நானா?
தியானம்: நவம்பர் 1 ஞாயிறு; வேத வாசிப்பு: யோவான் 6:61-71
“அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப் போனார்கள். அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார்” (யோவான் 6:66-67).
பல வருடங்கள் நண்பர்களாக இருந்த இருவரில் ஒருவன் திடீரென பிரிந்துவிட்டான். அவன் சொன்னது இதுதான்: “இதுவரையிலும் நம் இருவருடைய சிந்தனைகள், செயல்கள், தீர்மானங்கள் யாவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியே இருந்தன. நாங்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தோம். இப்போது அவன் மாறிவிட்டான். என்னோடு நேரம் செலவழிப்பதில்லை. களியாட்டங்களுக்கு வருவதில்லை. அவனது போக்கே மாறிவிட்டது. இந்த வாழ்வின் சந்தோஷங்களைத் தியாகம்பண்ணி அவனோடு நடக்க எனக்கு சம்மதமில்லை” என நட்பை முறித்துப் போட்ட அவன் கூறினான்.
ஒரு பையன் கொண்டுவந்த ஐந்து வாற்கோதுமை அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு இயேசு ஐயாயிரம் பேருக்கும் அதிகமான மக்களைப் போஷித்ததை மக்கள் கண்டனர் (யோவான் 6:1-14). அதை உண்டு பசி தீர்த்த அவர்கள்: மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றனர் (யோவா.6:14) அதுமாத்திரமல்ல, இயேசுவைத் தேடிக்கொண்டு படகுகளில் ஏறி கப்பர்நகூம் வரைக்கும் சென்றனர். எப்போது இங்கே வந்தீர் என்று ஆவலுடன் கேட்டனர். அந்த ஜனக்கூட்டம் எதற்காகத் தம்மைப் பின்தொடருகிறார்கள் என்பதை அறிந்திருந்த இயேசு, பிதாவின் சித்தத்தைச் செய்வது குறித்தும், ஜீவ அப்பத்தைக் குறித்தும், மனுஷகுமாரன் படப்போகிற பாடுகள், அடிக்கப்படப்போகிற சரீரம், சிந்தப்படப்போகிற இரத்தம் இவற்றைக்குறித்தும் பிரசங்கிக்கத் தொடங்கினார். நடந்தது என்ன? இது கடின உபதேசம் என்று சொல்லி சீஷரில் அநேகர் பின்வாங்கிப்போனார்கள். அப்படியானால் அன்று அவர்கள் இயேசுவைப் பின்பற்றியதன் நோக்கம் என்ன? இன்று நாம் இயேசுவைப் பின்பற்றுகின்ற நோக்கம் என்ன? நீயும் போய்விட மனதாயிருக்கிறாயா? என்று இயேசு நம்மிடமும் கேட்கிறார்.
“இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே. ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும். அப்பொழுது என் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப் போலும் இருக்கும்” (ஏசாயா 48:17,18).
இன்றைய சமுதாய அமைப்பில் இயேசு கற்பித்த பாதையில் அவரோடுகூட நடப்பதற்கு நமக்குக் கடினமாய்த் தெரிகிற வழிகள் எவை? இதனால் நாமும் பின்வாங்கிப் போய்விடுவேனா? சிந்திப்போம்!