ஜெபக்குறிப்பு: 2024 ஜனவரி 31 புதன்

அவர்களை மகிமைப்படுத்துவேன், அவர்கள் சிறுமைப்படுவதில்லை (எரேமி.30:19) இம்மட்டும் நமக்கு உதவி செய்து துணையாளராய் அருகில் இருந்து ஒவ்வொரு நாளிலும் அவர் நமக்குக் காட்டின தயவுகளுக்காக நன்றி சொல்லி அவருக்கு ஆராதனை செய்வோம். உலகத்தின் முடிவுபரியந்தமும்கூட இருப்பதாக வாக்குப் பண்ணின தேவன் புதிய மாதத்தையும் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.

கர்த்தருக்குப் பிரியம்!

தியானம்: 2024 ஜனவரி 31 புதன் | வேத வாசிப்பு: சங்கீதம் 147:1-11

YouTube video

“தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள் மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்” (சங்கீதம் 147:11).

கர்த்தர் நம்மை வழிநடத்துகிறவர். அவர் நமக்கு எல்லாமாய் இருக்கிறார். நாம் அவருக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தால், அவரது வழிநடத்துதலையும், அவரது பிரசன்னத்தையும் நமது வாழ்வில் அனுதினமும் உணர்ந்து கொள்ளலாம் என்ற உறுதியுடன் இன்றைய தியானத்துக்குள் பிரவேசிப்போம்.

பொதுவாக மனித உள்ளம் மற்றவரின் பிரியத்துக்காக ஏங்கும் தன்மை கொண்டது என்பதை நாம் மறுக்கமுடியாது. அதுபோலவே, நாம் ஒருவரில் பிரியம் வைத்துவிட்டால், அவருக்காக காரியங்களைப் பார்த்துப் பார்த்து செய்வோமல்லவா! இங்கே கர்த்தரின் பிரியத்தைக் குறித்து, வேதாகமம் சொல்வதென்ன? “தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாய் இருக்கிறார்.” அவர் தமது பிரியத்தினாலே என்னவெல்லாம் செய்கிறார்; நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார். அவர்களது காயங்களைக் கட்டுகிறார். இன்று வாழ்க்கையின் போராட்டங்களினால் மனம் உடைந்து போய் நொறுங்குண்டு கிடக்கும் உங்களை ஆண்டவர் காண்கிறார். நட்சத்திரங்களையெல்லாம் பெயரிட்டு அழைக்கும் ஆண்டவர், மகனே, மகளே என்று நம்மையும் பெயர்ச் சொல்லி அழைக்காதிருப்பாரோ! மிருக ஜீவன்களையும், காக்கை குஞ்சுகளையும் போஷிக்கும் தேவன், தமது சாயலாக தமது ரூபத்தின் படி சிருஷ்டித்த நம்மைப் போஷியாமல் இருப்பாரோ? இதனை நாம் உணர்ந்தால் ஏன் கலக்கம், ஏன் சோர்வு?

தேவபிள்ளையே, இன்றே கர்த்தருடைய பாதத்தில் நம்மை முழுமையாக ஒப்புக் கொடுப்போம். அவருக்குப் பயந்து அவரது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ நம்மை அர்ப்பணிப்போம். அவரது கிருபையைக் காத்திருந்து பெற்றுக்கொண்டு, கிருபையினாலேயே வாழ்வோம். ஆண்டவருக்காக அதிகமான ஊழியப்பணியிலே ஈடுபட்டு, அவரோடு நேரம் செலவிடக்கூட நேரமற்றவர்களாக நாம் அலைந்து திரிவதுண்டு. தசமபாகங்களைத் தவறாமல் கொடுப்பதினால் நாம் அவருக்குப் பிரியமானவர்களாய் வாழ்கிறோம் என்றெண்ணி நமக்குள்ளே திருப்திப்பட்டுக் கொள்வதுமுண்டு.

ஆனால் ஆண்டவர், இவைகளைப் பார்க்கிலும் தமக்குப் பயந்தவர்களிடத்திலும், தமது கிருபைக்காகக் காத்திருக்கிறவர்களிடத்திலுமே, பிரியம் வைத்திருப்பதாக தேவனுடைய வார்த்தை உறுதியாகச் சொல்லுகிறது. கர்த்தரின் பிரியத்துக்குப் பாத்திரவான்களாய் நம்மை இன்றே அவரிடத்தில் ஒப்புக்கொடுப்போம். நமது சுயவிருப்பங்களைத் தள்ளிவிட்டு, தேவனுடைய விருப்பம் செய்யும்படியாக நம்மை நாமே ஒப்புக்கொடுப்போம். தானியேலை தேவன் அழைத்தது போன்று நம்மையும் பெயரிட்டு அழைத்து, எனக்குப் பிரியமானவனே என்பாரானால் அதுவே மெய்யான மகிழச்சி!

