தரிசனமா அல்லது விசுவாசமா?

அதிகாலை வேளையில்… (செப்டம்பர்-அக்டோபர் 2016)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: நியாயாதிபதிகள் 6:16-40
அப்படியே ஆயிற்று. அவன் மறுநாள் காலமே எழுந்திருந்து, தோலைக் கசக்கி, அதிலிருந்த பனிநீரை ஒரு கிண்ணம் நிறையப் பிழிந்தான் (நியா.6:38).

இஸ்ரவேல் நாட்டை முன் நடத்திச் செல்ல ஒரு தலைவர் இல்லாததால் அதைரியமிழந்து ஒரு பரிதாப நிலையில் இருந்த நாட்டை இரட்சிப்பதற்கு ஒரு பராக்கிரமசாலி தேவைப்பட்டார். தேவன் தமது மனிதன் ஒருவரை அப்பணிக்கெனத் தெரிந்தெடுத்தார். கர்த்தருடைய தூதனானவர் கிதியோனுக்கு தரிசனமாகி தேவ தரிசனத்தையும் வல்லமையும் உறுதிப்படுத்தி அவரைத் தைரியப்படுத்தினார். அந்தத் தைரியத்தில் கிதியோன் பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்துப் போட்டார். மேலும் இஸ்ரவேல் நாடு முழுவதும் உள்ள விக்கிரக ஆராதனையையும் ஒழித்துப்போட்டார். ஓப்ராவில் யெகோவா தேவன் மாத்திரமே ஆராதிக்கப்பட்டார். கிதியோனின் புகழ் இஸ்ரவேல் நாடு முழுவதும் பரவியது. எனவே இஸ்ரவேல் மக்கள் அனைவரும் கிதியோனைப் பின்பற்றலாம் என்பது தெளிவாக விளங்கிற்று.

மீண்டும் மீதியானியர் அமலேக்கியரும் கிழக்கத்திப் புத்திரர் யாவரும் யுத்தத்துக்குப் புறப்பட்டு வந்தனர். கிதியோன் இந்த போருக்கு ஆயத்தமாயிருந்தார். “கர்த்தருடைய ஆவியா னவர் கிதியோன்மேல் இறங்கினார்;  என்று நியாயாதிபதிகள் 6: 34 கூறுகிறது. அதாவது யெகோவாவின் ஆவி கிதியோனை ஓர் ஆடையைப் போல மூடிற்று என்று இது பொருள்படும். ஒரு காலத்தில் தைரியமிழந்து மனத்தளர்ச்சி அடைந்திருந்த ஓர்பாவின் அந்த இளம் விவசாயி தேவனுடைய ஆவியின் ஆயுதங்களை அணிந்தவராய் அப்போருக்கு ஆயத்தமானார். அவர் எக்காளத்தை ஊதிய பொழுது அபியேசர் குடும்பத்தினர் அவரைப் பின்பற்றினர். நாடு முழுவதும் அவர் தூதுவர்களை அனுப்பினார். நப்தலி, செபுலோன், ஆசேர் மற்றும் மனாசே குடும்பத்தினரும் அவரைப் பின்பற்றி யுத்தம் செய்ய ஆயத்தமாயினர்.

ஒரு பெரிய யுத்தத்துக்கு அனை வரும் தயாராயிருந்தனர். ஆனாலும் கிதியோனை ஒரு காரியம் கலங்கச் செய்தது. அவர் தேவனிடம் ஓர் அடையாளத்தைக் கேட்டார். இவ்வாறு அடையாளத்தைக் கேட்பது யூதர்களின் ஒரு பண்பு ஆகும் (1 கொரி.1: 22). இராணுவம் யுத்தத்துக்கு அணி வகுத்து நிற்கும்பொழுது, கிதியோன் ஓர் ஆட்டுக் கம்பளியைத் தரையில் விரித்து வைத்து, தேவனை நோக்கி, “கம்பளிமேல் மட்டும் பனி இறங்கி இருந்து. தரைமுழுவதும் காய்ந்திருந்ததேயானால், நீர் கூறியபடி என் மூலம் இஸ்ரவேலை நீர் விடுவிப்பீர் என அறிந்து கொள்வேன்” என்றார். பாலஸ்தீன மேட்டுப் பகுதியில் பயங்கரமான பனியைக் காண்பது மிகச் சாதாரணமான ஒரு காரியம். இன்றும் இரவில் வெளியே விட்டுவிடப்படும் துணிகளில் படிந்திருக்கும் பனியைப் பிழிந்துதான் எடுக்க வேண்டும். தேவனிடமிருந்து அந்த அடையாளத்தை எதிர்பார்த்து இஸ்ரவேல் சேனை இராமுழுவதும் காத்திருந்தது.

