கட்டப்பட்டிருந்தவன்

தியானம்: 2018 ஆகஸ்டு 11 சனி; வேத வாசிப்பு: மாற்கு 5:1-10

அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான் (மாற்கு5:2).

பாவத்திலும், வியாதியிலும், பலவிதமான காரியங்களாலும் கட்டப்பட்டவர்களாய் அநேகர் நமது கண்கள் முன்னே நடமாடித் திரிகின்றனர் என்பதை மறுக்க முடியுமா? கழுத்தில் பட்டியிடப்பட்டு அதில் சங்கிலியினால் தொடுக்கப்பட்டு கட்டப்பட்டிருந்த நாயொன்று, சங்கிலி கழற்றப்பட்டு விடுவிக்கப்பட்டபோதும், கழுத்தில் பட்டியிருந்ததால் தான் இன்னமுமே கட்டப்பட்டிருப்பதாக எண்ணிக்கொண்டு அவ்விடத்திலேயே படுத்துக்கிடந்தது. இதே நிலைதான் இன்று நம்மில் பலருக்கு. ஆண்டவரினால் நாம் விடுதலையாக்கப்பட்டிருப்பதைக்கூட உணரமுடியாதவர்களாக இன்னமும் பாவத்திலும் பெலவீனத்திலும் கட்டப்பட்டவர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இங்கே இந்த மனிதன் இயேசுவைக் கண்டு பிரேதக் கல்லறையிலிருந்து வருவதைக் காண்கிறோம். பொதுவாக மரித்தவர்கள்தான் பிரேதக் கல்லறையில் இருப்பார்கள். இவனும் பிசாசினாலும், பாவத்தினாலும், மனிதரினாலும் கட்டப்பட்டவனாய் கிட்டத்தட்ட மரணத்தருவாயிலேயே இருந்தவன். இயேசுவின் சீடனான யூதாசை பிசாசானவன் ஆக்கிரமித்தான்; பின்னர் இயேசுவைக் காட்டிக்கொடுக்கும்படிக்கு மனிதரும் அவனை தூண்டுவதைக் காண்கிறோம். தாவீது பத்சேபாளிடத்தில் பாவத்தில் விழுந்தபோது, பத்சேபாளின் கணவன் உரியாவைக் கொன்று தன் பாவத்தை மறைத்துவிடலாம் என்று தாவீது சிந்தித்தான். நாம் பாவத்தில் விழும்போது நமக்காகப் பரிதபித்துத் தூக்கிவிடவும் மக்களுண்டு; அதேவேளை நம்மை இன்னமும் அதேபாவத்தில் தள்ளிவிட்டு கட்டிப்போடவும் மனிதர் உண்டு. நாம் மிகவும் ஜாக்கிரதையாய் நடந்துகொள்ள வேண்டும். நாம் யாரிடம் ஆலோசனை பெறச் செல்லுகிறோம்? யார் நம்மீது உண்மையான கரிசனையாய் இருக்கிறார்கள் என்பதில் நாம் நிதானம் இழந்துபோவோமானால் நாம் தொடர்ந்து கட்டப்பட்டவர்களாகவே இருப்போம்.

நம்மைப் பாவத்தில் கட்டிவைத்து நமது மூலமாக லாபமடைவோர் வாழும் சமுதாயத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை மறந்துபோக வேண்டாம். இயேசுவைப்போல நம்மைக் கட்டவிழ்த்துவிட்டு நமக்கு நல்வழி காட்டுவோர் சிலரே! நாம் இயேசுவைப் பின்பற்றுவோம். இயேசுவினிடத்தில் நம்மை வழிநடத்துவோரைப் பின்பற்றுவோம். நாம் கட்டவிழ்க்கப்படும் அதேவேளையில், மற்றவர்களைக் கட்டவிழ்க்கும் பணியும் நமது கரங்களில் கொடுக்கப்பட்டிகிறது என்பதை நாம் மறந்துவிடவேண்டாம். நாம் சரியான வழிகாட்டிகளாக இருந்தால்தான், மற்றவர்களைச் சரியாக வழிநடத்தமுடியும்.

“அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள். குருடனுக்குக் குருடன் வழி காட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்” (மத்.15:14).

ஜெபம்: எங்களை விடுவிக்கும் தேவனே, கிறிஸ்துவிடம் வழி நடத்துகிறவர்களை நாங்கள் பின்பற்றவும் மற்றவர்களை கட்டவிழ்க்கின்ற பொறுப்பை தட்டிகழிக்காமல் கட்டப்பட்ட மக்களுக்கு நாங்கள் உதவி செய்தருள கிருபை தாரும். ஆமென்.

சத்தியவசனம்