ஜெபக்குறிப்பு: 2024 பிப்ரவரி 29 வியாழன்

கர்த்தாவே உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன் (சங்.25:1) இந்தநாளிலும் கர்த்தருக்கு ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி பிதாவின் வலது பாரிசத்தில் இருந்து நமக்காக பரிந்துபேசி, வேண்டுதல் செய்து கொண்டிருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மேல் வைத்துள்ள அன்பிற்காக மனதுருக்கத்திற்காக நன்றி சொல்லி ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.

என்னைக் கொன்றுபோட்டாலும் …

தியானம்: 2024 பிப்ரவரி 29 வியாழன் | வேத வாசிப்பு: 2கொரி.4:8-11; 2தீமோத்.1:12

YouTube video

அவர் என்னைக் கொன்றுபோட்டாலும் அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன் (யோபு 13:15).

பயங்கரமான சோதனைப் புயலில் அகப்பட்டு, நம்பிக்கை முற்றிலும் அழிந்து போன நிலையிலும், மன உறுதியோடு யோபு கூறிய இவ்வார்த்தைகளை, நமது சாதாரண வாழ்விலே நமக்கேற்படும் சாதாரண பாடுகளின் மத்தியிலே நம்மால் கூறமுடிகிறதா? யோபுவிற்கு ஏற்பட்ட சோதனைகள் நமக்கு வருமாயின் நமது வாயின் அறிக்கை எப்படிப்பட்டதாயிருக்கும்?

கிறிஸ்தவ வாழ்வு, நாம் நினைப்பதுபோல இலகுவானதல்ல. ஆண்டவர் அருளிய மன்னிப்பையும் மீட்பையும் எப்பொழுது பெற்று அவரை நம் வாழ்வில் ஏற்றுக்கொள்கிறோமோ, அக்கணமே சத்துருவானவன் நமக்கு எதிராக தனது போர்க்கொடியை ஏற்றிவிடுகிறான் என்பதை நினைவில் நிறுத்திக்கொள்வோமாக. நம்பிக்கை யாவுமே சிதறிப்போகும் தருணங்கள் உண்டாகலாம். ஒன்று மாறி ஒன்றாகப் பலத்த அடிகள் நம்மேல் விழக்கூடும். நம் ஜீவன் பறிக்கப்பட்டுப் போகுமளவிற்கு நிலைதடுமாறக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். நமது ஜெபங்கள் கேட்கப்படவில்லையோ என்று சோர்ந்துபோகவும்கூடும். சிலுவையின் கீழே வருந்தித் திகைத்து நிற்கக்கூடும். இவ்வேளைகளில் துக்கத்தையும் கண்ணீரையும் கட்டுப்படுத்தமுடியாது; தப்பிச்செல்ல வழிதேடி தவிக்காமலும் இருக்கமுடியாது. ஆனாலும், இவ்வேளைகள்தான் நாம் உறுதியாக இருக்கவேண்டிய தருணங்கள் என்பதையும் மறக்கக்கூடாது. இதுவரையிலும் நமது யுத்தங்களை நாமே நடத்தித் தோற்றுவிட்டோம் என்பதை ஏற்றுக்கொண்டு, ஆவியானவரின் கரங்களிலே நம்மை ஒப்புக்கொடுப்போம். சத்துருவுக்கு எதிராகக் கொடியேற்ற அவரே பாத்திரராயிருக்கிறார்.

ஆம்! பிரியமானவர்களே, பாடுகளின் வேளைகள்தான் பரத்துக்குப் படியேறும் நல்ல தருணங்கள். “எவ்வேளையிலும் கர்த்தாவே, நான் உம்மையே நம்புவேன்” என அறிக்கை செய்யக்கூடிய தருணம் இன்னொருதரம் நமக்குக் கிடைக்காது போகலாம். கடும்புயல் வீசும்போது, கப்பலை நங்கூரமிட்டு ஒருநிலையில் வைத்திருப்பதுதான் மாலுமி செய்யக்கூடிய ஞானமுள்ள செயலாகும். பவுல் அடியார், “நான் வெட்கப்படுவதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருப்பவர் இன்னாரென்று அறிவேன்” (2 தீமோத்.1:12) என்று பாடுகள் மத்தியிலும் அறிக்கை பண்ணினார். அறிவும், அனுபவமும், ஜெபமும்கூட ஆறுதலளிக்க முடியாத சந்தர்ப்பங்கள் வரலாம். அப்போது நங்கூரத்தைப் பாய்ச்சி, கிறிஸ்துவில் நிற்கப் பழகிக்கொள். அப்பொழுது நீ விசுவாசித்திருப்பவர் நிச்சயமாக உன் முன்னிலைமையிலும், உன் பின்னிலைமையை இரட்டிப்பான ஆசீர்வாதங்களினால் நிரப்புவார். “நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை” (2 கொரி.4:8-9).

ஜெபம்: ஆண்டவரே, எங்கள் வாழ்வில் ஏற்படும் எல்லாத் துக்கத்திலும் உம்மை மட்டுமே சார்ந்து விசுவாச அறிக்கையிட்டு காத்திருக்க கிருபை தாரும். ஆமென்.