அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்
புனித வேதாகமத்தின் வரலாறு (செப்டம்பர்-அக்டோபர் 2016)
அத்தியாயம்-10
சகோ.M.S.வசந்தகுமார்
தமிழ் வேதாகமத்தின் வரலாறு
(2) பெப்ரீஷியஸ் மொழிபெயர்ப்பு
சீகன்பால்க் கடவுளுக்கு உபயோகித்த சருவேசுவரன் எனும் பதத்திற்குப் பதிலாக பெப்ரீஷியஸ், “பராபரன்” எனும் பதத்தைத் தன்னுடைய மொழிபெயர்ப்பில் உபயோகித்திருந்தார். இது, அக்காலத்தில் பொது வழக்கில் இருந்த ஒரு பதம் அல்ல. தாயுமானவர் எனும் சைவ சமயப் புலவரது பாடல்களிலேயே இப்பதம் உபயோகிக்கப்பட்டிருந்தது.
இவர், பராபரக் கண்ணிகள் என்ற 389 பாடல்களைப் பாடியவராவார். இப்பாடல்களில் இந்துசமயக் கருத்துக்கள் அதிகம் புகுத்தப்படவில்லை. எனினும் இவை பக்திரசம் மிகுந்த பாடல்களாகும். இப்பாடல்கள் ஒவ்வொன்றும் பராபரமே என முற்றுப் பெற்றன. இப்பதம், இந்துமதத் தெய்வமான சிவபெருமானுடன் அதிகமாகச் சேர்த்து உபயோகிக்கப் படாதமையினால், கடவுளைக் குறிக்க பொதுவான பெயராக இருக்கக்கூடியது என தரங்கம்பாடியிலிருந்த ஏர்னஸ்ட் வோல்ட்டர் எனும் மிஷனரி கண்டுகொண்டார். இதனால், தரங்கம்பாடியிலிருந்த மிஷனரிகள் கடவுளைக் குறிக்க பராபரன் எனும் பதத்தையே உபயோகித்தனர்.
மேலும், அக்காலத்தில் தமிழ் நாட்டில் இருந்த ரோமன் கத்தோலிக்க மிஷனரியான கொன்ஸ்டன்டைன் பெஸ்கி, சீகன்பால்க்கின் வேதாகம மொழிபெயர்ப்பு தரம் குறைவானது என ஏளனம் செய்தமையினால், தங்களை ரோமன் கத்தோலிக்க மிஷனரிகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக, தரங்கம்பாடியிலிருந்த புரட்டஸ்தாந்து சபை மிஷனரிகள், ரோமன் கத்தோலிக்க மிஷனரிகள் உபயோகித்த சருவேசுவரன் எனும் பதத்தை விடுத்து பராபரன் எனும் பதத்தை உபயோகிக்கத் தொடங்கியதாகவும் சொல்லப்படுகின்றது. பெப்ரீஷியசும் இப்பதத்தையே தனது மொழி பெயர்ப்பில் உபயோகித்திருந்தார்.
பெப்ரீஷியஸ் மொழிபெயர்த்த பழைய ஏற்பாடு, பகுதி பகுதியாகவே வெளியிடப்பட்டது. 1777 இல், ஆதி யாகமம் முதல் நியாயாதிபதிகள்வரையிலும், 1782 இல், ரூத் முதல் யோபு வரையிலும், 1791 இல் சங்கீதங்கள் முதல் உன்னதப்பாட்டு வரையிலும் அச்சிடப்பட்டன. அவ்வருடம் பெப்ரீஷியஸ் மரணமடைந்தார். பழைய ஏற்பாட்டில் அவர் மொழிபெயர்த்திருந்த தீர்க்கதரிசனப் புத்தகங்கள் 1796ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பெப்ரீஷியஸ் தமிழ் மொழிபெயர்ப்பு 1813 இல் வில்லியம் கேரியினாலும் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் வெளிவந்துள்ள வேதாகமங்களில் பெப்ரீஷியஸ் மொழி பெயர்ப்பே சிறந்ததாகக் கருதப்படுகின்றது. பிற்காலத்தைய திருத்தப் பதிப்புகளுக்கெல்லாம் இம்மொழி பெயர்ப்பே அடிப்படையாய் அமைந்தது.
