ஜெபக்குறிப்பு: 2023 டிசம்பர் 7 வியாழன்
என் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக; என் கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும் (சங்.88:2) குழந்தைக்காக பல ஆண்டுகளாக ஆண்டவருடைய பாதத்தில் மன்றாடி வரும் பங்காளர் குடும்பத்தினருக்கு குறித்த காலத்தில் தம்முடைய வாக்கை கர்த்தர் நிறைவேற்றி அவர்களை ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.
பிரியமான பிள்ளைகள்!
தியானம்: 2023 டிசம்பர் 7 வியாழன் | வேத வாசிப்பு: எபேசியர் 4:30-32; 5:1-2

ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி …. (எபேசியர் 5:1).
கிறிஸ்துமஸ் கொண்டாடுவதால்தான் நம்மைக் கிறிஸ்தவர்கள் என்று இந்த உலகம் அழைக்கிறதா? வெறுமனே கிறிஸ்தவனாக இருப்பது இலகு; ஆனால், தேவனுக்குப் பிரியமான பிள்ளைகளாக, கிறிஸ்துவின் மாதிரியை வெளிப்படுத்துகிறவர்களாக வாழுகிறோமா என்பதே சிந்திக்கவேண்டிய கேள்வி.
“பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி” என்று பவுல் நமது உயர்வான நிலையை வலியுறுத்துகிறார். இந்த அற்புதமான சிந்தனையை கர்த்தர் நமது இருதயத்துக்குள்ளும் வைத்திருக்கிறார். அவர் நம்மைக் கண்டபோது பாவத்தைத் தவிர நம்மிடம் எதைத்தான் கண்டிருப்பார்? அப்படியிருக்க “அவருடைய பிள்ளைகள்” என்பது எப்படிச் சாத்தியமாகும்? இதற்கு ஒரே காரணர் இயேசுகிறிஸ்து ஒருவரைத் தவிர வேறு எவருமே இல்லை. இதற்கு ஒப்பானதொரு மகிழ்ச்சி இந்த உலகில் எங்கும் எதிலும் கிடையாது. ஆனால், இந்த உலகமும், நமது அலட்சியப்போக்கும் இந்த மேன்மையான நிலையிலிருந்து நம்மை வீழ்த்திப்போடமுடியும், ஜாக்கிரதை! என்றாலும், கர்த்தர் நம்மை நிலைப்படுத்தியிருக்கிற இடம் இதுதான்; நாம் தேவனது பிள்ளைகள்! கிறிஸ்துவில் நமக்கு அருளப்பட்ட விசுவாசத்தினிமித்தம் நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம் என்பது நமக்குப் பரிச்சயமான சிந்தனைதான்; ஆனால், தேவனுக்கு அருகாமையில், நெருக்கமான உறவில் இருக்கிறோம் என்ற சிந்தனை, “ஆண்டவர் எனக்குள், நான் அவருக்குள்” என்ற உறுதி, இவை நமக்குள் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லையா! ஆக்கினைத்தீர்ப்பிலிருந்து ஆண்டவர் நம்மை விடுவித்தார் என்பதற்கும் மேலாக, பாவம் நம்மைவிட்டு அகற்றப்பட்டபோது அது மறக்கப்பட்டும் போயிற்று!
இன்று, தமக்குப் “பிரியமான பிள்ளை” என்ற மேன்மையான உறவை நமக்கு அருளியிருக்கிறார! கர்த்தர் நமக்கு அருளியிருக்கும் நன்மைகள் ஏராளம்; ஆனால், அவை யாவற்றுக்கும் மேலாக அவர் நமக்கு அருளியிருக்கிற இடம் அதிமேன்மையானது. ஆம், பிதா தமது குமாரனில் எப்படி அன்புவைத்திருந்தாரோ, அதே அன்பையே பிதா நம்மிடமும் வைத்திருக்கிறார் (யோவான் 17:23,26).
இந்த உலகில் தேவனுக்குப் பிரியமாக வாழமுடியுமா? இயேசு தமது குடும்பத்தாரோடு கீழ்ப்படிவுள்ள மகனாக வாழ்ந்து, தமது முப்பதாவது வயதிலே ஞானஸ்நானம் பெற்று கரையேறியபோது, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” என்று உரைத்தது (மத்.3:17). ஆக, முப்பது வயதுவரைக்கும் இந்த உலகில் இயேசு ஒரு முழுமனிதனாக எப்படி வாழ்ந்திருப்பார் என்பதற்கு இந்த ஒரே சாட்சியே போதுமானது. ஆக, இயேசுவின் வழியில் நாமும் வாழும்போது நிச்சயமாகவே, பிதாவுக்குப் பிரியமான பிள்ளையாக, அவரையே மாதிரியாகக்கொண்டு வாழ ஆவியானவர் துணை நிற்பார்.
ஜெபம்: அன்பின் தேவனே, உமது வழியில் உமக்குப் பிரியமானப் பிள்ளையாக வாழ்வதற்கு எனக்கு கிருபை தாரும். உம்மிடத்தில் என்னை அர்ப்பணிக்கிறேன். ஆமென்.