ஆத்துமாவின் பெறுமதி

தியானம்: 2019 ஆகஸ்டு 15 வியாழன் | வேத வாசிப்பு: மல்கியா 3:16-18

என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (மல்கியா 3:17).

இன்று நம்முடைய தேசம் 73-வது சுதந்தர தினத்தைக் கொண்டாடிவருகிறது. தேவன் இந்த தேசத்திற்கு தந்த ஜனநாயகத்திற்காகவும் மதசார்ப்பற்ற அரசியல் அமைப்பிற்காகவும் நாம் தேவனை துதிக்க கடமைப்பட்டுள்ளோம். ஆனால், நாம் போற்றி பெருமைப் பட்ட ஜனநாயக அமைப்பிற்கு இன்று நேர்ந்துள்ள ஆபத்தை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். நம் தேசமக்களுக்காகவும் அவர்கள் ஆத்ம மீட்பிற்காகவும் திறப்பின் வாசலில் நின்று மன்றாட வேண்டியது நமது கடமையாகும். சோர்ந்து போகாமல் மன்றாடுவோம். தேவன் நம் தேசத்திலே மாபெரும் எழுப்புதலை தருவார். (ஆ-ர்)

ஒவ்வொரு மனித ஆத்துமாவும் விலைமதிக்க முடியாதவை; முடிவில்லாத, அழிவில்லாத தன்மையுடையவை. ஒரு மனிதன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், அவனைப் படைத்த தேவனுக்குமுன் அவன் பெறுமதிமிக்கவனே! அந்தப் பெறுமதிப்பை ஒரு பொருளினாலோ பணத்தினாலோ தீர்மானிக்கமுடியாது. ஆதலால்தான், ஒருவன் தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் என்ன பயன்? (மத்.16:26) என்று இயேசு கேட்டார். முழு உலகத்தையும்விட நாம் ஒவ்வொருவரும் தேவனுக்கு முன்பாக விலைமதிப்புடையவர்கள். இன்று நம்முடன் இருக்கும் ஒவ்வொருவரையும் பார்க்கும்போது, அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய நித்தியத்தை எங்கே கழிக்கப்போகிறார்கள் என்பதைச் சிந்திக்கிறோமா! ஒன்று, அவர்கள் தங்கள் நித்தியத்தைத் தேவ பிரசன்னத்தில் கழிக்கலாம். அல்லது என்றென்றும் தண்டனை அனுபவிக்கும் அழிவிற்குள்ளாகவும் கடந்து செல்லலாம். இவர்களுடைய ஆத்துமாவைக் குறித்து நாம் பாரப்படவேண்டாமா?

இந்த உலகத்திற்கு கிறிஸ்து வந்ததின் உண்மையான நோக்கம், ஒரு போதகராக இருப்பதற்கோ, ஒரு நல்ல மாதிரியை காண்பிப்பதற்கோ மாத்திரமல்ல; தமது மந்தையின் ஒவ்வொரு ஆடுகளையும் மீட்பதற்காகவே வந்தார். நாம் மரிக்கவேண்டிய இடத்தில் தாம் நின்று, அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக மரணத்தை ஏற்று நம்மை விடுவிக்கவே வந்தார். அவர் சிலுவையில் கொடுத்த விலைக்கிரயம் அளவிட முடியாதது. பிதாவானவர் தமது ஒரே பேறான குமாரனின் மரணத்தினால் நம்மை மீட்டதினால், அவரது அன்பை, உயரம், நீளம், ஆழம், அகலம் என்று யாராலும் அளவிட முடியாது. அது எல்லையற்றது!

நமது அழியாத ஆத்துமாவை, நித்திய அழிவினின்று மீட்பதற்காக ஆண்டவர் அளப்பரிய விலைக்கிரயத்தைச் செலுத்துவாராயின், அந்த அளவற்ற அன்பினை மற்றவர்களுக்கு நாம் அறிவிக்காமல் இருப்பது எப்படி? அந்தகார இருளின் பிடியிலுள்ள மக்களுக்கு மகிமையுள்ள தேவனை பிரதிபலிக்கும் ஒளியின் மக்களாக நற்செய்தியை அறிவிக்கவேண்டிய நாம், சும்மாயிருப்பது எப்படி?

நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம் பெற்றாய். நானும் உன்னைச் சிநேகித்தேன் (ஏசா.43:4).

ஜெபம்: ஆண்டவரே, இன்று சுதந்தர தினத்தைக் கொண்டாடும் என் தேசத்திற்காகவும் தேசமக்களுக்காகவும் மன்றாடுகிறோம். எங்கள் மக்களை மீட்டு, தேசத்திற்கு சேமத்தையும் மெய்யான விடுதலையையும் தந்தருளும். ஆமென்.