கிதியோன் மறுநாள் காலமே எழுந்திருந்து, தோலைக் கசக்கி, அதிலிருந்த பனிநீரை ஒரு கிண்ணம் நிறையப் பிழிந்தான் (நியா.6:38). என்று வேதபுத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. ஆம், அவர் கேட்ட அடையாளம் நிறைவேறியது. ஆயினும் கிதியோன் திருப்தியடையாது தேவனுடைய கிருபையையும் பொறுமையையும் மீண்டும் சோதித்தார். அந்த அடையாளத்தை மாற்றிக் கேட்டார்.

மற்றொரு இரவையும் இஸ்ரவேல் சேனை காத்திருப்பதில் செலவிட்டது. மறுநாளில் தோல்மாத்திரம் காய்ந்திருந்தது, பூமியெங்கும் பனி பெய்திருந்தது. இந்த யுத்தத்தில் தேவன் கலந்து கொள்கிறார் என்றும் அவர் தெரிந்து கொண்ட தலைவர் கிதியோன் என்பதற்கு இது சிறந்த சாட்சியாக அமைந்தது.

அநேகவேளைகளில் தீர்மானம் எடுக்க இயலாமையையும் தைரியமின்மையையும் நாம் மறைப்பதற்கு “கம்பளியைத் தரையில் விரிப்பதைப்” போன்று அடையாளத்தைக் கேட்டு செயல்படுகின்றோம். இத்தகைய எதிர்பார்ப்பு அனைத்து வேளையிலும் வியப்புக்குரியதாகவோ விரும்பும் விளைவுகளையும் தராது. ஜான் வெஸ்லி தனது 32ம் வயதில் ஜார்ஜியா மாகாணத்தில் அருட்பணி யாளராக இருந்தபொழுது அவர் ஓர் இளம்பெண்ணை நேசித்து அவரை திருமணம் செய்துகொள்ளவும் விரும்பினார். அவரது சில நண்பர்கள் அவர் திருமணம் செய்துகொள்ளாமல் ஊழியம் செய்வதில் தனது காலத்தைச் செலவிட ஆலோசனை கூறினர். தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ள சீட்டுப்போட்டுப் பார்க்கவும் சிலர் கூறினர். எனவே அவர் மூன்று துண்டு சீட்டுகளில் தனித்தனியே “திருமணம் பண்ணலாம்” என்றும், “இந்த ஆண்டு அது வேண்டாம்” என்றும், மூன்றாவது சீட்டில் “திருமணத்தைப் பற்றி எண்ணவே வேண்டாம்” என்றும் எழுதப்பட்டது.

வெஸ்லி ஒரு சீட்டை எடுத்தார். அதில் ‘திருமண எண்ணம் வேண்டாம்’ என்று எழுதப்பட்டிருந்தது. இருதயம் உடைந்தவராக அவர் அப்பெண்ணுடனான அவ்வுறவை முடித்துக்கொண்டார். 15 ஆண்டுகள் கழித்து அவர் ஒரு பணக்கார விதவையை மணம்புரிந்தார். ஆனால் அப்பெண்மணி அவரது ஊழியத்துக்கு பெருந்தடையாக இருந்தார். துக்கமான 20 ஆண்டுகளின் மணவாழ்வுக்குப் பிறகு அப்பெண் அவரைவிட்டுப் பிரிந்துவிட்டார். வெஸ்லி தனது எதிர்காலத்தை ‘கம்பளியைத் தரையில் விரித்து’ அடையாளம் கேட்டார்.

தேவன் தமது அளவுநிலைகளை உருவாக்கும்பொழுது, சூழ்நிலைக்குத் தகுந்தவாறு நம்மைத் தைரியப்படுத்தி செயல்படுத்த அழைக்கிறார். கம்பளித்துணியை விரித்து அடையாளம் கேட்கும் தவறுக்கு நம்மை ஆளாக்கிக்கொள்ள வேண்டாம். தனது கம்பளித்துணியால் அடையாளம் கேட்பதற்குப் பதிலாக அவர் ஆபிரகாமின் விசுவாசத்தை எண்ணி யிருக்கவேண்டும்.

நீங்கள் எதனை நம்பியிருக்கிறீர்கள்? அடையாளத்தையா அல்லது விசுவாசத்தையா?

அதிகாலைப் பாடல்:

உம்மையே நான் நம்புவேன்; இயேசுவே
பெரிதும் இலவசமுமான முழு இரட்சிப்புக்கும்
உம்மை மாத்திரமே நான் நம்புவேன்.
நீரே என்னை வழிநடத்த நம்புவேன்;
நீர் மாத்திரமே என்னை நடத்திச் செல்லுவீர்,
ஒவ்வொரு நாளும் அனைத்து நேரமும்
என் தேவை எல்லாம் நீர் சந்திப்பீர்!

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை