அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (செப்டம்பர்-அக்டோபர் 2015)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்

ஆப்பிரிக்க மொழிகளில் வேதாகமம்

மொஃபட், குருமன் என்னுமிடத்துக்குச் சென்று தனது இறைபணியை ஆரம்பித்தார். அங்கு அவர் பலவிதமான கஷ்டங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தபோதிலும் 1823 இல், அப்பிரதேசத்து மக்களைத் தாக்க வந்த இன்னுமொரு ஆப்பிரிக்க கோத்திரத்திடமிருந்து அவர்களைப் பாதுகாத்தமையினால் அவர், அவர்களது தலைவராகினார்.

எனினும் அவரால் சுவிசேஷத்தை அப்பிரதேச மக்களுக்கு அறிவிக்க முடியாதிருந்தது. இதற்குக் காரணம் தான் அவர்களது மொழியைச் சரிவர கற்காதமையே என்பதை உணர்ந்து கொண்ட மொஃபட், 1827 இல் 11 வாரங்களாக அப்பிரதேச மொழியைத் தொடர்ச்சியாகக் கற்றார். அதன்பின் வேதாகமத்தை அம்மொழியில் மொழி பெயர்க்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் லூக்கா சுவிசேஷத்தை மொழி பெயர்த்த மொஃபட் கேப்டவுனுக்குச் சென்று, அரச அச்சகத்தில் அதை அச்சிட்டார்.

பின்னர், தனது இருப்பிடத்திற்கு திரும்பி வரும்போது மிஷனரி சங்கம் அனுப்பியிருந்த அச்சு இயந்திரத்தையும் எடுத்து வந்து வேதாகமத்தின் மற்றபகுதிகளை மொழி பெயர்த்து அச்சிட்டார். முழுவேதாகமத்தையும் குருமன் பிரதேசத்து பெக்குவானாஸ் எனும் இனத்தவரது மொழியில் மொழி பெயர்த்து முடிக்க மொஃபட்டுக்கு 20 வருடங்கள் தேவைப்பட்டது.

ஆப்பிரிக்காவில் பணியாற்றிய புரட்டஸ்தாந்து சபை மிஷனரிகளில் ரொபர்ட் மொஃபட் முதலிடம் வகித்தாலும் அவரது மருமகனான டேவிட் லிவிங்ஸ்டனே முக்கியமானவராகக் கருதப்படுகிறார். இவர் தனது 27 ஆவது வயதில் லண்டன் மிஷனரி சங்கத்தின் சார்பில் ஆப்பிரிக்காவுக்கு மிஷனரியாகச் சென்றார். ஆப்பிரிக்காவில் இவர் மிஷனரியாகப் பணியாற்றாதபோதிலும், ஆப்பிரிக்காவின் உட்பகுதியிலுள்ள நாடுகளுக்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்திப்பதற்கான பாதைகளைக் கண்டு பிடிக்கும் பல பிரயாணங்களை மேற்கொண்டார். 1841 ஆம் ஆண்டிலிருந்து 30 வருடங்களாக டேவிட் லிவிங்ஸ்டன் ஆப்பிரிக்காவில் மேற்கொண்ட பிரயாணங்களின் போது கண்டுபிடித்த பாதைகள், பிற்காலத்தில் மிஷனரிகள் அங்குள்ள மக்களுக்குச் சுவிசேஷத்தை எடுத்துச் செல்ல உதவின. இதனால் இருண்ட கண்டமென அழைக்கப்பட்டு வந்த ஆப்பிரிக்க கண்டத்திற்குள் சுவிசேஷத்தின் ஒளி பிரகாசிக்கத் தொடங்கியது.

மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள கிணி எனும் நாட்டில் 1918 ஆம் ஆண்டு மிஷனரிப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 1970 ஆம் ஆண்டு அறிக்கையின்படி இந்நாட்டின் சில மொழிகளில் வேதாகம மொழிபெயர்ப்பு வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததை அறிகின்றோம். மேற்கு ஆப்பிரிக்காவின் இன்னுமொரு நாடான சியரலியோன் இல் 1816 ஆம் ஆண்டே மிஷனரிப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் 150 வருடங்களின் பின்பே முழுவேதாகமமும் அந்நாட்டின் ஒரு கோத்திர மக்களது மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. 1970ஆம் ஆண்டு கணிப்பீட்டின்படி அந்நாட்டின் ஒரு கோத்திர மொழியில் முழுவேதாகமமும், 3 கோத்திர மொழிகளில் புதிய ஏற்பாடும், நான்கு கோத்திர மொழிகளில் வேதாகமத்தின் பகுதிகளும் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன.

அதே போல இன்னுமொரு மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவிலும் வேதாகம மொழிபெயர்ப்பு வேலைகள் அதிகம் நடைபெறவில்லை. 140 வருட கால மிஷனரிப் பணியின் பின்னர் அந்நாட்டின் 11 கோத்திர மக்களது மொழிகளில் மட்டுமே வேதாகமத்தின் சில பகுதிகள் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. 1967ஆம் ஆண்டே அந்நாட்டின் மொழிகளில் ஒன்றான பெல் எனும் மொழியில் புதிய ஏற்பாடு வெளிவந்தது. இதேவிதமாக மேற்கு ஆப்பிரிக்காவின் ஐவரிகோஸ்ட் நாட்டிலும் வேதாகம மொழிபெயர்ப்புக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

45 வருட கால மிஷனரிப் பணியின் பின்பே இரு கோத்திர மொழிகளில் புதிய ஏற்பாடு மொழிபெயர்க்கப்பட்டது. அவற்றுள் ஒன்று 1953 இலும் மற்றது 1960 இலும் வெளிவந்தது. இதைவிட இன்னும் 11 கோத்திர மொழிகளில் வேதாகமத்தின் பகுதிகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்காவின் இன்னுமொரு நாடான மாலி இல் 1919ஆம் ஆண்டு மிஷனரிப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அந்நாட்டின் பம்பாரா எனும் மொழியில் 1937இல் புதிய ஏற்பாடும், 1962இல் முழு வேதாகமமும் வெளியிடப்பட்டது.

மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள மேல் வொல்டா எனும் நாட்டில் 1921 ஆம் ஆண்டு மிஷனரிப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்நாட்டின் மோர் எனும் மொழியில் முழுவேதாகமமும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ஏற்பாடானது இன்னும் இரு மொழிகளில் முறையே 1954 இலும் 1958 இலும் வெளியிடப்பட்டன. இந் நாட்டின் வேறு சில கோத்திர மொழிகளிலும் வேதாகம மொழிபெயர்ப்பு வேலைகள் நடைபெற்றுவருகின்றன. கானா எனும் மற்றொரு மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் 5 மொழிகளில் வேதாகமமும், 5 மொழிகளில் வேதாகமப் பகுதிகளும் மொழிபெயர்க்கப் பட்டிருப்பதாக 1970ஆம் ஆண்டு அறிக்கைகள் அறியத்தருகின்றன. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் மொத்தம் 250 மொழிகள் பேசப்படுகின்றன.

1970ஆம் ஆண்டுவரை அந்நாட்டின் 7 மொழிகளில் புதிய ஏற்பாடும் 45 மொழிகளில் வேதாகமப்பகுதிகளும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. இதை விட இன்னும் சில மொழிகளிலும் மொழிபெயர்ப்பு வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தன.

(தொடரும்)