ஜெபக்குறிப்பு: 2024 மார்ச் 31 ஞாயிறு

அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார் (மத்.28:6) மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவுகூரும் ஆராதனை சிறப்போடும், விசுவாசிகள் அனைவரும் மிகுந்த மனமகிழ்ச்சியோடும் ஆசரிப்பதற்கும், இம்மாதம் முழுவதுமாய் நம்மை நடத்திய அவருடைய மகத்துவத்திற்காகவும் ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.

கர்த்தர் உயிர்த்தெழுந்தார்!

தியானம்: 2024 மார்ச் 31 ஞாயிறு| வேத வாசிப்பு: மத்தேயு 28:1-20

YouTube video

இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென் (மத்தேயு 28:20).

happy-easter-jesus

வாசகர்களாகிய உங்கள் அனைவரையும், மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துகிறோம்.

கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவுகூரும் இந்த நாள், நமக்கு சந்தோஷமும், விசேஷித்ததும், வெற்றியின் நாளுமாக இருக்கிறது. கிறிஸ்து எழுந்திருக்காவிட்டால் நமது நம்பிக்கையும் விருதா, விசுவாசமும் விருதா. ஆம், கர்த்தர் உயிர்த்தெழுந்தார்; மெய்யாகவே உயிர்த்தெழுந்தார். நாம் அகமகிழ்வோம், அக்களிப்போம், அல்லேலூயா பாடுவோம்!

ஓய்வுநாள் முடிந்து வாரத்தின் முதல்நாள் காலையிலே பெண்கள் கல்லறையைப் பார்க்க வருகிறார்கள். அவர்கள் கண்டதோ திறவுண்ட கல்லறை; “அவர் உயிர்த்தெழுந்தார்” என்ற நற்செய்தியை அறிவிக்க வந்த தேவதூதனைக் கண்டு அவர்கள் பயந்தார்கள்; அவனோ, “நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்” என்கிறான். அந்தச் சந்தோஷத்தை சீஷருக்கு அறிவிக்கும்படி பெண்களும் ஆவலோடு திரும்பி ஓடுகின்றனர். பின்பு, இயேசு தமது சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்துகிறார். அத்தோடு தமது பணியை சீஷர்களிடம் கையளித்தார். “புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்” என்று சொல்லிவிட்டு, “உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் உங்களோடு கூட இருப்பேன்” என வாக்குரைத்தார்.

ஆகவே தேவபிள்ளையே, நாம் இந்த உலகில் எதற்கும் பயப்படவேண்டிய அவசியமில்லை. சாவையே வென்று உயிர்த்த இயேசு நம்முடன் இருக்கும்போது நமக்கு ஏது தேவையற்ற பயம்? அடுத்தது, அன்று உயிர்த்த இயேசு தமது சீஷருக்குக் கொடுத்த பணியும், அந்தப்பணியை நிறைவேற்றும்போது தாம் கூட இருப்பதாகக் கூறிய வாக்கும் அன்று அவர்களுக்கு மாத்திரமல்ல. இன்று நமக்கும் உரியதே. வருடம்தோறும் உயிர்த்த ஞாயிறை கொண்டாடுகிற நம்மில் எத்தனைபேர், அவர் அளித்த பணியை நிறைவேற்ற சிறிதேனும் முயற்சி எடுத்துள்ளோம்? தினம்தினம் இயேசுவை, அவர் அளித்த மீட்பை அறியாமலேயே ஏராளமான மக்கள் இறந்துகொண்டிருக்கிறார்களே! அவர்களைக்குறித்த நமது மன நோக்கு என்ன? ஆத்துமபாரம் எங்கே? கர்த்தர் உயிர்த்தெழுந்தார்! ஜீவனுள்ள தேவனை ஆராதிக்கின்ற நாம், இன்னமும் மரித்தவர்கள்போல இருக்கலாமா? உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுக்காய் பணி செய்ய நம்மை அர்ப்பணிப்போமா? நற்செய்தியை அறிவிக்க முன்வருவோமா?

ஜெபம்: அன்பின் தேவனே, குமாரனாகிய இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்து இன்று எங்களோடிருப்பதால் உமக்கு ஸ்தோத்திரம். இந்த நற்செய்தியை உம்மைப்பற்றி அறியாத மக்களுக்கு அறிவிக்க எனக்கு பெலன் தாரும். ஆமென்.

வாக்குத்தத்தம்: 2024 மார்ச் 30 சனி

நூற்றுக்கு அதிபதி … கண்டபோது …. மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றான். (மாற்கு 15:39)
வேதவாசிப்பு: காலை: யோசுவா 10,11 | மாலை: லூக்கா 06:20-49

ஜெபக்குறிப்பு: 2024 மார்ச் 30 சனி

சத்தியவசன ஊழியப்பணிகளுக்காக ஜெபித்துவரும் ஜெபக்குழுக்களுக்காகவும், திருச்சபைகளுக்காகவும் ஆண்டவருக்கு நன்றி செலுத்தி ஆதரவான காணிக்கையை அனுப்பி தாங்கிவரும் பங்காளர்கள், ஆதரவாளர்கள், சந்தாதாரர்கள் யாவரையும் கர்த்தர்தாமே ஆசீர்வதித்து, அவர்களை உயர்த்தி மேன்மைப்படுத்த வேண்டுதல் செய்வோம்.

