுத்து இருந்தது போதும். எழுந்து வெளியேறுவோமாக!

ஜெபம்: அன்பின் பிதாவே, தூயஆவியானவரின் தூய வழிநடத்துதலுக்கு என்னைத் தருகிறேன். எந்த நிலையிலும் உமக்குக் கீழ்ப்படிந்து நடக்கப் பெலன் தாரும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2024 பிப்ரவரி 24 சனி

மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் (மத்.25:40) வடஇந்திய மிஷனெரி ஊழியங்களை தாங்கிவரும் விசுவாச குடும்பங்கள், சபைகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், சத்தியவசன ஊழியத்தை மிஷனெரி காணிக்கையால் தாங்கிவரும் திருச்சபை ஊழியங்களை கர்த்தர் விஸ்தாரப்படுத்தவும் மன்றாடுவோம்.

அன்புடன் கூறினார்!

தியானம்: 2024 பிப்ரவரி 24 சனி | வேத வாசிப்பு: மாற்கு 10:17-25

YouTube video

இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; (மாற்கு 10:21).

நாம் எல்லோருமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிறரைக் குறைவாகப் பேசுவது உண்டு. அப்போது பொதுவாக கோபத்திலும், வெறுப்பிலும், சொல்லவேண்டும் என்றதான ஆதங்கத்திலுமே பேசுவது உண்டு. சிலவேளைகளில் மாத்திரமே நாம் யோசித்து, அமைதியாக அன்பாகப் பேசுவதுண்டு.

இன்றைய தியானப்பகுதி, இயேசுவுக்கும், ஒருவனுக்கும் இடையில் நடந்த சம்பாஷணையைக் காட்டுகிறது. எப்படியாகிலும் தான் நித்திய ஜீவனை சுதந்தரிக்கவேண்டும் என்பதே வந்தவனுடைய நோக்கம். அதேநேரம் இயேசுவுக்கு முன்பாக அவன் தன்னை நீதிமானாகவும் காட்ட எத்தனிக்கிறான். எல்லாவிதமான நீதிச்சட்டங்களையும் தான் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருப்பதாகவும் அவன் இயேசுவிடம் கூறுகிறான். அப்போது, இயேசு அவனிடம், உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு என்கிறார். இதற்கு முன்பதாக, இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து என்று வாசிக்கிறோம். அன்போடு கூடவே அவனது குறைவைச் சுட்டிக்காட்டினார் இயேசு. அவனைக் குற்றப்படுத்தவேண்டும், அவமானப் படுத்தவேண்டும் என்று அவர் அதைச் செய்யவில்லை. அவனில் அன்புகூர்ந்து நித்திய ஜீவனுக்கு நேராக வழிநடத்தவே விரும்பினார்.

அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாக இருந்தான். உனது ஆஸ்திகளை விற்றுத் தரித்திரருக்குக் கொடு; அப்பொழுது உனக்குப் பரலோகத்தில் பொக்கிஷம் உண்டாயிருக்கும் என்று இயேசு சொன்னபோது, அவன் துக்கத்தோடே திரும்பிப் போனான் என்று காண்கிறோம். தனது ஐசுவரியத்தில் அத்தனை பிரியம் வைத்திருந்த அவனிலும் இயேசு அன்புகூர்ந்தார்; அதனாலேயே அவனது குறைவைச் சுட்டிக்காட்டினார்.

பிரியமானவர்களே, இன்று நாம் பாவத்தில் மாண்டு அழிந்துப்போக்கூடாது என்பதற்காகவே, தேவன் நம்மீது அன்புகூர்ந்து, நம்மை மீட்கும்பொருட்டு, இப்பூமிக்கு நம்மைத் தேடிவந்தார். நாம் சரியான பாதையில் பயணிக்கவேண்டும் என்பதற்காகவே சத்தியவார்த்தைகளை நமக்கு வழிகாட்டியாகத் தந்தும் இருக்கிறார். இவைகளையும் விட்டு நாம் வழிதப்பிப்போகும்போது, அவர் நம்மீதுள்ள அன்பினிமித்தமாகவே நம்மை சிட்சிக்கவும் செய்கிறார். எல்லாவற்றையும் ஆண்டவர் நம்மீதுள்ள அன்பினிமித்தமாகவே செய்கிறார். இதை உணர்ந்தவர்களாய் இந்த லெந்து நாட்களில் நாம் நம்மை அவரிடத்தில் ஒப்படைப்போம். இந்த நாட்களில் விசேஷமாக, தேவனுடைய பாதத்தில் அமர்ந்திருந்து நம்மை ஆராய்ந்துபார்ப்போம். நம்மிடத்தில் உள்ள குறைவுகளை உணர்ந்துகொள்வோம். அதை விட்டு எழுந்திருப்போம். நீர் சர்வ வல்லவரிடத்தில் மனந்திரும்பினால், திரும்பக் கட்டப்படுவீர் (யோபு 22:23).

ஜெபம்: நல்ல ஆண்டவரே, ஒருவராகிலும் பாவத்தில் அழிந்துபோகக்கூடாது என்று எங்களில் அன்புகூர்ந்து சிட்சையினால் உம்பக்கம் இழுத்துக்கொள்ளுகிற உமது கிருபைகளுக்காக ஸ்தோத்திரம். ஆமென்.