அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (ஜூலை-ஆகஸ்டு 2016)
அத்தியாயம்-10
சகோ.M.S.வசந்தகுமார்

தமிழ் வேதாகமத்தின் வரலாறு

(1) சீகன்பால்க் மொழிபெயர்ப்பு

1714 ஆம் ஆண்டு, சுவிசேஷங்களும் அப்போஸ்தலர் நடபடிகளும் வெளியிடப்பட்டன. 1715 இல், புதிய ஏற்பாட்டின் மிகுதிப்பகுதிகள் அச்சிடப்பட்டன. சீகன்பால்க், ஸ்கிமிட் என்பவரின் மூல மொழி வேதாகமத்தையும், ஜெரோமின் லத்தீன் மொழிபெயர்ப்பு, மார்ட்டின் லூத்தர், ஓபன்பார்க் என்போரது ஜெர்மன் மொழிபெயர்ப்புகளையும் உபயோகித்து வேதாகமத்தை தமிழில் மொழி பெயர்த்திருந்தார். இதற்கு முன் வேதாகமம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிராதமையினால், கிறிஸ்தவ மார்க்கக் கருத்துக்களைத் தமிழில் எவ்வாறு எழுதுவது என்பது சீகன் பால்க்கிற்கு பெரும் சிக்கலாயிருந்தது. இவ்விஷயத்தில், ரோமன் கத்தோலிக்க மிஷன் தமிழில் வெளியிட்டிருந்த ஒரு சில புத்தகங்களே சீகன் பால்க்கிற்கு பெரிதும் உதவின. அவர், அக்கால ரோம சபை மிஷனரிகளைப் போலவே கடவுளுக்கு ‘சருவேசுவரன்’ எனும் பதத்தை உபயோகித்தார். தமிழில் முதன் முதலில் வேதாகமத்தை மொழி பெயர்த்த சீகன்பால்க் 1719 இல் மரணமடைந்தார். அச்சமயம், அவர் பழைய ஏற்பாட்டில் யோசுவாவின் புத்தகம் வரைக்கும் மொழிபெயர்த்திருந்தார். சீகன்பால்க் மரணமடைந்த வருடம் தரங்கம்பாடிக்கு மிஷனரியாக வந்த பெஞ்சமின் சூள்ட்ஸ் என்பவர், 1723 இல் பழைய ஏற்பாட்டின் மிகுதிப்பகுதியைத் தமிழில் மொழி பெயர்க்கத் தொடங்கினார். 1725இல் பெஞ்சமின் சூள்ட்ஸின் மொழிபெயர்ப்பு வேலைகள் பூர்த்தியடைந்தன. இவரது முயற்சி காரணமாக 1723 இல் ஆதியாகமம் முதல் நியாயாதிபதிகள் வரையிலான புத்தகங்களும், 1724 இல் சங்கீதப்புத்தகமும், 1726 இல் ரூத் முதல் உன்னதப்பாட்டு வரையிலான (சங்கீதம் தவிர்த்து) புத்தகங்களும், 1727 இல் ஏனையவையும் அச்சிடப்பட்டன. 40 வருடங்களாக, தமிழ் கிறிஸ்தவர்கள் சீகன்பால்க், சூள்ட்ஸ் என்போர் மொழிபெயர்த்த இவ்வேதாகமத்தையே உபயோகித்து வந்தனர்.