ஜெபம்: அன்பின் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குக் கற்றுத் தாரும். உமது கிருபைக்குக் காத்திருந்து பெலனடைய உதவிடும், ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2024 ஜனவரி 30 செவ்வாய்

43 கோடி மக்கள் வாழும் பசிபிக் கடல் ஆஸ்திரேலியா கண்டத்தில் உள்ள 29 நாடுகளுக்காக ஜெபிப்போம். ஆண்டவருடைய அழைப்பைப் பெற்று அநேக மிஷனெரிகள் எழும்பவும் ஒருமுறை கூட சுவிசேஷத்தைக் கேள்விப்பட்டிராத 27 சதவீதத்திற்கும் அதிகமான மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுவதற்கும் திருச்சபைகள் எழுச்சியடையவும் மன்றாடுவோம்.

மேலானவைகளைத் தேடுங்கள்!

தியானம்: 2024 ஜனவரி 30 செவ்வாய் | வேத வாசிப்பு: கொலோசெயர் 3:1-17

YouTube video

பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள் (கொலோசெயர் 3:2).

பன்றிகள் எப்போதும் கீழே பார்த்தவண்ணமே செல்லும். ஒருபோதும் நிமிர்ந்து மேலே பார்க்காது. ஆனால், நாலு கால்களிலும் கட்டப்பட்டு, அக்கட்டுகளுக்குள் தடியைப் போட்டு, தலைகீழாக, அடிக்கப்படுவதற்குக் கொண்டு செல்லும் போதுதான், அது ஆகாயத்தைப் பார்க்கும். இதைப் போலவே மனிதனும் கீழே பூமியிலுள்ளவைகளையே பார்த்து, மேலானவைகளை விட்டுவிடுகிறான். இதை வாசிக்கும் அருமையான சகோதர சகோதரிகளே, மேலானவற்றை நாம் எப்போது பார்க்கப்போகிறோம்? நாம் மரணத்தை நெருங்கும்போதா?

உலகமும், அதன் இச்சைகளும் ஒருநாள் ஒழிந்துபோகும். அது தெரிந்தும், அவற்றிலேயே நாம் அதிகம் நாட்டம் செலுத்துகிறோமேயல்லாமல், அழியாத நித்திய இராஜ்யத்துக்குரியதை நாம் நாடுவது கிடையாது. பவுல் கொலோசெயருக்கு எழுதும்போது, மேலானவைகளை நாடும்படிக்கு வலியுறுத்துகிறார். “கிறிஸ்துவுடனேகூட நீங்கள் எழுந்தது உண்மையானால், உங்களைச் சிருஷ்டித்த தேவனின் சாயலுக்கொப்பாய் பூரண அறிவடையும்படிக்கு புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்’ என்றும் ஆலோசனை கூறுகிறார்.

பழைய மனுஷராய் நாம் இருந்தபோது, மூர்க்கமும், பொறாமையும், வாயில் பிறக்கலாகாத தூஷணங்களும், பொய்யும் நம்மை ஆட்கொண்டிருக்கலாம். ஆனால், புதிய மனுஷனைத் தரித்தவர்களாகிய நம்மிடம், பரிசுத்தமும், உருக்கமான இரக்கமும், மனத்தாழ்மையும், நீடிய பொறுமையும் காணப்படவேண்டும். இவையெல்லாவற்றிற்கும் மேலாக, பூரணகட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ள வேண்டும். நமது வாழ்வு எப்படிப்பட்டதாக இருக்கிறது. பேச்சளவில்தான் நாம் புதிய மனுஷனாக வாழுகிறோமா? அல்லது, உண்மையாகவே நமது பழைய மனுஷனைக் களைந்துவிட்டு மேலான வாழ்வுக்கு நம்மை நாம் அர்ப்பணித்திருக்கிறோமா?

பிரியமானவர்களே, நாம் பூமியில் இருக்கும்வரை, அதன் ஆசை இச்சைகள் நம்மைத் தொடர்ந்தவண்ணமே இருக்கும். அதனை எதிர்கொண்டு போராடி ஜெயிக்கவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். தேவனை அறிந்துகொண்ட நாம், அவருக்குரிய மேலானவைகளை நாடவேண்டும். அத்தோடு, அவரை அறியாதோர் மத்தியிலும், நித்திய இராஜ்யத்துக்குரிய மேன்மைகளை எடுத்துச்சொல்லி, மேலானவைகளைப் புரியவைத்து, அவர்களையும் மேலானவைகளை நாடும்படிக்கு ஊக்குவிக்கவேண்டும். அழிந்துபோகும் உலகப்பொருளைச் சம்பாதிப்ப தைப்பார்க்கிலும், அழியாத ஆத்துமாக்களைத் தேவராஜ்யத்துக்காய் நாம் தேடிப் பிடிக்கவேண்டும். இப்பணியைச் செய்வதற்கு இன்று நம்மை அவருக்கு ஒப்புக் கொடுப்போமா?

ஜெபம்: “அன்பின் தேவனே, எப்போதும் இம்மண்ணுக்குரியவைகளில் எனது நாட்டத்தைச் செலுத்தாமல், நித்தியமான, உன்னதமான, மேலான காரியங்களை நோக்கிப்பார்க்க எனக்கு உதவி செய்யும், ஆமென்.”