தேவனுடைய நிலையான பிரசன்னம்!

அதிகாலை வேளையில்… (நவம்பர்-டிசம்பர் 2015)
– Dr.உட்ரோ குரோல்

“தேவன் எங்கே இருக்கிறார்?” என்று ஒரு கிறிஸ்தவனிடம் ஒரு நாத்திகன் இகழ்ச்சியாகக் வினவினான். உடனடியாக அந்த கிறிஸ்தவன், “அவர் எங்கே இல்லாமல் இருக்கிறார்?” என்று மறுவினா எழுப்பினான்.

இஸ்ரவேலின் முதல் அரசனாக சவுல் முடிசூட்டப்பட்டார். ஆனால் அவரது தலைமைத்துவம் வெளிப்படுத்தப்படவில்லை. அதற்காக அவர் அதிக காலம் காத்திருக்க அவசியமில்லாமல் போயிற்று. இஸ்ரவேலரை வழிநடத்திச் செல்ல வேண்டிய ஒரு வாய்ப்பு விரைவிலேயே அவருக்கு வாய்த்தது. சாமுவேல் தீர்க்க தரிசியின் இறுதிகாலத்தில் இஸ்ரவேலரின் எதிரிகள் குறிப்பிடத்தக்க வலிமை பெற்று விட்டனர். அவர்களில் யோர்தான் நதியின் கிழக்கே வாழ்ந்து வந்த அம்மோனியர்களும் ஒரு எதிரியாவர். கலிலேயா கடலின் கிழக்கே அமைந்துள்ள அடர்ந்த காடுகளுக்கு நடுவே அமைந்த கீலேயாத்திலிருக்கிற யாபேஸ் பட்டணத்துக்கு எதிராக நாகாஸ் என்ற அம்மோனியர் முற்றிக்கைப் போட்டார்கள்.. வறண்ட நிலத்தில் வாழ்ந்து வந்த அம்மோனியர்களுக்கு இந்த வளமையான பட்டணம் கவர்ச்சியாக அமைந்தது.

கீலேயாத்திலுள்ள யாபேஸ் பட்டணத்தை முற்றுக்கை போட்ட நாகாஸ் அந்நகர மக்கள் தன்னிடம் அடிமைகளாக இருக்கும்படி ஓர் உடன்படிக்கை செய்துகொள்ள வாய்ப்பு அளித்தார். ஆனால் அதின் ஒரு நிபந்தனை அந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதபடி இருந்தது. அம்மோனியனாகிய நாகாஸ் “நான் உங்கள் ஒவ்வொருவருடைய வலதுகண்ணையும் பிடுங்கி, இதினாலே இஸ்ரவேல் எல்லாவற்றின்மேலும் நிந்தையை வரப்பண்ணுவதே நான் உங்களோடேபண்ணும் உடன்படிக்கை” என்றான். இது ஒரு கருணையற்ற செயலாகக் காணப்பட்டாலும் இஸ்ரவேலர்கள் முடிவெடுக்க ஏழு நாட்கள் தவணை கேட்டனர்.

இந்த இக்கட்டான செய்தியை உடனடியாக கீலேயாத்திலிருந்து இஸ்ரவேலின் இராஜாவுக்கு சொல்ல ஸ்தானாபதிகளை அனுப்பினர். நாகாஸின் இத்துணிகரம் சவுல் அரசரின் தலைமைப் பதவிக்கு ஒரு சவாலாக அமைந்தது. உடனடியாக அவர் ஓரிணை மாட்டைப் பிடித்து, துண்டித்து, அந்த ஸ்தானாதிபதிகள் கையிலே கொடுத்து, இஸ்ரவேலின் நாடுகளுக்கெல்லாம் அனுப்பி சவுலின் பின்னாலேயும் சாமுவேலின் பின்னாலேயும் புறப்படாதவன் எவனோ, அவனுடைய மாடுகளுக்கு இப்படிச் செய்யப்படும் என்று சொல்லியனுப்பினான். இஸ்ரவேல் புத்திரரில் மூன்று லட்சம் பேரும், யுதா மனுஷரில் முப்பதினாயிரம்பேரும் பேசேக்கிலே கூடி அம்மோனியரை எதிர்ப்பதற்கு கீலேயாத் செல்ல திரண்டனர். “நாளைக்கு வெயில் ஏறுகிறதற்கு முன்னே உங்களுக்கு ரட்சிப்புக் கிடைக்கும்” என்று கீலேயாத்திலிருக்கிற யாபேசின் மனுஷருக்குச் சொல்லுங்கள் என்ற செய்தியை ஸ்தானாபதிகள் மூலம் அனுப்பினர். மறுநாளிலே சவுல் ஜனங்களை மூன்று படையாக வகுத்து, கிழக்கு வெளுத்து வரும் ஜாமத்தில் பாளயத்திற்குள் வந்து வெயில் ஏறும்வரைக்கும் அம்மோனியரை முறிய அடித்தான். தப்பின வர்களில் இரண்டு பேராகிலும் சேர்ந்து ஓடிப்போகாதபடி எல்லாரும் சிதறிப்போனார்கள் (1சாமு. 11:11). அம்மோனியருக்கு எதிரான யுத்தம் முற்றுப்பெற்றது. தேவன் அதிகாலமே அதிவேகமாக செயல்பட்டார்.

