என்றும் பச்சையான ஒலிவமரம்!
தியானம்: 2022 மே 30 திங்கள் | வேத வாசிப்பு: சங்கீதம் 52:1-9

நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவ மரத்தைப்போலிருக்கிறேன், தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன் (சங்கீதம் 52:8).
கல்வி, செல்வம், அந்தஸ்து, குடும்ப கௌரவம் என்று பல வழிகளில் தம்மைக் குறித்துப் பலர் பெருமை பாராட்டுவதுண்டு. சங்கீதம் 52இல், “பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்?” என்று தனக்கெதிராகச் செயற்பட்ட தன் எதிராளியைக் குறித்து தாவீது கூறுவதை வாசிக்கிறோம். இங்கே ஒருவனுக்கு “பொல்லாப்பு செய்வதில் பெருமை”. தாவீதின் நாட்களில் மட்டுமல்ல, இன்றும், தாம் செய்யும் பொல்லாப்புகளில் மகிழ்ந்து களிகூருகிறவர்கள் ஏராளம். இப்படிப்பட்ட, பொல்லாதவர்களின் பொல்லாப்பில் சிக்குண்டு தவிப்பவர்கள்தான் எத்தனை பேர்!
இங்கே தாவீதுக்குப் பொல்லாங்கு செய்தது யார்? பெலிஸ்தனின் கையிலிருந்து இஸ்ரவேலைப் பாதுகாக்க முடியாமல் தவித்த சவுல் ராஜாவே, அந்தப் பெலிஸ்தியனைக் கொன்று வெற்றியை ஏற்படுத்திக்கொடுத்த தாவீதைக் கொன்றுபோட வகை தேடினான். சவுலே தாவீதுக்கு விரோதியானான். அதற்காக, தாவீது, இந்தப் பொல்லாப்பினால் துவண்டு போனாரா? இல்லை. யார் என்ன பொல்லாப்புச் செய்தாலும், தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவ மரத்தைப் போலவே தான் இருப்பதாகத் தைரியமாகக் கூறினார்.
இதற்குக் காரணம் என்ன? எந்தச் சூழ்நிலையிலும் தாவீது தேவனின் கிருபையையே நம்பி வாழ்ந்தார். தேவன் தனக்குப் பக்கத்தில் இருப்பதை நம்பினார் தாவீது. தன்னை தேவனுடைய ஆலயத்தில் என்றும் பச்சையாகக் காட்சி தரும் ஒலிவ மரத்துக்கு ஒப்பிட்டது ஏன்? ஒலிவ மரம் நீண்டகாலம் வாழும் மரங்களுள் மிகவும் முக்கியமான ஒன்று. அது மாத்திரமல்ல, அதிக நீண்டகாலமாக செழிப்பாகவே காட்சிதந்து கனி கொடுக்கும் மரமாக இருக்கிறது. ஆக, தாவீது, துன்மார்க்கத்தில் வாழுகிறவர்களுக்கு வரும் சடுதியான வீழ்ச்சியையும், தம்மை நம்பியிருக்கிறவர்களுக்கு இருக்கும் தேவனுடைய முடிவற்ற நீடித்த நித்திய பாதுகாப்பையும் வேறுபடுத்திக் காட்டுவதை நாம் காண்கிறோம்.
தாவீது மட்டுமல்ல, இன்று நாமும் தேவனின் ஆலயத்தில் என்றும் செழித்து வாழும் பச்சையான ஒலிவ மரத்தைப்போல வாழலாம். தேவ பாதுகாப்பு, கிருபை, தயவு நமக்கு இருப்பதை நாம் விசுவாசித்தால், நமக்குப் பொல்லாப்பு நினைக்கின்ற அல்லது செய்கின்ற எவரைக்குறித்தும் நாம் கலங்கவேண்டிய அவசியமே இல்லை. நமக்குப் பொல்லாப்பு செய்பவர்களுக்குப் பயந்து ஒளியத் தேவையில்லை. ஆனால், தாவீது எப்படி தேவ கிருபையில் நிலைத்து நின்றாரோ, நாமும் அப்படியே தேவசமுகத்தில் வாழவேண்டியது நமது பொறுப்பாகும்.
நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர் (சங்.59:16).
ஜெபம்: அன்பின் தேவனே! எந்தச் சூழ்நிலையிலும் உமது சமுகத்தில், பச்சையான ஒலிவ மரத்தைப்போல உமக்கே சாட்சியாய் ஜீவிக்க உமது கிருபையைத் தந்தருளும். ஆமென்.