சிலுவை தரும் இனிய செய்தி!

தியானம்: 2024 மார்ச் 30 சனி| வேத வாசிப்பு: லூக்கா 24:13-24

YouTube video

துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார் (கொலோ.2:15).

“அவரே இஸ்ரவேலை மீட்டி இரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம்.” எம்மாவு ஊருக்குப் போனவர்களின் ஏமாற்றத்தின் குரல் இது. ஓய்வுநாள் கற்பனையின்படி ஓய்ந்திருந்த ஸ்திரீகளோ இறந்துபோன சரீரத்தைக் கனம்பண்ணக் காத்திருந்தார்கள். சீஷர்களோ ஒளிந்துவிட்டார்கள். அப்படியானால் சிலுவை மரணம் கிறிஸ்துவுக்குக் கிடைத்த தோல்வியா? சிலுவை அடையாளம் தோல்விக்குரியதா? நாம் தோற்றுப் போகிறவர்களா? பணம், பதவி, அந்தஸ்து இவையே வெற்றி என்று நினைக்கிறது இன்றைய உலகம். அநேக வாக்குகளைப் பெற்றுக்கொள்வதே அரசியல் வெற்றி எனக் கருதப்படுகிறது. ஆனால், ராஜ்யத்தையும் பதவிகளையும் எதிர்பார்த்த சீஷர்களுக்குக் கிடைத்தது சிலுவைதான். ரோமருக்கும் யூதருக்கும் சிலுவை தோல்வியின் சின்னம். ஆனால் உண்மை அதுவல்ல. உண்மையான “வெற்றி தோல்வி” என்றால் என்ன என்பதற்கு சிலுவை தரும் விளக்கமே வேறு.

கெத்செமனேயிலும், செனதரின் சங்கத்தின் முன்னிலையிலும், பிலாத்துவின் அரமனையிலும், அடிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டும், சிலுவைப் பாதையில், மரணத்தின் விளிம்பிலும் ஆண்டவர் மனம் பதறவில்லை. அமைதலாக தம்மைப் பிதாவின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்தாரே! அதுதான் முதல் வெற்றி. “பிதாவே இவர்களுக்கு மன்னியும்” என்று இயேசு ஜெபித்தபோதே மரணத்தின் கூர் வளைந்தது; அவர் ஜீவனை விட்டபோது அது ஒடிந்தது. தோல்வி வெற்றியால் விழுங்கப்பட்டது. நமது வாழ்வின் கொடிய சோதனை வேதனைகளிலும், வாழ்வே சின்னாபின்னமாகும் கொடிய பாதையிலும் விசுவாசத்தை இழந்துவிடாமல் நிலைத்திருப்பதே சிலுவை தரும் தோல்வியில் வெற்றி. உலகம் தனது வெற்றியை அடைய, உண்மை நேர்மை நல்லொழுக்கம் பிறர் நலம் என்று பல விலையைக் கொடுக்கிறது. இறுதியில் அது நம்மைக் கைவிட்டுவிடும். ஆனால், சிலுவை கொடுத்த விலையோ ஜீவன்; அது மறுவாழ்வைத் தருகிறது. எல்லாமே தோல்வியாய் தோன்றினாலும், இலக்கை நோக்கி ஓடுகின்ற நமது ஓட்டத்தை உலகம் தோல்வி என்று இகழ்ந்தாலும், இறுதியில் சிலுவை தருகின்ற பரிசு வெற்றியே!

வாழ்வில் தோற்றுவிட்டேன் என்று கலங்கி நிற்கும் தேவபிள்ளையே, தோல்வியை வெற்றியாக மாற்றும் சிலுவையண்டைக்கு வா. உன் தோல்வியை அறிக்கைசெய். எந்தச் சூறாவளியிலும் விசுவாசத்தில் உறுதியாய் நில். இது உனக்கு ஓய்வுநாள். ஆனால் நாளை விடியும். தோல்வி வெற்றி சிறப்பதைக் காண்பாய். ஓர் உறுதியான விசுவாசிக்கு வாழ்வில் எந்த நிலையிலும் தோல்வியே இல்லை என்பதே சிலுவை தரும் இனிய செய்தி!

நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக (கலா.6:14).

ஜெபம்: “தோல்வியிலும் வெற்றிச் சிறந்த சிலுவை நாதரே, எந்நிலையிலும் உமக்குள் நாங்கள் உறுதியாய் நின்று, உலகத்தின்மீது வெற்றிச் சிறக்கப் பெலன் தாரும். ஆமென்.”