பாடுகளிலும் நம்பிக்கை!
தியானம்: செப்டம்பர் 1 வியாழன்; வேத வாசிப்பு: 1பேதுரு 5:1-11
“இரட்சிப்பு கர்த்தருடையது. தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக” (சங். 3:8).
ஒரு வீட்டின் முன்னால் ஒரு பிளாஸ்டிக் பொருள் கட்டித் தொங்கவிட்டிருப்பதைக் கண்ட பிள்ளைகள் அதை அடித்து உடைத்து விளையாடினர். இதைக் கவனித்த ஒருவர், அந்த வீட்டுக்காரரிடம் பிள்ளைகள் அதை உடைப்பதாகச் சொன்னார். அதற்கு அவர், “என்னால் உடைக்கமுடியாததை அவர்கள் உடைக்கட்டும் என்றுதான் விட்டுவிட்டேன். பின்னர் அதை நான் வேறு உபயோகத்திற்காகப் பயன்படுத்தமுடியும்” என்றார்.
“கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடனுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலை நிறுத்துவாராக (வச10) என்று பேதுரு எழுதியதை இன்று வாசித்தோம். முதலாவது தேவபிள்ளைகளாகிய நாம் அறிந்துகொள்ளவேண்டியது, நாம் இவ்வுலக சந்தோஷத்துக்கோ அல்லது இவ்வுலகத்தில் நித்தியமாய் வாழுவதற்கோ அழைக்கப்படவில்லை; மாறாக, தேவனுடைய நித்திய மகிமைக்காகவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இந்த அழைப்புக்குத் தகுதிப்படும்படிக்கு உடைக்கப்படவேண்டிய நேரங்களும், காயப்படவேண்டிய தருணங்களும் நமது வாழ்விற்கு அவசியமாகிறது. அதன் மூலமாகவே தேவன் நம்மை ஸ்திரப்படுத்திப் பலப்படுத்தி நிலைநிறுத்துகிறார். அது நமக்குக் கடினமான காலமாக இருக்கலாம்; நமது உணர்வுகள் அசைக்கப்படும் நேரமாகவும் இருக்கலாம்.
இவ்விதமாக அசைக்கப்பட்ட உடைக்கப்பட்ட காலங்களுக்கூடாக நாம் சென்றிருக்கிறோமா? ‘இனி வாழ்ந்தென்ன லாபம்’ என்று நம்பிக்கையிழந்து நின்றிருக்கிறோமா? தவறு செய்து தண்டிக்கப்படுகிற வேளைகளைவிட, தவறே செய்யாமல் தண்டிக்கப்படும்போது ஏற்படும் வலி கொடுமையானது. அப்படியான தருணங்களை நாமும் கடந்துவந்திருக்கலாம். எது நிகழ்ந்தாலும் நமது நம்பிக்கையைத் தளரவிடக்கூடாது. அவர் நம்மை விசாரிக்கிறவராகையால் நமது கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுவதே நாம் செய்யக்கூடிய காரியமாய் இருக்கிறது. ஆகையால் சோர்ந்துபோகாமல் கர்த்தருக்குள் பெலன் கொண்டு எல்லாச் சூழ்நிலைகளையும் தைரியமாய் எதிர்கொள்வோம். நாம் உடைக்கப்பட்டு நொறுக்கப்பட்டு கர்த்தருக்கு உகந்தவர்களாய் வனையப்பட நம்மை நம்பிக்கையோடு அவரது கரங்களில் ஒப்புக்கொடுப்போம். தேவனே நம்மை உருவாக்குகிறவர்.
“என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலிப்பியர் 4:13).
ஜெபம்: அன்பின் பிதாவே, நாங்கள் சோர்ந்துபோன நேரங்களில், சரீர பெலன் குன்றிப்போன தருணங்களில், நீர் எங்களைப் பெலப்படுத்தியதை நினைத்து உம்மை ஸ்தோத்தரிக்கிறோம். ஆமென்.