பெப்ரீஷியஸ், சீகன்பால்க்கின் மொழிபெயர்ப்பில் காணப்பட்ட குறைகளையெல்லாம் நீக்கி, சிறப்பாக வேதாகமத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருந்தார். பிற்காலத்தில் இம்மொழிபெயர்ப்பு சில திருத்தங்களுக்குட்பட்ட போதிலும், அதன் உள்ளடக்கம் இன்றுவரை மாற்றமடையாமலேயே உள்ளது. இம்மொழிபெயர்ப்பில் வடமொழிச் சொற்கள் அதிகம் என்பதே இதற்கெதிராகக் கொண்டுவரப்பட்ட ஒரே ஒரு குற்றச்சாட்டாகும். இதைத்தவிர, இது பொன்மொழி பெயர்ப்பு என பலராலும் புகழப்பட்டுள்ளது. பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பு இன்று உபயோகத்தில் இல்லாதபோதிலும், இதற்குப் பின்னர் வெளிவந்த மொழிபெயர்ப்புகளில் புகுந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. பிற்கால மொழி பெயர்ப்புகள் பெப்ரீஷியசின் மொழி பெயர்ப்பின் திருத்தப்பதிப்புகளாகவே இருக்கின்றன. 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தென்னிந்தியாவில் பணியாற்றிய மிஷனரிச் சங்கங்கள் ஒவ்வொன்றும், பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பைச் சிறிது திருத்தி மொழிபெயர்த்து உபயோகித்தன.
(3) ரேனியஸ் மொழிபெயர்ப்பு
1820 ஆம் ஆண்டு சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட வேதாகமச் சங்கம், பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பைத் திருத்தி மொழிபெயர்க்கத் தீர்மானித்தது. பெப்ரீஷியசின் மொழி பெயர்ப்பு வெளிவந்து 50 வருடங்களாகிவிட்டமையினால் அதன் மொழிநடை மாற்றப்பட வேண்டிய தன் அவசியத்தைச் சென்னை வேதாகமச் சங்கம் உணர்ந்தமையே இதற்கான காரணமாகும். மேலும், அக்காலத்தில் தமிழ்நாட்டில் பணியாற்றிய மிஷனரி சங்கங்கள் ஒவ்வொன்றும், தத்தமது விருப்பப்படி பெப்ரீஷியசின் மொழிபெயர்ப்பைத் திருத்திவந்தமையினால், சகல கிறிஸ்தவர்களும் உபயோகிக்கக் கூடிய தனி ஒரு மொழிபெயர்ப்பு இருக்கவேண்டும் என எண்ணிய சென்னை வேதாகமச் சங்கம், அத்தகு ஒரு மொழிபெயர்ப்பைத் தயாரிக்கும் பொறுப்பை சார்ள்ஸ் ரேனியஸ் என்பவரிடம் ஒப்படைத்தது.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சார்ள்ஸ் ரேனியஸ், 1814ஆம் ஆண்டு ஜுலை மாதம் 4 ஆம் தேதி இந்தியாவுக்கு வந்து அங்கிருந்த சபை மிஷனரி சங்கத்தில் சேர்ந்து பணிபுரியத் தொடங்கினார். இவர் தமிழ் மொழியைத் திறம்பட கற்க விரும்பியவராய், திருப்பாற் கடல நாதன் கவிராயர் எனும் கல்வி மானிடம் 14 வருடங்களாகத் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். தமிழ் மொழியில் சிறப்பான முறையில் பிரசங்கிக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றிருந்த ரேனியஸ், பல தமிழ் நூல்களையும் எழுதியுள்ளார். தமிழ் மொழியில் முதன் முதலில் பூமிசாஸ்திரப் பாடப்புத்தகம் இவராலேயே எழுதப்பட்டது. இவர் தமிழ் இலக்கண நூல் ஒன்றையும் எழுதியுள்ளார்.
(தொடரும்)