ஜெபக்குறிப்பு: 2023 டிசம்பர் 31 ஞாயிறு

ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல (உபாகமம் 1:31) இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும் தாயைப்போல தேற்றி பாதுகாத்த ஆண்டவரை மகிமைப் படுத்துவோம். புதுவருட ஆராதனைக்கு ஆயத்தப்படும் விசுவாசிகள், திருச் சபைகளுக்காகவும், அனைத்துலக திருச்சபை ஆராதனைகளின் பாதுகாப்பிற்காகவும் ஜெபம் செய்வோம்.

நடத்தியவர் நடத்துவார்!

தியானம்: 2023 டிசம்பர் 31 ஞாயிறு | வேத வாசிப்பு: சங்.73:23-28; யூதா 20-25

YouTube video

உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர் (சங்.73:24).

வருடத்தின் கடைசி நாளுக்குள் வந்துவிட்டோம். இயேசுகிறிஸ்து நம்மை இரட்சித்து, “இம்மானுவேலாய்” நம்மோடிருந்து, வழிநடத்திய தேவன், இவ் ஆண்டின் கடைசி நாளாகிய இன்றைய தினத்தை நாம் கண்டுகொள்ள கிருபை ஈந்ததால் இச்சங்கீதத்தை எழுதிய ஆசாப்பைப்போல நாமும் அவரைத் துதிப்போமாக. இவ் வார்த்தையில் வரும் “நடத்தி” என்ற சொல்லைக் கவனியுங்கள். நடத்தி முடித்தவராக அல்லாமல், நம் தேவன் நம்மை நடத்திக்கொண்டே இருக்கிறவராக இருக்கிறார். ஆசாப் அடைந்த குழப்பமான மனநிலை மாத்திரமல்ல, கண்ணிகள், ஆபத்துக்கள், சுட்டெரிக்கும் வெய்யில் போன்ற சோதனைகள், பெருவெள்ளம் போன்ற மரண ஆபத்துக்கள் ஆகியவற்றை நாம் இன்னும் சந்திக்கத்தான் போகிறோம். ஆனாலும், நம் தேவன் தம்முடைய உன்னதமான ஆலோசனையின்படி நடத்த வல்லவராக இருக்கிறார்.

நடத்துகிறவர் நடத்திவந்த நாட்களை சற்றுப் பின்னோக்குவோமானால் அவர் நம்மில் எவ்வளவாய் அன்புகூர்ந்து, செட்டைகளுக்குள் அடைக்கலம் வைத்து நடத்தி வந்தார்; ஆபத்துக்களிலும், கண்ணிகளிலுமிருந்து தப்புவித்து, மீட்டு, தமது இரட்சிப்பை தந்து, வாக்குத்தத்தங்களையும் நமக்கு ஈந்தார்; அவர் இரக்கங்களுக்கு அளவுமில்லை; முடிவுமில்லை!

இறுதியாக, நடத்தியவர், நடத்துகிறவர், தொடர்ந்தும் காலாகாலங்களுக்கு நம்மை நடத்துவார்! புதிய ஆண்டினைச் சந்திக்கவிருக்கும் நாம், பலவித சூழ்நிலைகளால் கலங்கியவர்களாக நடத்துவாரா என்ற கேள்வியைக் கேட்கக் கூடும். மகனே, மகளே, கலங்காதே! நம் தேவன் சூழ்நிலைகளிலும் மேலானவர்!! “உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நம்மோடேகூட இருப்பதாக” வாக்களித்தவர். நம் வாழ்வின் முடிவிலே, “தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே நம்மை மாசற்றவர்களாய் நிறுத்தவும்” வல்லமையுள்ளவராவார். அவரையே நீ முற்றுமாக அண்டிக்கொள். கர்த்தர் முடிவுபரியந்தம் நம்மோடேகூட வருவார்!

ஆகவே தேவபிள்ளையே, தைரியத்தோடே “பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை” (சங்.73:25) என்று அறிக்கையிடுவோம். நடத்தினவர்; நடத்து கிறார்; இனிமேலும் நடத்துவார். முடிவிலே நம்மைச் சேர்த்துக்கொள்வார். அல்லேலூயா!

சத்தியவசன “அனுதினமும் கிறிஸ்துவுடன்” வாசகர்களுக்கு எமது மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். பிறக்கப்போகும் புதிய ஆண்டு உங்கள் அனைவருக்கும் ஆசீர்வாதமான ஆண்டாக அமைவதாக!

ஜெபம்: அன்பின் தகப்பனே, உமது கரங்களுக்குள் எங்களை முற்றிலும் ஒப்புவிக்கிறோம். புதிய ஆண்டில் உமக்குள், உமக்காக உம்மோடு ஜீவிக்க பரிசுத்தாவியின் வல்லமையை ஈந்தருளும். இதுவரை எங்களை நடத்தியவர், இனிமேலும் நடத்துவீர். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2023 டிசம்பர் 30 சனி

ஒவ்வொருநாளும் தமது அன்பின் நேசத்தால் நம்மை நிரப்பி, கண்ணீரைத் துடைத்து, வழி இதுவே இதிலே நடவுங்கள் என்று நம்மை போதித்து நடத்திவந்த கர்த்தாதி கர்த்தருக்கு முழுஇருதயத்தோடு நன்றிபலிகளைச் செலுத்தி, தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருக்கிறவர்களாக காணப்பட நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.

என்னுள் நிறைந்தவர்!

தியானம்: 2023 டிசம்பர் 30 சனி | வேத வாசிப்பு: உன்.1:1-4; கலா.2:20

YouTube video

என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடிவருவோம்; என் நேசர் என்னுடையவர்; என் நேசரே! தீவிரியும்; (உன்னதப்பாட்டு 1:4, 2:16, 8:14).

கடந்துசெல்லும் ஆண்டின் சம்பவங்களையும், அவற்றை நாம் எப்படிக் கடந்து வந்தோம் என்றும், பல அன்பானவர்கள் சாவை அரவணைத்துக்கொண்ட போதிலும் இன்றும் நாம் ஜீவிக்கிறோமே, அது எப்படி என்பதையும் ஒருவிசை நினைத்துப் பார்ப்போம். இன்று நம் இருதயத்தின் நினைவை நிறைத்திருக்கின்ற விஷயங்கள் எவை? உலகம் பல பிரச்சனைகளை அன்றாடம் நம் மனதிற்குள்ளும் அறிவிற்குள்ளும் புகுத்தி, அதைக் குறித்த கவலையினால் நம்மை நிறைத்திருக்கிறது. இதனால், எதை சிந்திக்க வேண்டுமோ, எதற்கு அதிக நேரத்தை ஒதுக்க வேண்டுமோ எல்லாமே குறைந்துவிட்டது. நமது இருதயம் எதனால் நிறைகிறதோ, நாம் அதுவாய் மாறிவிடுகிறோம் என்ற ஆபத்தைக்கூட சிந்திக்க முடியாதபடி உலகம் நம்மை நெருக்குகிறது.

இயேசு உலகில் வாழ்ந்திருந்தபோது அவர் செய்த அற்புதங்கள், பிரசங்கங்கள், அவருடைய வாழ்வு யாவையும் நாம் அறிந்திருக்கிறோம். இவற்றிலும் மேலாக, கல்வாரியில் அவர் செய்துமுடித்த கிரியை, உயிர்த்தெழுதலின் மகிமை எல்லாமே நமது அறிவுக்குத் தெரியும். மேலும், அவர் அளித்த இரட்சிப்பின் சந்தோஷம், நித்தியத்தின் நிச்சயத்தைக்கூட நாம் பெற்றிருக்கிறோம். ஆனால், ஆண்டின் நிறைவுக்கு வந்திருக்கும் நாம் நம்மைக் கேட்கவேண்டிய கேள்வி இதுதான்: ஆண்டவரின் கிரியைகளில் மகிழ்ந்திருக்கிற என் இருதயமும், அவரது கிரியைகளை நோக்கிய என் கண்களும் அவரை நோக்கியிருக்கிறதா? இன்னும் சொன்னால், என் இருதயம் என்னைக் கண்ட அந்த அழகான கண்களை உடையவரின் அழகினால், நிறைந்திருக்கிறதா?

திடீரென ஒரு நறுமணத்தை நாம் நுகர நேரிட்டால். அந்த நறுமணம், அதற்குரியதை நோக்கி நம்மை ஈர்த்துவிடுகிறது! அதேபிரகாரம், ஆண்டவர் நமக்கருளின மன்னிப்பு, இரட்சிப்பு, நன்மைகள் யாவையும் நினைத்து மகிழுகின்ற அதேசமயம், இவற்றையெல்லாம் நமக்கு நிறைவாய் தந்தருளின அவர்பால் நாம் ஈர்க்கப்பட்டிருக்கிறோமா? அவருடைய நன்மைகளை அனுபவிக்கும் நாம் அவரால் நிறைந்திருக்கிறோமா? இதைத்தான் பவுல், “இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் வாழுகிறார்” என்கிறார். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு அவரையே சிந்திக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவர்பால் ஈர்க்கப்படுகிறோம். சூலேமித்தியாள்போல, “என்னை இழுத்துக்கொள்ளும்” “என்னை இன்னும் இன்னும் உம்மண்டை இழுத்துக்கொள்ளும்” என்று நமது இருதயம் வாஞ்சித்துக் கதறட்டும். இந்த உலகத்தையே குனிந்து பார்க்கின்ற நமது கண்கள், நிமிர்ந்து மேலே பார்த்து, “ஆண்டவரே, சீக்கிரமாய் வாரும்” என்று அழைக்கட்டும். நிலையற்ற காரியங்களால் நமது இருதயத்தை நிறைத்திருந்தால் இன்றே அதை அகற்றிப்போட்டு, மாறாத ஆண்டவரின் பிரசன்னத்தால் நிறைக்கப்பட தேவாவியானவரின் ஒத்தாசையை நாடுவோமாக.

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, நீர் எனக்குள் வாழுகிறீர் என்ற சாட்சியுள்ள ஜீவியத்தில் தொடர்ந்து வாழ, அதைக் காத்துக்கொள்ள தாழ்மையோடு ஜெபிக்கிறோம். ஆமென்.