அன்றும் இன்றும்

தியானம்: 2019 மே 18 சனி | வேத வாசிப்பு: ரோமர் 6:16-23

“இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே” (ரோமர் 6:21).

“தனது முந்திய நிலைமைகளை ஒருவன் நினைத்துப் பார்க்கத் தவறினால் நிச்சயம் அவனுக்குள் பெருமை குடிகொள்ளும்” என்றார் ஒருவர். “முந்தியவைகளை நினைக்கவேண்டாம் என்று சொல்லி, சமுத்திரத்தின் ஆழத்தில் கர்த்தரே நமது பழைய வாழ்வை எறிந்து மறந்துவிட, நாம் ஏன் நினைக்கவேண்டும்” என்றார் அடுத்தவர். இதிலே நீங்கள் யாருடைய கட்சி?

‘முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தீர்கள்’ என பவுல் அடிக்கடி நினைவூட்டுவதை அவரது நிருபங்களில் வாசிக்கிறோம். “நீங்களோ உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு” என்றும், “முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை” என்றும் (1பேதுரு 2:9,10) நமது முன்நிலையையும், இப்போதுள்ள கிருபையையும் பேதுருவும் நினைவூட்டியுள்ளார். “ஆண்டவர் என்னை மீட்டெடுத்த சிறிது காலத்தில், ரோமர் 6ம் அதிகாரத்தை வாசித்துக் கொண்டிருந்தபோது, மெய்யாகவே இந்த வசனம் என்னை எனக்கு வெளிச்சம்போட்டுக் காட்டியது” என ஒருவர் கண்ணீரோடு பகிர்ந்து கொண்டார். “முன்னர் நான் நடந்துகொண்ட விதங்களை, செய்த காரியங்களை, பெற்றோர் உற்றோர் யாரையும் சிந்திக்காமல் என் இச்சைகளை நான் நிறைவேற்றும்படி வெட்கமின்றி எடுத்துக்கொண்ட முயற்சிகளை, அவற்றில் நானே விழுந்து மாண்டு போனதையெல்லாம் இப்போது நினைக்கும்போது எனக்கு வெட்கமும் வேதனையுமாயிருக்கிறது. பெற்றோருக்கு அவமானம் என்றுகூட எண்ணாமல் வாழ்ந்துவிட்டேன். இப்படிப்பட்ட பாழ் குழியிலிருந்தா என் ஆண்டவர் என்னைத் தூக்கியெடுத்தார் என நினைக்கும்போதெல்லாம் என் இருதயம் அவருக்காய் துடிக்கிறது” என்று அவர் தொடர்ந்தபோது அவருடைய கண்களிலிருந்து நன்றிக் கண்ணீர் வழிந்தோடியது.

இன்று நாம் என்ன சொல்லுவோம்? மரணத்திற்கு, அதாவது நித்திய அழிவுக்கு வழிவகுத்திருந்த பாவ வாழ்விலிருந்து நமது அன்பின் தேவன் நம்மைக் கிருபையாய் இரட்சித்து, ஒரு தகப்பன் தன் பிள்ளையைச் சுமந்து வருவதுபோல நம்மை இந்த இடம் மட்டும் கொண்டுவந்தாரே! அவர் நம்மை கண்டெடுத்த நிலைமைகளை, சுமந்து வந்த பாதைகளை ஒருபோதும் மறவாமல் நன்றி பெருக்கெடுக்க அவரது சேவைக்கு நம்மை அர்ப்பணிப்போமாக.

“நான் உன் அருகே கடந்துபோகும்போது, மிதிக்கப்படுவதற்கு ஏதுவாய் நீ உன் இரத்தத்தில் கிடக்கிறதைக் கண்டு, …பிழைத்திரு என்றேன்” (எசேக்.16:6).

ஜெபம்: எங்களை மீட்டுக்கொண்ட ஆண்டவரே, அன்று இன்பமும், இன்று அருவருப்புமாயிருக்கிற யாவையும் விட்டெறிந்துவிட்டு, உமக்கே சாட்சியாய் ஜீவிக்க என்னை அர்ப்பணிக்கிறேன். ஆமென்.

சத்தியவசனம்