வெட்கப்படாதே!

தியானம்: 2019 செப்டம்பர் 12 வியாழன் | வேத வாசிப்பு: ரோமர் 1:13-17

கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன் (ரோமர் 1:16).

பாடசாலை விடுதியில் தங்கியிருந்து படித்ததன் மகளைப் பார்ப்பதற்காக ஒரு அம்மா மிகுந்த தூரத்திலிருந்து உணவு கொண்டு வந்திருந்தார். ஆனால், “இங்கே ஏன் வந்தாய்? தயவுசெய்து விரைவாகப் போய்விடு. எனக்கு வெட்கமாயிருக்கு” என்று அந்த மகள்; தாயை விரட்டியதை என் கண்களாலே கண்டபோது அந்தச் சிறுவயதில் எனக்கு மிகவும் குழப்பமாயிருந்தது. தாயின் ஏழ்மைதான் இதற்குக் காரணம். நம்மிடம் இல்லாதவற்றைக்குறித்து நாம் வெட்கப்படுகிறோம்! அதே சமயம் நம்மிடமுள்ள வெட்கப்படவேண்டிய காரியங்களைக்குறித்து நாம் உணர்வற்று இருக்கிறோம்.

பவுலிடம் பெருமைக்குரிய பல காரியங்கள் இருந்தன. ஆனால் அவை யாவையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, சர்ச்சைக்குரிய, வெட்கத்துக்குரிய ஒருவருக்கு தான் அடிமை என்று வெட்கமின்றி பகிரங்கமாகத் தெரிவித்தார். அதனால் தனக்கு நேரிடக்கூடிய பாதிப்புகள் ஆபத்துக்களை அவர் பொருட்படுத்தவில்லை. ஏனெனில், அவருக்குப் புது வாழ்வு கொடுத்தது கிறிஸ்துவின் சுவிசேஷம். மமதையினால் குருடாகிப்போயிருந்த அவருடைய கண்களைத் திறந்துவிட்டது இந்த சுவிசேஷம். வெட்கப்பட வேண்டியவற்றுக்கு வெட்கப்படாமல் இருந்ததை உணர்த்தியது இந்த சுவிசேஷம். ஆகவே பரிசேயர், வேதபாரகர் ஏற்றுக்கொள்ள வெட்கப்பட்ட இந்த சுவிசேஷத்தைக் கூறி அறிவிக்க பவுல் வெட்கப்பட்டதில்லை. ஏன்? அதுவே இயேசுகிறிஸ்து அருளிய மீட்பின் மெய்யான விசேஷம்.

இன்று நாமோ, கிறிஸ்தவர்கள் என்று சொல்லுவதற்கு வெட்கப்படுவதில்லை. ஆனால் கிறிஸ்துவைப் பிறருக்கு அறிவிக்க வெட்கப்படுகிறோம், ஏன்? சுவிசேஷம் அளித்த மெய்யான விடுதலையை நாம் அனுபவிக்கிறோமே! பின்னர் அதைக் குறித்து பிறருக்குச் சொல்ல என்ன வெட்கம்? வெட்கப்படத் தேவையற்ற காரியங்களுக்கு நாம் வெட்கப்படுகிறோம். நான் அழகில் குறைந்தவள்; நான் அந்தஸ்தில் குறைந்தவன் என்று தேவையற்ற வெட்கங்கள் ஒருபுறம். மறைவான சில பாவங்களை வெட்கமின்றிச் சுமந்துகொண்டு திரிகிறோமே, அது இன்னொரு புறம். இவற்றைச் சரி செய்வதைவிட்டு, கிறிஸ்துவை அறிவிப்பதில் நாம் வெட்கப்படுவது எவ்வளவு வெட்கம்! கிறிஸ்து நம் வாழ்வில் செய்து முடித்த மகத்தான கிரியைகளைச் சிந்தித்தால், வெட்கம் பறந்துபோய்விடும். இதுவரை வெட்கப்பட்டவைகள் வீண் என்பதுவும் தெரியவரும். எனக்கு மேன்மையான சுவிசேஷத்தை அறிவிக்க நான் வெட்கப்படலாமா?

…என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தமது பிதாவின் மகிமை பொருந்தினவராய்ப் பரிசுத்த தூதர்களோடுங்கூட வரும்போது வெட்கப்படுவார்… (மாற்கு 8:38).

ஜெபம்: நல்ல ஆண்டவரே, இந்த நற்செய்தியைப் பிறருக்கு அறிவிக்க முடியாதபடி உள்ள பயத்தையும் வெட்கத்தையும் எங்களை விட்டு எடுத்துப்போடும். ஆமென்.

சத்தியவசனம்