நிதானமற்ற பேதுரு

தியானம்: 2018 ஏப்ரல் 17 செவ்வாய்; வேத வாசிப்பு: யோவான் 21:15-19

“அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களை மாத்திரமல்ல, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவவேண்டும் என்றான்”
(யோவான் 13:9).

பச்சை சமிக்ஞை வரமுன்பதாக வீதியைக் கடக்க அவசரப்பட்ட ஒருவர், சீறிவந்த வாகனத்தைக் கண்டு பின்நோக்கி நகர்ந்தார். வாகன ஓட்டுநர் அவசர சத்தம் எழுப்ப, மீண்டும் அவர் முன்நோக்கி ஓடினார். இப்படியே சிறிது நேரம் நாற்சந்தியில் நின்று தடுமாறிய அவர் அனைவரின் திட்டையும் வாங்கிக் கொண்டார். இவர் தனது வழியில் நிதானமற்றவராகக் காணப்பட்டார்.

பேதுருவும், தான் என்ன செய்கிறேன், எதைப் பேசுகிறேன், யாரோடு பேசுகிறேன் என்று சிந்திக்காத ஒருவர்தான். அவசரப்பட்டுப் பேசுவதும், முந்திக்கொண்டு கேள்விகள் கேட்பதும், பதிலளிப்பதும், சமயத்தில் இயேசுவையே கடிந்துகொள்வதுமாக இருந்த ஒருவர். இவர் நிதானமற்றவராக இருந்ததால் இவரைத்தான் சாத்தான் புடைக்கப்போகிறான் என்பதை அறிந்த ஆண்டவர், சோதனைக்குட்படாதபடிக்கு சோர்ந்துபோகாமல் ஜெபிக்கும்படிக்கும் கற்றுக் கொடுத்தார். கடைசியில் ஆண்டவரைப் பிடித்தபோது அனைவரும் சிதறியோடிய போதும், ஆண்டவரைப் பின்தொடர்ந்து போனான் பேதுரு. ஆனால், இயேசுவுக்கு ஆதரவாக இருப்பதைவிட்டு, அவரை மறுதலித்துவிட்டான். பின்னர், இயேசுவின் பார்வையால் தன் குற்றத்தை உணர்ந்து அழுதான்.

இவ்விதமாக நிதானமற்றவனாய் இருந்ததால்தான், ஆண்டவர் மரித்துவிட்டார் என்றதும் பழைய தொழிலுக்கு முந்திக்கொண்டு புறப்பட்டான். அவனை மீண்டும் கடலிலிருந்து வெளிக்கொணர்ந்த ஆண்டவர், அவனுக்கு நிதானத்தை கற்றுக்கொடுத்தார். “நீ என்னை நேசிக்கிறாயா” என்று மூன்று தடவைகள் ஆண்டவர் மீண்டும் மீண்டும் கேட்டு, அவனது வாயினால் உறுதிப்படுத்திக் கொண்டு, அதன்பின்புதான் அவனது பணியைக் குறித்துப் பேசுகிறார்.

தேவனுக்குப் பணிசெய்யும் நமக்குள்ளும் இருக்கவேண்டியது ஆண்டவரிலுள்ள அன்புதான். அதன் அடிப்படையிலேயே பணியும் இருக்கவேண்டும். அன்புள்ளவன்தான் அவரது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவான்; அவன்தான் உண்மைத்துவமாய் நடந்துகொள்வான். நாம் அவரின் கற்பனைகளுக்கு உண்மைத்துவமாய் இருந்து பணியாற்றும்போதுதான், அந்தப் பணி தேவனுடைய பார்வையில் அங்கீகாரம் பெறும். அதைவிட்டு நிதானமற்று வாழுவோமானால் சகலத்தையும் இழந்துபோகவும் நேரிடக்கூடும்.

“நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்” (யோவான் 15:10).

ஜெபம்: அன்பின் தேவனே, நிதானமற்று நடந்த சமயங்களுக்காகவும் அதினால் உண்டான விளைவுகளுக்காகவும் நான் வருந்துகிறேன். இனி என் வாழ்வில் நிதானத்தைக் கற்றுக்கொள்ள உதவியருளும். ஆமென்.