காண்கிற தேவன்!
தியானம்: ஆகஸ்டு 18 செவ்வாய்; வாசிப்பு: சங்கீதம் 17:1-8
“…இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல் என் சந்நிதியில்
வந்து எட்டினது; எகிப்தியர் அவர்களை ஒடுக்குகிற
ஒடுக்குதலையும் கண்டேன்” (யாத்.3:9).
அமெரிக்காவிலுள்ள நெப்ரஸ்கா என்னும் இடத்தில் ஷெரில் காசிடிஸ் என்ற மருத்துவ தாதி ஒருவர் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் மதியவேளையில் தனது மகள் ரேச்சலை நடன வகுப்பிலிருந்து அழைத்து வரச்சென்றார். பொதுவாக மகள் வகுப்பு முடிந்து வரும்வரை அவர் காரிலேயே அமர்ந்திருப்பார். ஆனால், அன்று வழக்கத்துக்கு மாறாக அரங்குக்கு உள்ளே சென்று பார்க்க விரும்பினார். உள்ளே தனது மகள், அவளுடன் பயிற்சி எடுக்கும் ஆறு பிள்ளைகள், அவர்களின் நடன ஆசிரியை, மற்றும் ஆசிரியையின் தந்தை ஆகிய அனைவரும் ‘கார்பன் மொனாக்ஸைட்’ என்ற நச்சு வாயுவினால் தாக்கப்பட்டு மயங்கி விழுந்திருப்பதைக் கண்டார். உடனே எதிர்வீட்டில் வசிப்பவர்களது உதவியோடு அனைவரையும் காப்பாற்றினார். அச்சம்பவத்தைக் குறித்து அவர் சொன்னபோது, “இந்தப் பிள்ளைகளை தேவன் என் மூலமாக கண்காணித்துக் கொண்டிருந்தார் என நம்புகிறேன்” எனக் கூறினார்.
அன்று மோசேயும் இதைப்போலவே, இஸ்ரவேல் ஜனங்களைக் கண்காணிக்கும் ஒரு தேவன் உண்டு என்பதை உணர்ந்தார். எப்படியெனில், “எகிப்தியர் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலைக் கண்டேன்” என்று கர்த்தர் மோசேயிடம் கூறினார். அவரே தமது பிள்ளைகளைக் கண்ணோக்குபவர்.
கண்களைப் படைத்த தேவன், தாம் குருடராய் இருப்பாரோ. அவரது கண்களுக்கு மறைவானது ஒன்றுமில்லை. “அவருடைய கண்கள் ஜாதிகள்மேல் நோக்கமாயிருக்கின்றது.” என்று சங்கீதக்காரன் கூறுகின்றார் (சங்.66:7). “தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடு இருக்கிறவர்களுக்கு தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது” (2நாளா.16:9) என்று நாளாகம புத்தகத்தின் ஆசிரியர் கூறுகின்றார். ஆம், கர்த்தருடைய ஜனங்கள் அவரது கண்களுக்கு மறைவாக ஒரு வினாடிகூட இருப்பதில்லை.
அருமையான தேவபிள்ளையே, உன்மேல் கண்ணோக்கமாய் இருக்கும் ஒரு ஆண்டவர் உனக்குண்டு. எனவே, நீ பயப்படவோ கவலைப்படவோ தேவையில்லை. உன்னுடைய பரமபிதா உன்னை மறக்கவோ கைவிடவோ மாட்டார். சரியான நேரத்தில் அவருடைய வழியில் உன் எல்லாத் துன்பத்துக்கும் உன்னை நீங்கலாக்கி இரட்சிப்பார். மற்றவர்கள் உன்னைத் தொடும்போது அவர்கள் முதலில் தேவனின் கண்மணியைத் தொடுகிறார்கள் என்பதை உணர்ந்துகொள். ஆகவே, அவரை நோகடிக்காமல் ஒருவரும் உன்னை நோகடிக்கமுடியாதே!
நீ நெருப்பில் இருக்கும்பொழுது தேவனுடைய கண்கள் உஷ்ணமாயிருக்கும்!
ஜெபம்: “ஆண்டவரே, துன்பங்கள் என்னை மேற்கொள்ளாதவாறு அவற்றுக்கு என்னை நீங்கலாக்கி, காத்து வருவதற்காக ஸ்தோத்திரம். ஆமென்.”