(2) பெப்ரீஷியஸ் மொழிபெயர்ப்பு

சீகன்பால்க் மொழிபெயர்த்த தமிழ் வேதாகமத்தின் மொழிநடை திருப்திகரமற்றது எனும் கருத்து மக்கள் மத்தியில் அதிகரித்தமையினால், அதைத் திருத்தி மொழிபெயர்க்க வேண்டியது அவசியம் என அநேகர் கருதினர். இதனால் ஜோஹான் பிலிப் பெப்ரீஷியஸ் என்பவர், சீகன் பால்க்கின் வேதாகமத்தைத் திருத்தி மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டார். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெப்ரீஷியஸ், 1740 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவிலுள்ள கடலூருக்கு மிஷனரியாகப் பணியாற்ற வந்தவராவார். 1742 இல், சென்னைக்குச் சென்ற இவர், மரிக்கும் வரை அங்கிருந்து இறைபணியாற்றினார். இவர் தன் ஊழியகாலத்தில் பலவிதமான பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்ததோடு, வயோதிப காலத்தில் பலதடவைகள் சிறைப்பட்டுமுள்ளார். மேலும், இவருடைய காலத்தில் ஏற்பட்ட பல யுத்தங்கள், பஞ்சம் என்பன இவரை வெகுவாகப் பாதித்தது. இவர் தனது துயர காலத்தில் பல கிறிஸ்தவப் பாடல்களையும் இயற்றியுள்ளார். இவர் தயாரித்த 9000 சொற்கள் கொண்ட ஆங்கில – தமிழ் அகராதி பிரபல்யமானதொன்றாகும்.

வேதாகமத்தின் மூலமொழிகளில் பட்டம் பெற்றிருந்த பெப்ரீஷியஸ் இந்தியாவுக்கு வந்து 7 மாதங்களிலேயே தமிழ் மொழியைக் கற்று தமிழில் பிரசங்கிக்கக்கூடியவரானார். பெப்ரீஷியஸ் 1752 இல் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். இவர் முழங்காலிலிருந்து வேதாகமத்தை மொழி பெயர்த்ததாகச் சொல்லப்படுகின்றது. சீகன்பால்க் இரு வருடங்களில் செய்த வேலையை பெப்ரீஷியஸ், இருபது வருடங்களாக மிகுந்த கவனத்துடனும் அதிக நுணுக்கமாகவும் நிதானமாகவும் செய்தார். பெப்ரீஷியஸ் தனது மொழி பெயர்ப்பைப் பலதரப்பட்ட மக்களுக்கும் வாசித்துக் காண்பித்து, அது சகலருக்கும் விளங்குகிறதா என்பதையும், மொழிபெயர்ப்புப் பற்றிய மக்களது கருத்துக்களையும் அறிந்து கொண்டார். இவரது புதிய ஏற்பாடு 1772 இல் தரங்கம்பாடியில் இருந்த கிறிஸ்து மார்க்க அபிவிருத்திச் சங்க அச்சகத்தில் அச்சிடப்பட்டது.

புதிய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்பு வேலைகள் முடிவடைந்தவுடன், பெப்ரீஷியஸ் பழைய ஏற்பாட்டையும் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்ததில் பெப்ரீஷியசுக்குக் கிடைத்த அனுபவம், பழைய ஏற்பாட்டைச் சிறப்பான முறையில் மொழிபெயர்க்க அவருக்கு உதவியது. அத்தோடு பெப்ரீஷியஸ் வேதாகமத்தின் மூலமொழிகளை நன்கறிந்திருந்தமையினால், அவரது மொழிபெயர்ப்பு மூலமொழியோடு இணங்கும் மொழிபெயர்ப்பாய் இருந்தது. அத்தோடு, பெப்ரீஷியசின் தமிழ்மொழிநடை சீகன்பால்க்கினுடையதைவிட சிறப்பானதாக இருந்தது. எனினும், சொற்களைப் பொறுத்தவரை பெப்ரீஷியஸ் சீகன் பால்க்கின் மொழிபெயர்ப்பிலுள்ள பதங்களையே உபயோகித்துள்ளார்.

சீகன்பால்க் கடவுளுக்கு உபயோகித்த சருவேசுவரன் எனும் பதத்திற்குப் பதிலாக பெப்ரீஷியஸ், “பராபரன்” எனும் பதத்தைத் தன்னுடைய மொழிபெயர்ப்பில் உப யோகித்திருந்தார். இது, அக் காலத்தில் பொதுவழக்கில் இருந்த ஒரு பதம் அல்ல. தாயுமானவர் எனும் சைவசமயப் புலவரது பாடல்களிலேயே இப்பதம் உபயோகிக்கப்பட்டிருந்தது.

(தொடரும்)