ஆசிரியரிடமிருந்து…

(ஜூலை – ஆகஸ்டு 2018)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்விதழின் வாயிலாக தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். நமது தேசத்திலும் தமிழகத்திலும் கலவரங்கள், போராட்டங்கள் மேலும் வேலை நிறுத்தங்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றங்கள் இதுபோன்ற பல்வேறு சூழ்நிலைகளாலும் அமைதலற்ற நிலையைப் பார்க்கிறோம். திருச்சபைகளுக்குள் இருக்கும் பிரச்சனைகள் நிமித்தமாக புறஇனமக்கள் மத்தியில் இருக்கிற அதிருப்தி, கிறிஸ்தவ ஸ்தாபனங்கள், சபைகளுக்குள் காணப்படும் ஐக்கிய குலைவுகள் இவை எல்லாவற்றிற்காகவும் கர்த்தருடைய பிள்ளைகள் ஒரு மனதோடு கர்த்தருடைய சமுகத்தில் அதிக பாரத்தோடு ஜெபிக்க கடமைப்பட்டுள்ளோம்.

அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் அநேகருக்கு  ஆசீர்வாதமாயிருப்பதை அவர்கள் எழுதிய சாட்சி கடிதங்கள் வாயிலாக அறிந்து தேவனைத் துதிக்கிறோம். அட்டவணையைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக வேதாகமத்தை படித்து வருகிறவர்களுக்காகவும் ஜெபிக்கிறோம். சத்தியவசன வானொலி தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்கு ஜெபத்தோடு ஆதரவளித்த யாவருக்காகவும் கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறோம். தாங்கள் அளித்துவரும் ஆதரவினால் தேவன் இவ்வூழியத்தின் தேவைகளைச் சந்தித்து வருகிறார். இவ்வருடத்தில் பங்காளர் காணிக்கையைப் புதுப்பிக்காத பங்காளர்களும் சந்தாவைப் புதுப்பித்து தொடர்ந்து ஜெபத்தோடு தாங்கிவர அன்பாய் கேட்கிறோம்.

இவ்விதழின் ஜூலை மாதத்தில் அருமை ஆண்டவர் எவ்வளவாய் தம்முடைய ஜனத்திற்காக பரிதபிக்கிறார் என்றும், தூரம்போன தமது ஜனத்தை மீண்டும் சேர்த்துக்கொள்ள ஆவலுள்ளவராயிருக்கிறார் என்பதை சகோதரி சாந்திபொன்னு அவர்கள் ஒசியா தீர்க்கதரிசி புத்தகத்திலிருந்து தியானங்களை எழுதியுள்ளார்கள். ஆகஸ்டு மாதத்தில் சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் கடைசி காலத்தில் வாழும் மனிதர்களின் நிலை எப்படிப்பட்டதாய் இருக்கும், நமது ஜீவியத்திலே கிறிஸ்துவின் அன்பை நாம் வெளிப்படுத்த வேண்டிய முக்கியத்துவத்தைக்குறித்தும் தியானங்களை தொகுத்து வழங்கியுள்ளார்கள். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபியுங்கள். இத்தியானங்கள் உங்களுக்கு ஆசீர்வாதமாய் இருப்பதாக!

கே.ப.ஆபிரகாம்

சத்தியவசனம்