முதலாவதாகத் தேடுவது
தியானம்: ஜனவரி 2 திங்கள்; வேத வாசிப்பு: 1இராஜாக்கள் 3:1-14
“உன் வார்த்தைகளின்படி செய்தேன். …இதுவுமின்றி, நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்” (1 இராஜா. 3:12,13).
“நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியையை செய்கிற வல்லமையின்படியே நமக்குச் செய்யவல்லவர்…” (எபே.3:20) என்று தேவனைக் குறித்து நாம் தைரியம் கொண்டிருந்தாலும், நாம் முன்னெடுக்கவேண்டிய மிகவும் முக்கிய படிகள் உண்டு. சாலொமோனின் வாழ்க்கைக்கூடாக அதனை நாம் காணலாம்.
தாவீதுக்குப் பின்னர், சாலொமோனின் கையிலே ராஜ்யபாரத்தைக் கர்த்தர் ஸ்திரப்படுத்தினார் (1இராஜா.2:12). சாலொமோன் கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்தான். தகப்பன் கட்டளைகளில் நடந்தான். தேவசமுகத்தை நாடி தேவனுக்குப் பலியிட்டான். தன் ஸ்திரமான ஆட்சியைப் புகழ்ந்து பெருமைபாராட்டாமல், முதலாவது தேவனை நாடி கிபியோனிலே சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான். இந்த சாலொமோனுக்குக் கர்த்தர் சொப்பனத்திலே தரிசனமானார். “நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள்” என்றார். சாலொமோன் கேட்பதற்கு பல காரியங்கள் இருந்தன. ஆனால், அவனோ, “நான் போக்குவரவு அறியாத சிறு பிள்ளையாயிருக்கிறேன்” என்று தன்னை முதலில் தாழ்த்தினான். பின்னர் புகழ், மேன்மை, ஐசுவரியம் எதையும் கேட்காமல், “உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும் அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்” (வச.9) என்று கேட்டான். அது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது. கர்த்தரோ, அவன் கேட்ட ஞானத்தைக் கொடுத்ததுமன்றி, கேளாத ஐசுவரியத்தையும், மகிமையையும் கொடுத்து ஆசீர்வதித்தார். சாலொமோன் தனது வாழ்க்கையில் முக்கியமானதும் முதலாவதுமாக, கர்த்தரைத் தேடினான்; கர்த்தருக்கு உகந்த காரியத்தைத் தேடினான். கர்த்தர், அவன் கேட்டதற்கும் மேலான ஆசீர்வாதத்தைக் கொடுத்தார்.
இவ்வருடத்திற்கான திட்டங்களை நாம் வகுத்து, செயற்படுத்தவும் ஆரம்பித்திருக்கலாம். நல்லது. ஆனால், இதற்கும் மேலாக முக்கியமாகவும் முதன்மையாகவும் நாம் தேவனையும், அவருடைய இராஜ்யத்தையும் தேட நமது இருதயத்தைத் திருப்புவோமாக. அப்பொழுது, தேவன் நாம் கேட்பவற்றை மாத்திரமல்ல, நாம் கேளாத பெரிய காரியங்களையும் நிச்சயம் செய்வார்.
“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகள் எல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” (மத்தேயு 6:33).
ஜெபம்: ஆண்டவரே, கடந்த ஆண்டில் நாங்கள் சந்தித்த தோல்விகளுக்குக் காரணத்தை அறிந்துகொண்டவர்களாய், இப்புதிய ஆண்டில் முதலாவதும் முக்கியமானதுமாகிய உம்மையேத் தேட எங்களை அர்ப்பணிக்கிறோம். ஆமென்.