யோர்தானுக்குக் கீழ்ப்புறம் யாபேஸ் பட்டணம் அமைந்திருந்ததால் அம்மோனியனான நாகாஸ் அதனை அடிமைப்படுத்த எண்ணியிருப்பார். இஸ்ரவேலின் தேவன் வாக்குபண்ணப்பட்ட தேசத்தில் மாத்திரமே வாசம் பண்ணுகிறார் என்றும் ஆற்றின் கரைக்கு அப்பால் வசிக்கும் இரண்டரை கோத்திரங்களைப்பற்றி அவர் கவலைப்பட மாட்டார் என்றும் நாகாஸ் நினைத்திருக்கலாம். ஆனால் தேவன் எப்பொழுதும் சமீபத்திலேயே இருப்பார் என்ற வாக்கு தேவனுடைய பிள்ளைகளுக்கு உண்டு. “நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவோ?” (எரேமியா 23 : 24). தேவனுடைய பிரசன்னம் அவருடைய பிள்ளைகளுக்கு எப்பொழுதும் உண்டு. தேவனுடைய செயல்பாடுகளுக்குத் தொலைவில் அவர்கள் இருப்பினும் சாத்தானும் அவனுடைய கூட்டாளிகளும் தேவபிள்ளைகளுக்கு எதிராக எந்த ஒரு சூழ்ச்சியும் செய்ய இயலாது.

பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சால்மர் என்ற ஒரு ஸ்காட்லாந்து தேவ மனிதர் “நான் தெருவோரம் நடந்து சென்றாலும் அவர் என்னுடன் இருக்கிறார். தேவனை நான் மறந்து என் நண்பர்கள் மத்தியில் இருந்தாலும் அவர் என்னை ஒரு போதும் மறப்பதில்லை. நான் இமைகளை மூடி நித்திரை செய்தாலும், என் ஆத்துமா நினைவிழந்து இருந்தாலும் என்னை ஆராய்ந்தறியும் அவரது இமைகள் மூடாது. என்னைக் காக்கிறவர் உறங்குவதும் இல்லை தூங்குவதும் இல்லை. நான் செல்லும் இடத்துக்கு அவர் என்னை வழிநடத்துகிறார். என்னை காக்கிறார் என்னை கவனித்துக்கொள்ளுகிறார்” என்று எழுதியுள்ளார்.

நீங்களும் தேவனுடைய பிள்ளைகளில் ஒருவரானால், நீங்கள் கைவிடப்பட்டவராகவோ ஆதரவற்றவராகவோ தனிமையானவராகவோ எண்ண வேண்டாம். ஒரு காலத்தில் தேவனுடைய ஊழியங்களை அதிகமாய் செய்து, தற்பொழுது செய்வதற்கு வாய்ப்புகள் குறைவாக இருந்தபொழுதும், நாகாஸைப் போன்ற மனிதர்களின் எதிர்ப்புகளுக்கும் அஞ்சவேண்டாம். வாக்களிக்கப்பட்ட தேசத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களிடம் தேவன் ஆர்வம் காட்டியது போலவே, யோர்தானுக்கு அக்கரையில் வாழ்ந்த இரண்டரை கோத்திரங்களிடமும் தேவன் கரிசனையுள்ளவராய் இருந்தார். மற்றவர்களைப் போலவே தேவனுடைய பிரசன்னம் உங்களுக்கும் உண்டு. உங்கள் வாழ்நாள் முழுவதும் அவருடைய வாக்குறுதியைப் பற்றிக் கொள்ளுங்கள்.

அதிகாலைப் பாடல்:
நேசர் இயேசு என்னோடிருக்கும்பொழுது நான் தனித்துவிடேன்;
என் நண்பர்கள் கைவிட்டாலும் அவர் என்னைக் கைவிடமாட்டார்.
இருண்ட பாதையில் அவர் கரம் நடத்திச் செல்லும்; என்றாலும்,
இயேசு என்னோடிருக்குமிடமே துதியின் மாளிகையாகும்!

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை